சச்சின் இல்லாமல் முதல் முறையாக...

உலக கோப்பை அரங்கில் முதல் முறையாக சச்சின் இல்லாமல் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

உலக கோப்பை(50 ஓவர்) வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதற்கு ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சினின் ஆட்டம் முக்கிய காரணம். 

1992ல் சிட்னியில் நடந்த உலக கோப்பை தொடரில், 19வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக களம் கண்டார். 

இதில் அரை (54*) சதம் விளாசினார். பின், 1996(31, சிட்னி), 1999 (45, மான்செஸ்டர்), 2003 (98, செஞ்சுரியன்), 2011 (85, மொகாலி) என அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.

ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் 5 போட்டிகளில் 313 ரன்கள் குவித்தார். இதன் சராசரி 78.25. 

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் விடைபெற்ற நிலையில், வரும் உலக கோப்பை தொடரில் (பிப்.,14– மார்ச் 29) பங்கேற்க இயலாது. 

இத்தொடரில் முதல் முறையாக, சச்சின் இல்லாமல் இந்திய அணி, பாகிஸ்தானை (பிப்.,15, அடிலெய்டு) எதிர்கொள்ளவுள்ளது. 

இதில் சச்சினின் இடத்தை ரோகித் சர்மா, விராத் கோஹ்லி போன்ற இளம் வீரர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

படுக்கையை நகர்த்திய பேய் - பயந்து ஓடிய பாக்., வீரர்

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சோகைல் தங்கியிருந்த ஓட்டல் அறையின் படுக்கையை பேய் நகர்த்தியதாம். இந்த பயத்தில் அலறி ஓடிய இவர், மானேஜர் அறையில் தஞ்சம் அடைந்தாராம்.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ரிட்ஜஸ் லாடிமிர் ஓட்டலில் வீரர்கள் தங்கியுள்ளனர். இதில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஹாரிஸ் சோகைல், 26, தங்கியிருந்த அறையில், நள்ளிரவில் திடீரென படுக்கை நகர்ந்துள்ளது.

உடனடியாக விழித்து எழுந்த இவருக்கு, அறைக்குள் பேய் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட, பயந்து போய் வெளியேறினார். பக்கத்து அறையில் இருந்த அணி மானேஜர் நவீது அக்ரம் சீமாவிடம் சொல்லி, வேறு அறைக்கு சென்று விட்டார்.

இதுகுறித்து சீமா கூறுகையில்,‘‘ ஹாரிஸ் காய்ச்சலால் அவதிப்பட்டது கூட பயத்திற்கு காரணமாக இருக்கலாம். தனது படுக்கை யாரோ ஒருவரால் தள்ளப்பட்டது என, உறுதியாக நம்புகிறார்,’’ என்றார்.

ஓட்டல் அமைந்துள்ள பகுதியில் 2011ல்  ஏற்பட்ட பூகம்பத்தில் 185 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு  பின் ஓட்டல் புதுப்பிக்கப்பட்ட நிலையில், முதன் முறையாக வீரர் ஒருவர் ‘பேய்’ புகார் கூறியுள்ளார்.

இந்த புகாரை ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.

கிரிக்கெட் அரங்கில் இதுபோல பேய் பீதி ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. 2005ல் இங்கிலாந்தின் லம்லி கேசில் ஓட்டலில் தங்கிய ஷேன் வாட்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பேய் உலாவுவதாக கூறினர்.

கடந்த ஆண்டு ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் லண்டனில் உள்ள லாங்காம் ஓட்டலில், பேய் தொல்லை காரணமாக அறையை மாற்றினர்.

ஐ.பி.எல்., சூதாட்டம் - மவுனம் கலைத்தார் தோனி

ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் என் பெயரையும் இணைத்து வெளியாகும் கற்பனை செய்தியை எப்போதும் தடுக்க முடியாது,’’ என, இந்திய அணி கேப்டன் தோனி கூறினார்.      

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்தது. 

இதில், சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 வீரர்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. 

இதில், சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதே நேரம், சென்னை அல்லது பி.சி.சி.ஐ., தலைவர் பதவி என ஏதாவது ஒன்றில் மட்டுமே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.      

சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா மற்றும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்ய 3 நீதிபதிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல மாதங்களாக, வாய் திறக்காத தோனி, முதல் முறையாக பேசியுள்ளார்.       

இது குறித்து தோனி கூறுகையில்,‘‘ ஐ.பி.எல்., சூதாட்ட சர்ச்சையில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளதாக வந்த கற்பனை செய்தியை எதிர்பார்க்கவில்லை. இதனை ஒருபோதும் தடுக்க முடியாது. இவ்விஷயத்தை கவனமாக கையாள்கிறேன். ஒருவேளை இப்பிரச்னை முற்று பெற்றாலும், ஓரிரு நாட்களில் மற்றொரு கற்பனை செய்தி வெளியாகலாம்,’’ என்றார்.

