முதல் டெஸ்டில் களமிறங்குவாரா தோனி?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்டில், தோனி  பங்கேற்க வாய்ப்புள்ளது,’’ என, ஷிகர் தவான் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 9ம் தேதி அடிலெய்டில் துவங்குகிறது.

கைவிரல் காயத்தில் இருந்து மீண்ட தோனி, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார். இருப்பினும்,  இவர் முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் கூறியது:

தோனி, கோஹ்லி இருவரும் களத்தில் தீவிரமாக செயல்படக் கூடியவர்கள் தான். இவர்கள்  தலைமையில் விளையாடுவது நன்றாக இருக்கும். அதேநேரம், தோனி தற்போது களமிறங்கும்  நிலையில், டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க, கோஹ்லி இன்னும் சற்று காலம் காத்திருக்க  வேண்டும்.

வரும் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஜான்சன், பெரும் சவாலாக இருப்பார். உலகின்  சிறந்த பவுலர்களில் ஒருவரான இவர், சரியாக வேகத்தில் துல்லியமாக வீசுவார்.

இருப்பினும், இந்திய மண்ணில் ஐ.பி.எல்., மற்றும் பல்வேறு சர்வதேச தொடரில் ஜான்சன் பவுலிங்கை  எதிர்கொண்டுள்ளேன். இப்போது தான் முதன் முறையாக இங்கு சந்திக்கவுள்ளேன். இதில் சிறப்பாக  விளையாட முடியும் என்று நம்புகிறேன்.

தவிர, துவக்க வீரராக இருப்பவர், போராட்ட குணத்தை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். இது  ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்ல, பொதுவாக கிரிக்கெட்டில் அப்படித் தான் இருக்க வேண்டும்.  ஏனெனில், இது ஒட்டுமொத்த அணிக்கும் நன்மையாக அமையும்.

ஆஸ்திரேலிய உலகின் சிறந்த டெஸ்ட் அணி. இவர்களுக்கு எதிராக அதிக ரன்கள் எடுப்பது  எப்போதும் மகிழ்ச்சி தான். இதனால், வரும் டெஸ்ட் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி  உள்ளோம்.

எனது பேட்டிங் சொதப்பல்களில் இருந்து நிறைய கற்றுள்ளேன். இது தான் என்னை சிறந்த வீரராக  மாற்றியுள்ளது. தொடர்ந்து எனது பேட்டிங் ‘ஸ்டைலில்’ மாற்றம் செய்துள்ளேன்.

இந்திய ‘ஏ’ அணிக்காகவும், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான தொடருக்காகவும் என, பல  முறை இங்கு வந்துள்ளேன். இந்திய அணிக்காக விளையாடவுள்ளது இது தான் முதன் முறை.

இவ்வாறு ஷிகர் தவான் கூறினார்.

பயிற்சியில் சேவக், காம்பிர்

உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இடம்பெறாத சோகத்தை சேவக், காம்பிர் வெளிகாட்டவில்லை. ரஞ்சி கோப்பை டிராபி தொடரில் சாதிக்க தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

வரும் 2015ல் (பிப்., 14 – மார்ச் 29) 11வது உலக கோப்பை தொடர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ளது. இதற்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டது. 

இதில் ‘சீனியர்’ வீரர்களான சேவக், காம்பிர், யுவராஜ் உள்ளிட்ட 5 நபர்கள் இடம்பெறவில்லை. இதனை கண்டுகொள்ளாத இவர்கள் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டனர்.

சவுராஷ்டிரா அணிக்கு எதிராக நாளை துவங்கவுள்ள ரஞ்சி டிராபி தொடரில் டில்லி அணி சார்பில் சாதிக்க ரோஸ்னாரா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். 

சக வீரர்கள் அனைவரும் வழக்கமான வெள்ளை நிறத்திலான உடையணிந்து வலைபயிற்சியில் பங்கேற்றனர். ஆனால், இந்த இருவர் மட்டும் வண்ண ஆடையில் இருந்தனர். 

