தோனி, ரெய்னாவிடம் விசாரணை - விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல்

ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து முத்கல் தலைமையிலான குழு, கேப்டன் தோனி, இவரது நண்பர் அருண் பாண்டே மற்றும் ரெய்னாவிடம் விசாரணை நடத்தியது. இந்த வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆறாவது ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு தலைமையிலான குழு நேரடியாக விசாரிக்கிறது. 

இதன் முதற்கட்ட அறிக்கையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 

இந்த வார கடைசிக்குள்  (நவ., 2) முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்பிக்க வேண்டும். இதனால், விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 


எப்போது நடந்தது:

கடந்த 11ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க, இந்திய அணி டில்லி சென்றது.

அப்போது, தங்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக இருக்கும் தோனி, ரெய்னா மற்றும் இரு வீரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் தோனியிடம் மட்டும் நான்கு மணி நேரம் விசாரணை நடந்ததாம். அடுத்து ரெய்னா மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டுள்ளார்.

ஆறாவது இடத்தில் இந்தியா - டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவு

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் அணி 5வது இடத்துக்கு முன்னேறியது.      

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்காக தரவரிசைப் பட்டியல் (‘ரேங்க்’) வெளியிடப்பட்டது.             

இதில் இந்திய அணி 96 புள்ளியுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 2011ல் ‘நம்பர்–1’ இடத்தில் இருந்த இந்திய அணி, இதன் பின் தொடர்ச்சியாக 12 டெஸ்டில் தோற்க, தரவரிசையில் அடுத்தடுத்து சரிவைக் கண்டது. இதன் பின் தொடர்ந்து வீழ்ச்சி கண்ட இந்திய அணி, தற்போது மிக மோசமான இடத்தை அடைந்துள்ளது.          
   
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி (99 புள்ளி), 5வது இடத்துக்கு முன்னேறியது.     
        
பறிபோன வாய்ப்பு: முதல் டெஸ்ட் தோல்வியால், தற்போது இரண்டாவது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய (123) அணி, தென் ஆப்ரிக்காவை (124) பின்தள்ளி, ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறலாம் என்ற கனவு தகர்ந்தது.    
   
அடுத்து இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றாலும் (121), தோல்வியடைந்தாலும் (117) என, தற்போதுள்ள இரண்டாவது இடத்துக்கு பாதிப்பு இல்லை.       

பாக்., முன்னேற்றம்: அதேநேரம், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை 2–0 என, கைப்பற்றினால், 105 புள்ளிகளுடன், இங்கிலாந்து (104), இலங்கை (101) அணிகளை பின்தள்ளி மூன்றாவது இடத்தை பிடிக்கலாம்.      

ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான தொடரை (1–0) என, வென்றால், பாகிஸ்தான் அணி 103 புள்ளியுடன், 4வது இடம் பெறும்.

முறைகேடு செய்ததா கபில் நிறுவனம்?

மைதானத்தில் விளக்கு பொருத்தியதில் நடந்த முறைகேடு குறித்து, கபில்தேவ் நிறுவனம் மீது அரசு விசாரணை நடத்த வேண்டும் என, கோவா கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ.,) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், 55. கடந்த 1983ல் உலக கோப்பை வென்று தந்தார். 

இவர், ‘தேவ் முஸ்கோ லைட்டிங்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் சார்பில் கோவா கிரிக்கெட் மைதானத்தில், ஒளி விளக்கு பொருத்தும் பணி நடந்தது.

இதில் முறைகேடு நடந்திருப்பதாக ஜி.சி.ஏ., தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜி.சி.ஏ., துணைத்தலைவர் ஷேகர் சால்கர் கூறியது:

கபில்தேவின் நிறுவனம் நொய்டாவில் உள்ளது.  இது எப்படி ஜி.சி.ஏ., பட்டியலில் வந்தது. இவரது நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவது குறித்து நிர்வாகக்குழுவில் அனுமதி எதுவும் வழங்கவில்லை. இது எப்படி தரப்பட்டது என்றே  தெரியவில்லை.

சில ஆண்டுக்கு முன், ரூ. 4 கோடிக்கும் அதிகமான செலவில், விளக்குகள் பொருத்தியுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு இதை விட குறைந்த செலவில், மற்றொரு மைதானத்துக்கு கோவா அரசு சார்பில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதனால், ஜி.சி.ஏ.,யுடன், கபில்தேவ் நிறுவனத்துக்கு உள்ள தொடர்பு குறித்து, கோவா அரசு விசாரிக்க வேண்டும். இவ்வாறு ஷேகர் சால்கர் கூறினார். 


காரணம் என்ன:

கோவா கிரிக்கெட் சங்கம் தற்போது, தலைவர் வின்டோ பத்கே, துணைத்தலைவர் ஷேகர் சால்கர் தலைமையில் இரு பிரிவுகளாக செயல்படுகிறது. 

வின்டோ முறைகேடுகளில் ஈடுபடுவதாக ஷேகர் சால்கர் குற்றம் சுமத்தினார். இதுகுறித்து ஏற்கனவே கோவா அரசு விசாரிக்கிறது. இந்நிலையில் தான் கபில்தேவ் நிறுவனத்தின் மீது புகார் தரப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் பிளிண்டாப்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட, முன்னாள் இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பிளிண்டாப், பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ ஆன்ட்ரூ பிளிண்டாப், 36. இதுவரை 79 டெஸ்ட் (3845 ரன்கள், 226 விக்.,), 141 ஒருநாள் (3394 ரன்கள், 169 விக்.,), 7 சர்வதேச ‘டுவென்டி–20’ (76 ரன், 5 விக்.,) போட்டிகளில் விளையாடிய இவர், கடந்த 2009ல் ஓய்வை அறிவித்தார். 

தற்போது இவர், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட, பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள இத்தொடரில் இவர் விளையாட உள்ளார். 

இதுகுறித்து பிரிஸ்பேன் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறுகையில், ‘‘சிறந்த அனுபவ வீரரான பிளிண்டாப்பின் வருகையால் பிரிஸ்பேன் அணியின் பேட்டிங், பவுலிங் பலம் அதிகரித்துள்ளது. 

இது, பிரிஸ்பேன் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும். இவர், அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுப்பார் என நம்புகிறேன்,’’ என்றார்.

இந்திய இளம் வீரர் இரட்டை சதம்

ரயில்வே அணிக்கு எதிரான 19வயது கிரிக்கெட் 50 ஓவர் போட்டியில், ராஜஸ்தானின் ஆதித்யா கார்வல், 263 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இளம் வீரர்கள் (19 வயது) பங்கேற்கும், வினோ மன்கட் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன், மத்திய மண்டலத்தை சேர்ந்த ராஜஸ்தான், ரயில்வே அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆதித்யா கார்வல், 151 பந்துகளில், 18 சிக்சர், 22 பவுண்டரி உட்பட, மொத்தம் 263 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 50 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது.

பின் களமிறங்கிய ரயில்வே அணி, 42.2 ஓவரில் 147 ரன்னுக்கு சுருண்டு, 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஸ்தான் வீரர் ஷுபம் சர்மா, 5 விக்கெட் வீழ்த்தினார்.