இரண்டாவது ஒருநாள் போட்டி - இந்திய அணி அசத்தல் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்த, 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட 72 நாட்கள் தொடரில் பங்கேற்கிறது. 

முதலில் நடந்த ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ம.பி.,யின் இந்துாரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது. 

இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, அஷ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஹர்பஜன் சிங், அக்சர் படேல், மோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ரபாடா ‘வேகத்தில்’ ரோகித் சர்மா (1) போல்டானார். அடுத்து வந்த அஜின்கியா ரகானே, ஸ்டைன் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார்.  ஷிகர் தவான் (23) நிலைக்கவில்லை. 

விராத் கோஹ்லி (12) ‘ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய ரகானே (51) அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ரெய்னா ‘டக்–அவுட்’ ஆனார். அக்சர் படேல் (13), புவனேஷ்வர் குமார் (14) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய தோனி அரைசதம் கடந்தார். ஹர்பஜன் சிங் (22) ஆறுதல் தந்தார். உமேஷ் யாதவ் (4) ஏமாற்றினார்.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி (92), மோகித் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் 3, மார்னே மார்கல், இம்ரான் தாகிர் தலா 2, ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (17) ஏமாற்றினார். குயின்டன் டி காக் (34), டுமினி (36) ஆறுதல் அளித்தனர். பொறுப்பாக ஆடிய டுபிளசி (51) அரைசதம் கடந்தார். கேப்டன் டிவிலியர்ஸ் (19) சோபிக்கவில்லை. டேவிட் மில்லர் (0) சொதப்பினார். ஸ்டைன் (13) நிலைக்கவில்லை. 

கடைசியில் இம்ரான் (9), மார்கல் (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 43.4 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 22 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து ஒரு நாள் தொடர் 1–1 என, சமன் ஆனது.

சாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்

களத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா. இவரது ஆதங்கம் நியாயமானது தான். சொந்த மண்ணில் சென்னை வீழ்ந்ததை யாராலும் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.                  
சென்னையில், இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் (ஐ.எஸ்.எல்.) முதல் போட்டி நேற்று நடந்தது. இதில், சென்னை அணி, கோல்கட்டாவிடம் 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. 

சென்னை வசம் 53 சதவீதம் பந்து இருந்த போதும், ‘பினிஷிங்’ இல்லாததால் வெற்றி நழுவியது. இப்போட்டியின் சென்னை அணியின் அன்னிய வீரர்களை காட்டிலும் இந்திய நட்சத்திரங்களான ஹர்மன்ஜோத் கப்ரா, ரால்டே, ஜேஜே அடங்கிய மூவர் கூட்டணி தான் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது.                   
‘இத்தாலி அணியில் விளையாடக்கூடிய திறமை கப்ராவுக்கு உள்ளது’, என, சென்னை அணியின் பயிற்சியாளர் மெடாரசி ஒரு முறை கூறினார். இதை நிரூபிக்கும் வகையில் கப்ராவின் ஆட்டம் இருந்தது. 

மத்திய களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். கோல்கட்டாவின் நட்சத்திர வீரரான போர்ஜா பெர்னாண்டசிற்கு கடும் சவால் கொடுத்தார். போட்டி முடிந்ததும் தனது ஆட்டம் குறித்து கப்ரா கூறுகையில்,‘‘அணி தோற்ற நிலையில், நான் சிறப்பாக விளையாடியதில் பலன் இல்லை,’’என்றார்.                  
மற்றொரு வீரரான ரால்டேவும் பம்பரமாக சுழன்று ஆடினார். பந்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதில் வல்லவராக இருந்தார்.          
        
மிசோரமை சேர்ந்த ஜேஜே அற்புதமாக கோல் அடித்து, சென்னை ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். ‘அடுத்த பூட்டியா’ என வர்ணிக்கப்படும் இவர், பல முறை கோல் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தார். 

இவர் கூறுகையில்,‘‘அரங்கில் திரண்டிருந்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி. அணி தோல்வி அடைந்ததால், இவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை அணியின் ‘லெவனில்’ வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். கோல் அடித்த போதும், மகிழ்ச்சி கிடைக்கவில்லை,’’என்றார்.                  
வரும் போட்டிகளில் ஜேஜே, கப்ரா, ரால்டே அடங்கிய மூவர் அணி, இன்னும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் சென்னை அணி, வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.