வேதனையில் சாதனை வீரர்கள்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கான அணியில் யுவராஜ் சிங், பீட்டர்சன், போலார்டு உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது வியப்பான விஷயம். இவர்களை பற்றி  விவரம்:


யுவராஜ் சிங், 33(இந்தியா):

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த ‘ஆல்–ரவுண்டர்’ தான் யுவராஜ். மொத்தம் 293 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 8,329 ரன்கள் குவித்துள்ளார். 

கடந்த 2011 உலக கோப்பை தொடரில் 362 ரன்கள் எடுத்து, 15 விக்கெட் வீழ்த்தி, ‘தொடர் நாயகனாக’ ஜொலித்தார் சமீபத்திய  ரஞ்சி கோப்பை தொடரில் தொடர்ந்து ‘ஹாட்ரிக்’ சதம் விளாசினார். இதேபோல, சேவக், காம்பிருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.


அலெஸ்டர் குக், 30,(இங்கிலாந்து):

ஆன்ட்ரூ ஸ்டிராசிற்குப் பின், இங்கிலாந்து அணியை வழி நடத்த சரியான நபர் என்று கண்டறியப்பட்டவர் அலெஸ்டர் குக். மொத்தம் 92 போட்டிகளில் 3,204 ரன்கள் குவித்துள்ளார். கடைசியில், உலக கோப்பை தொடர் துவங்க இருந்த நேரத்தில், கழற்றி விடப்பட்டார்.


பீட்டர்சன், 34,(இங்கிலாந்து):

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் பீட்டர்சன். 136 போட்டிகளில், 4,440 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்த அதிக ரன்கள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர். இருந்த போதும், ஆஷஸ் தொடர் தோல்வியை காரணம் காட்டி, அணியில் இருந்து நீக்கப்பட்டார் 


போலார்டு, 27, பிராவோ, 31,(வெ,இண்டீஸ்):

 ஒருநாள் அணியில் ‘ரெகுலர்’ வீரர்கள் போலார்டு (91 போட்டி, 2,042 ரன்), டுவைன் பிராவோ (164 போட்டி, 2,968 ரன்). இவர்கள் இல்லாமல் ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குவது கிடையாது. 

இருவருமே சிறந்த ‘ஆல் ரவுண்டர்கள்’. 

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு திரும்பிய விஷயத்தில், இவர்களுக்கு பங்கு இருக்கும் என்று சந்தேகப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு, உலக கோப்பை அணியில் இடம் தராமல் பழி தீர்த்துக் கொண்டது.


லியான், 27

தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ‘நம்பர்–1’ சுழற்பந்து வீச்சாளர் லியான் தான். சமீபத்திய இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் முதலிடம் (23) பெற்றவர்.

இருப்பினும், வேகத்துக்கு சாதகமான ஆடுகளங்களில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் தோகர்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து, லியானை கைவிட்டு விட்டனர் போல. 

இதேபோல, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் (ஆஸி.,), மெக்லாரன் (தென் ஆப்.,), ஜேம்ஸ் நீஷம் (நியூசி.,), உமர் குல் (பாக்.,) என, கடைசி நேரத்தில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ‘ஹீரோக்களின்’ பட்டியல் நீளுகிறது.

நியூசி., ஜோடி உலக சாதனை - இலங்கையை மீண்டும் வென்றது

எலியாட், ரான்கி ஜோடி உலக சாதனை படைக்க, இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்தின் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 4 போட்டிகள் முடிவில், நியூசிலாந்து அணி 2–1 என, முன்னிலையில் இருந்தது.

ஐந்தாவது போட்டி டுனிடினில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு கப்டில், ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பிரண்டன் மெக்கலம் (25), கேப்டன் வில்லியம்சன் (26), ராஸ் டெய்லர் (20) சீரான இடைவெளியில் அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 93 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

பின் இணைந்த ரான்கி, எலியாட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரான்கி, 74வது பந்தில், தனது முதல் சர்வதேச சதம் கடந்தார். 


உலக சாதனை:

இவருக்கு நல்ல ‘கம்பெனி’ கொடுத்த எலியாட், தன் பங்கிற்கு 2வது சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்தது. 6வது விக்கெட்டுக்கு 30 ஓவர்களில் 267 ரன்கள் சேர்த்த ரான்கி, எலியாட் ஜோடி, புதிய உலக சாதனை படைத்தது.


இலங்கை தோல்வி:

கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு திரிமான்னே (45), ஜெயவர்தனா (30), மெண்டிஸ் (18) சற்று ஆறுதல் தந்தனர். தில்ஷன் ஒருநாள் அரங்கில் 21 வது சதம் அடித்தார்.

இருப்பினும், இலங்கை அணி 43.4 ஓவரில், 252 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 3–1 என, முன்னிலை பெற்றது.