தவிர, ‘பீல்டிங்கிற்கான’ பயிற்சியிலும் சேவக் ஈடுபட்டார். துவக்க வீரரான இவர், எதிர் வரும் போட்டிகளில் ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்க வாய்ப்பு அதிகம்.

கேப்டன் காம்பிர் கூறுகையில்,‘‘ ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போது, சிறப்பான ‘டிரசிங் ரூம்’ முக்கியம். அணியின் வெற்றிக்கும் இது வழிவகுக்கும். 

உலக கோப்பை உத்தேச அணி குறித்து காம்பிர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சேவக், காம்பிர், யுவராஜ் இனி அவ்ளோதானா?

உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் சேவக், காம்பிர், யுவராஜ் சிங் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெறாதது, இவர்களது கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

கடந்த 2011 உலக கோப்பை தொடர் துவக்க போட்டியில், சேவக் 175 ரன்கள் (எதிர்–வங்கதேசம்) எடுத்தார். யுவராஜ் தொடர் நாயகன் (362 ரன், 15 விக்.,) ஆனார். ஜாகிர் கான் 21 விக்கெட் வீழ்த்தினார். இலங்கைக்கு எதிரான பைனலில் காம்பிர் 97 ரன்கள் எடுத்தார்.

தற்போது இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், கடந்த இரு ஆண்டுகளாக காம்பிர், சேவக்கின் உள்ளூர் சராசரி 20 ரன்கள் தான். ஒவ்வொரு 6 போட்டிக்கும் ஒரு முறை தான் அரை சதம் கூட அடிக்கின்றனர்.

விஜய் ஹசாரே தொடரில், யுவராஜ் (5 போட்டி, 168 ரன்) சொதப்பினார். 6 போட்டியில் ஹர்பஜன் சிங் 7 விக்கெட் தான் வீழ்த்தினார். ஜாகிர் கானை பொறுத்தவரையில் கடந்த மே மாதத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடவே இல்லை.


வாய்ப்பு குறைவு:

இருப்பினும், உத்தேச அணியில் இருந்து, 2015, ஜன., 7ம் தேதிக்குள் 15 பேர் தேர்வு செய்யப்படுவர். இதில் சேவக் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெறலாம் என்றாலும், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான்.


காரணம் என்ன:

ஏனெனில், சேவக், 36, காம்பிர், 33, இருவரும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று ஒரு ஆண்டு ஆகிறது. ஜாகிர் கான், 36, கடந்த 27 மாதங்களாக அணியில் இல்லை. 

ஹர்பஜன் சிங், 34, இந்திய ஒரு நாள் அணியில் விளையாடி 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

ஹியுஸ் இறுதிச் சடங்கில் கோஹ்லி பங்கேற்பு

மறைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுசின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் கேப்டன் விராத் கோஹ்லி, இயக்குனர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.      

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன், இந்திய அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் (இரண்டு நாள்) பங்கேற்க இருந்தது. முதல் பயிற்சி போட்டி ‘டிரா’வில் முடிந்தது.                 
                   
உள்ளூர் போட்டியில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் இரண்டாவது பயிற்சி போட்டி ரத்து செய்யப்பட்டது. 

தவிர வரும் டிச., 4ல் பிரிஸ்பேனில் துவங்க இருந்த முதல் டெஸ்ட் போட்டியும் தேதி குறுப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.      

இந்நிலையில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த மூன்று நாட்களாக அடிலெய்டில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஹியுஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். 

தவிர நேற்று முன்தினம் கோஹ்லி, தனது பேட் மற்றும் தொப்பியை அடிலெய்டு ஓவல் மைதானத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த ஹியுசுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் வைத்தார். இன்று இந்திய வீரர்கள் அனைவரும் பயணத்திட்டத்தின் படி பிரிஸ்பேன் செல்கின்றனர்.     

ஹியுசின் இறுதிச் சடங்கு வரும் டிச., 3ல் அவரது சொந்த ஊரான மேக்ஸ்விலியில் நடக்கவுள்ளது. இதில், இந்தியா சார்பில் கேப்டன் விராத் கோஹ்லி, இயக்குனர் ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இந்திய அணியின் மானேஜர் அர்ஷாத் அயுப் பங்கேற்க உள்ளனர். 