கிரிக்கெட் மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல்

ஆப்கனில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் மரணம் அடைந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஆப்கனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது பக்டிக்கா பகுதி. பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதியான இங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது வெடி குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்து பார்வையாளர்கள் இருந்த பகுதியின் மீது மோதியது.

இந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என. தலிபான் அமைப்பினர் மறுத்தனர். 

முதலில் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகின. பின் தான் கிரிக்கெட் மைதானம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,‘ கிரிக்கெட் போட்டியை பார்வையிட வந்த உள்ளூர் அரசு நிர்வாகிகளை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம்,’ என, தெரிவித்தது. 

இரண்டாவது முறை:

கடந்த 2001ல் ஆப்கனில் அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாட்டு படைகள் இணைந்து தலிபான் ஆட்சியை அகற்றின. கடந்த ஆண்டு இப்படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இதன் பின் ஆப்கன் அரசு தங்களிடம் உள்ள சிறிய அளவிலான பாதுகாப்பு வீரர்களை கொண்டு, தலிபான் பயங்கரவாத அமைப்பை எதிர்த்து வருகின்றது. 

கடந்த ஆண்டு வாலிபால் போட்டியின் போதும் இதேபோன்று நடந்த தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

ஜென்டில்மேன் ஆட்டமா கிரிக்கெட்?

கிரிக்கெட்டை ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு என அழைப்பார்கள். ஆனால், களத்தில் வீரர்களின் செயல்பாடு மோசமாகவே உள்ளது.

* 1981ல் பெர்த்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, பாகிஸ்தானின் ஜாவித் மியாண்தத்தை உதைத்ததாக கூறப்பட்டது. பதிலுக்கு மியாண்தத், பேட்டை உயர்த்திக் கொண்டு வர ‘டென்ஷன்’ ஏற்பட்டது.

* 1992, உலக கோப்பை தொடரில் இந்தியாவின் கிரண் மோரே, மியாண்தத் மோதல், 1996, உலக கோப்பை தொடரில் அமிர் சோகைல், பிரசாத் உரசல், 2008ல் நடந்த சிட்னி டெஸ்டில் ஹர்பஜன்–சைமண்ட்ஸ் சர்ச்சை, 2010ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் கம்ரான் அக்மல், காம்பிர் முறைத்துக் கொண்டது என ஏராளமான சம்பவங்களை குறிப்பிடலாம்.

முதல் வீரர்:

ஆனாலும் பெர்முடா சம்பவம் தான் மிக மோசமானது. 

இங்கு,  குத்துச்சண்டை, கிக் பாக்சிங், மல்யுத்தம் போல வீரர்கள் மோதிக் கொண்டனர். களத்தில் எதிரணி வீரருடன் மோதலில் ஈடுபட்டு, வாழ்நாள் தடை பெறும் முதல் வீரரானார் ஜேசன் ஆண்டர்சன். 

ரெய்னா சதம் - தொடரை வென்றது இந்தியா ‘ஏ’

வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3வது ஒரு நாள் போட்டியில் ரெய்னா சதம் அடிக்க, இந்திய ‘ஏ’ அணி ‘டக்வொர்த்– லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது. 

இதன் மூலம் தொடரை 2–1 என கைப்பற்றியது.
இந்தியா ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதின. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலை வகித்தது. 

இரு அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

ரெய்னா சதம்:

இந்திய ‘ஏ’ அணிக்கு உன்முக்த் 41 ரன்கள் எடுத்தார். இதன் பின் இணைந்த சாம்சன் (90), ரெய்னா (104) ஜோடி அசத்தியது. கேதர் ஜாதவ், குர்கீரத் சிங் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில், இந்திய ஏ அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. 

இதன் பின் வங்கதேச ‘ஏ’ அணி களமிறங்கியது. மழை குறுக்கிட 46 ஓவரில் 297 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. சவுமியா சர்கார் (1), அனாமுல் (1) சொதப்பினர். கேப்டன் மோமினுல் (37) நிலைக்கவில்லை. 

நாசிர் ஹொசைன் 22 ரன்கள் எடுத்தார். வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

‘டக்வொர்த்–லீவிஸ்’ முறைப்படி வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 217 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இலக்கை எட்டவில்லை. இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தொடரை இந்திய அணி 2–1 என கைப்பற்றியது.