இந்திய அணி அசத்தல் துவக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியில், உத்தப்பா, ரகானேவின் அரைசதம் கைகொடுக்க,  7 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது.   
   
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் பர்வேஸ் ரசூல், அக்சர் படேல் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.                 


முஷ்பிகுர் அபாரம்: 

வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0), மோமினுல் ஹேக் (6) ஏமாற்றினர். மற்றொரு துவக்க வீரர் அனாமுல் ஹேக் (44) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (59)அரைசதம் அடித்தார். 


சாகிப் அரைசதம்: 

‘மிடில்–ஆர்டரில்’ வந்த சாகிப் அல் ஹசன் (52), தன்பங்கிற்கு அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின் களமிறங்கிய மகமதுல்லா (41), நசிர் ஹொசைன் (22) ஓரளவு கைகொடுத்தனர். ஜியாவுர் ரஹ்மான் (2), மொர்டசா (18) நிலைக்கவில்லை.        
          
வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. அப்துர் ரசாக் (16), அல்–அமின் ஹொசைன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, அக்சர் படேல், பர்வேஸ் ரசூல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.             


சூப்பர் துவக்கம்: 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா, அஜின்கியா ரகானே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய உத்தப்பா, ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த போது உத்தப்பா (50) அவுட்டானார்.     


மழை குறுக்கீடு: 

இந்திய அணி 16.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், இரண்டு மணி நேரத்துக்கு மேல், மீண்டும் போட்டி துவங்கியது. இந்திய அணியின் வெற்றிக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 26 ஓவரில் 150 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.    
   
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு புஜாரா (0) ஏமாற்றினார். மறுமுனையில் அசத்திய ரகானே, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரெய்னா, மகமதுல்லாவில் 25வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.      

இந்திய அணி 24.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (15), அம்பதி ராயுடு (16) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.      

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி மிர்புரில் நாளை (ஜூன் 17) நடக்கிறது.

அஷ்வின் 8 வது இடம்

ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்தியாவின் அஷ்வின் 8வது இடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது. 

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் அஷ்வின் 8வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வேகத்தில் அசத்திய நியூசிலாந்தின் டிம் சவுத்தி, 8வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். 

வெஸ்ட் இண்டீசின் கீமர்  ரோச் 15வது, பென் 35வது, ஜெரோம் டெய்லர் 75வது இடங்களை பிடித்தனர்.

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் புஜாரா 7வது இடத்துக்கு முன்னேறினார். விராத் கோஹ்லி 10வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் உள்ளார்.

அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த நான்கு இடங்களில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா அணிகள் உள்ளன.

ஆஸ்கார் விருது விழாவை மிஞ்சிய உலக கோப்பை தொடக்க ஆட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை பற்றி ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் 5.8 கோடி கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. 

இது இந்த ஆண்டில் நடந்த ஆஸ்கார் விருது குறித்து பேஸ்புக்கில் கருத்துகளை பரிமாறியவர்களின் எண்ணிக்கையை விட 5 மடங்கு அதிகமாகும். பிரேசில் ‘ஹீரோ’ நெய்மார் அடித்த முதல் கோல் பற்றி தான் பெரும்பாலானோர் வர்ணித்துள்ளனர். 

இதே போல் சர்ச்சைக்கு மத்தியில் வழங்கப்பட்ட ‘பெனால்டி’ குறித்தும் அதிகமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.6 கோடி கருத்துகள் பிரேசிலில் இருந்து பதிவு செய்யப்பட்டவை. அடுத்த இடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளன.

திவாரி, உத்தப்பா புதிய கேப்டன் - இளம் இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு மனோஜ் திவாரி (நான்கு நாள் போட்டி), ராபின் உத்தப்பா (ஒருநாள் போட்டி) ஆகியோர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய ‘ஏ’ அணி, நான்கு நாட்கள் விளையாடும் இரண்டு போட்டிகள் மற்றும் நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

நான்கு நாட்கள் நடக்கும் இரண்டு போட்டிகள் (ஜூலை 6–9, 13–16) குயீன்ஸ்லாந்தில் நடக்கிறது. நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 20 முதல் ஆக., 2 வரை நடக்கிறது. இதில் இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென் ஆப்ரிக்கா ‘ஏ’ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் பங்கேற்கின்றன.

இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் தேர்வு மும்பையில் நேற்று நடந்தது. இதில் நான்கு நாட்கள் நடக்கும் இரண்டு போட்டிகளுக்கு மனோஜ் திவாரி கேப்டனாக நியமிக்கப்பட்டார். நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடருக்கு ராபின் உத்தப்பா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ராகுல், கருண் நாயர், அனுரீத் சிங், ரஜாத் பாலிவால், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா ஆகியோருக்கு நான்கு நாட்கள் நடக்கும் போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். ரஞ்சி சீசனில் 1223 ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ், நான்கு நாட்கள் நடக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது ஆச்சர்யம். இவர், ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டும் இடம் பிடித்தார்.

உன்முக்த் சந்த், அக்சர் படேல், மனன் வோரா, ரிஷி தவான், மனிஷ் பாண்டே ஆகியோருக்கு ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டும் இடம் கிடைத்தது.


நான்கு நாட்கள் அணி: 

மனோஜ் திவாரி (கேப்டன்), ராகுல், ஜிவான்ஜோத் சிங், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, கருண் நாயர், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), பிரக்யான் ஓஜா, உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, அனுரீத் சிங், ரஜத் பாலிவால், அமித் மிஸ்ரா, சந்தீப் சர்மா, ஜாஸ்பிரீத் பம்ரா, பாபா அபராஜித்.


ஒருநாள் அணி: 

ராபின் உத்தப்பா (கேப்டன்), உன்முக்த் சந்த், மனிஷ் பாண்டே, அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், சஞ்சு சாம்சன், பர்வேஸ் ரசூல், அக்சர் படேல், தவால் குல்கர்னி, ரிஷி தவான், மோகித் சர்மா, கரண் சர்மா, ராகுல் சுக்லா, மனன் வோரா, ஜெயதேவ் உனத்கத்.

வங்காளதேசத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

வங்காளதேசத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சில்ஹெத் ஸ்டேடியத்தின் சுவர் இடிந்து விழுந்தது. 

ஸ்டேடியத்தின் சுற்றுச்சுவர் ஓரத்தில் தகர கொட்டகை அமைத்து சிலர் தங்கியிருந்தனர். மழையில் நனைத்து ஊறிப்போயிருந்த அந்த சுவர் நேற்று அதிகாலையில் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. 

அப்போது உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் ஆவர்.

வங்காளதேசத்தில் சில்ஹெத் உள்ளிட்ட 3 ஸ்டேடியங்களில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்றன. இதற்காக சில்ஹெத் ஸ்டேடியத்தில் சீரமைக்கும் பணிகள் தாமதமானது. 

ஐசிசி ஆய்வாளர்கள் அங்கு பலமுறை ஆய்வு செய்ததையடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டு உலகக்கோப்பை போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.