இவர்களுடன் மூன்று அல்லது நான்கு இந்திய வீரர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு, பிரிஸ்பேனில் இன்று முடிவு செய்யப்படும்.

சென்னை அணியை நீக்கலாம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி

பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். 

அணியின் உரிமையாளர்கள்  விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம் பெற்றவர்கள் பி.சி.சி.ஐ., தேர்தலில் இருந்து விலகி இருக்க வேண்டும்,’ என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராகும் சீனிவாசனின் கனவு தகர்ந்தது.                 
              
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) நடந்த ‘ஸ்பாட் பிக்சிங்’ எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் குழு, தனது 35 பக்க இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.      
                                                                               
இதில் குற்றம் சுமத்தப்பட்ட 13 பேரில், வீரர்களை தவிர்த்து 4 பேரின் செயல்பாடு குறித்த விவரத்தை மட்டும் கோர்ட் வெளியிட்டது. இதன் மீதான விசாரணை தற்போது நடக்கிறது. இதில், பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன் மீது கடுமையான கருத்துக்களை, கோர்ட் தெரிவித்தது.                               
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கலிபுல்லா ஆகியோர் அடங்கிய ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் தான் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் என முத்கல் குழு அறிக்கையில் குறிப்பிட்டதை ஏற்கிறோம்,’ என, பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.        
                                         
இதுகுறித்து ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ கூறியது:     
                         
பி.சி.சி.ஐ., விதிமுறைப்படி, சென்னை அணி பல முறைகேடுகளில் ஈடுபட்டது முத்கல் அறிக்கையில் அம்பலமானது. இதுவே போதுமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். சீனிவாசனுக்கு முக்கியமானது அவரது தலைவர் பதவியா அல்லது சென்னை அணியா? 

இவர், ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருப்பது தெளிவாகிறது. சென்னை அணியை வாங்க ரூ. 400 கோடி முதலீடு செய்வது என்ற முடிவை எடுத்தது யார்?, சென்னை அணி மற்றும் சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் இயக்குனர்கள் தொடர்பான விவரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். 

குருநாத்திற்கு தொடர்பு இல்லை என்றால், அணியின் உரிமையாளர் யார்? வீரர்களை தேர்வு செய்தது கம்பெனியா? அணியை கட்டுப்படுத்தியது யார் என்பது போன்ற விவரங்களை அறிய விரும்புகிறோம். திட்டமிட்டபடி வரும் டிச.17ல் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பொதுக்குழுவை நடத்தலாம். 

புதிதாத தேர்தல் நடத்தி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யலாம். இதில், முக்கல் குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் இடம் பெறக் கூடாது.        
                      
இவ்வாறு ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ தெரிவித்தது.     
                         
இவ்வழக்கின் அடுத்தகட்ட  விசாரணை வரும் டிச.1ல் நடக்கும்.                              

சென்னைக்கு ஆபத்து: 

ஐ.பி.எல்., தொடர் விதிமுறைப்படி, அணி உரிமையாளர்கள் ‘பெட்டிங்’, ‘பிக்சிங்’ செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. இதை மீறும் பட்சத்தில் அந்த அணி தொடரில் இருந்து நீக்கப்படும். 

முத்கல் அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் ‘பெட்டிங்கில்’ ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் என, பி.சி.சி.ஐ., தற்போது கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளது. தையடுத்து, சுப்ரீம் கோர்ட் கருத்துப்படி  சென்னை அணி, ஐ.பி.எல்., தொடரில் இருந்து விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முத்கல் அறிக்கையில் சீனிவாசன் பெயரும் இடம் பெற்றிருப்பதால், அவர் மீண்டும் பி.சி.சி.ஐ., தேர்தலில் போட்டியிட முடியாது. மொத்தத்தில் சீனிவாசனுக்கு இரட்டை ‘அடி’ விழுந்துள்ளது.