விராத் கோஹ்லி நம்பர் 1

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 5வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 881 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

தென் ஆப்ரிக்காவின் டவிலியர்ஸ் (872 புள்ளி) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். 

இந்திய கேப்டன் தோனி (783 புள்ளி) 6வது இடத்திலும், ஷிகர் தவான் (723 புள்ளி) 8வது இடத்திலும் உள்ளனர்.

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 676 புள்ளிகளுடன் 5வது இடத்தில் நீடிக்கிறார். 

இவர், ‘ஆல்–ரவுண்டர்’களுக்கான ரேங்கிங்கில் 4வது இடத்தில் உள்ளார். பவுலர்களுக்கான பட்டியலில் மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 14வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. முதலிடத்தில் 115 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

கோஹ்லி, புஜாரா முக்கியப்பங்கு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கோஹ்லி, புஜாரா முக்கியப்பங்கு வகிப்பார்கள்,’’ என, இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் பீட்டர்சன் தெரிவித்தார். 

இந்திய அணி கடந்த 2011ல் இங்கிலாந்து சென்றது. டெஸ்ட் தொடரை 0–4 என இந்தியா மோசமாக பறிகொடுத்தது. இதன் முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 

இந்நிலையில், இந்தியா (ஜூலை 9– செப்.7) மீண்டும் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட், 5 ஒரு நாள், 1 ‘டுவென்டி–20’யில் பங்கேற்கிறது. 

இது குறித்து பீட்டர்சன் கூறியது: இங்கிலாந்து அணி புத்துணர்வுடன் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வியக்கத்தக்க முறையில் உள்ளது. எனவே இவர்கள் மோதவுள்ள தொடர் சிறப்பானது. 

கடந்த முறை டிராவிட் மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். தற்போது, இந்திய அணியில் கோஹ்லி, புஜாரா, முரளி விஜய் உள்ளிட்டோர் ரன் சேர்க்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள். இத்தொடரில் இவர்கள் முக்கியப்பங்கு வகிப்பார்கள். தவிர, இவர்கள் அங்கு ரன் குவிக்காவிட்டால் பிரச்னைதான். 


இங்கிலாந்துக்கு இழப்பு:

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுவான், ஆஷஸ் தொடரின் பாதியில் ஓய்வை அறிவித்தார். இவர் இல்லாதது அணிக்கு பெரும் இழப்புதான். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 2015ல் நடக்கவுள்ள உலக (50 ஓவர்) கோப்பை தொடரில், சாம்பியன் பட்டம் வெல்ல ஒவ்வொரு அணியும் தகுதியானதுதான். 

ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. இவ்வாறு பீட்டர்சன் கூறினார். 

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டி நடக்குமா?

சென்னையில் நடக்கும் ‘பிளே ஆப்’ போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.       

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னையில் மே 18 (சென்னை–பெங்களூரு), மே 22ல் (சென்னை–ஐதராபாத்), இரு லீக் போட்டிகள் நடக்கின்றன. மே 27, 28ல் ‘பிளே ஆப்’ போட்டிகள், அதாவது தகுதிச்சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் என, மொத்தம் இந்த ஆண்டு 4 போட்டிகள் மட்டுமே நடக்கவுள்ளன.   
    
போட்டி நடக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக கட்டப்பட்ட மூன்று காலரிகள் குறித்து  குறித்து தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் பிரச்னை உள்ளது. 

தவிர, இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதுபோன்ற காரணங்கள், கடந்த ஆண்டு ‘பிளே ஆப்’ போட்டிகள் கடைசி நேரத்தில் டில்லிக்கு மாற்றப்பட்டது.       

இதுதொடர்பான வழக்கை, வரும் மே 6ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்தது. இதனால், இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மே 27, 28ல் நடக்கும் இரண்டு ‘பிளே ஆப்’ போட்டிகளை, மும்பை பிரபோர்ன் மைதானத்துக்கு மாற்ற இருப்பதாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல், சூசகமாக தெரிவித்தார்.       

காரணம் என்ன: கடந்த ஆண்டு இதுதொடர்பான பிரச்னையால், சென்னை–டில்லி அணிகள் மோதிய போட்டிக்கு, ஆட்டம் துவங்கும் சில மணி நேரத்துக்குப் பின் தான் அனுமதி கிடைத்தது.       

இம்முறையும் தாமதமாக அனுமதி கிடைத்தால், இங்குள்ள மூன்று காலரிகளின் 21 ஆயிரம் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாமல் இழப்பு ஏற்படலாம். இதை தவிர்க்கவே, போட்டிகளை மாற்றும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

20 ஓவர் கிரிக்கெட்டில் டோனி சாதனை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை சாய்த்து 5-வது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை கேப்டன் டோனிக்கு ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இது 100-வது (169 ஆட்டத்தில்) வெற்றியாக அமைந்தது. 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக 63 வெற்றிகள், சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை சூப்பர் கிங்சுக்காக 10 வெற்றிகள், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 27 வெற்றிகளை அவர் தேடித் தந்துள்ளார்.

இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் இவர் தான். இந்த சாதனை பட்டியலில் டோனிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் (50 வெற்றி) இருக்கிறார்.

டுவென்டி–20 ரேங்கிங்கில் இந்தியா முதலிடம்

ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. டெஸ்ட் ரேங்கிங்கில் (தரவரிசை) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.        
     
டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது.      
       
இதில் ‘டுவென்டி–20’ போட்டி ஆண்டு இறுதி தரவரிசையில், இந்திய அணி 131 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.      
       
சமீபத்தில் வங்கதேசத்தில் முடிந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் இலங்கையிடம் தோல்வி கண்ட இந்தியா, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 12 மாதங்களில் இந்திய அணி, ஒரே ஒரு ‘டுவென்டி–20’ போட்டியில் மட்டும் தோல்வி அடைந்ததால் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.             

நான்கு போட்டியில் தோல்வி கண்ட இலங்கை அணி 130 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அடுத்த மூன்று இடங்களில் பாகிஸ்தான் (123 புள்ளி), தென் ஆப்ரிக்கா (121), ஆஸ்திரேலியா (112) அணிகள் உள்ளன.           
       
இந்தியா ‘நம்பர்–2’: ஒருநாள் போட்டிக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி ரேங்கிங்கில், இந்திய அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய அணி 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.           
  
இப்பட்டியலில் அடுத்த மூன்று இடங்களில் இலங்கை (111 புள்ளி), இங்கிலாந்து (110), தென் ஆப்ரிக்கா (109) அணிகள் உள்ளன.       
          
ஐந்தாவது இடம்: டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில், சமீபத்தில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி 102 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.     
             
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி 8 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று 123 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.  
     
இதன்மூலம் டிசம்பர் 2008க்கு பின் முதன்முறையாக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கி்ங்கில் ஆஸ்திரேலிய அணி ‘நம்பர்–1’ இடம் பிடித்தது.       

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த தென் ஆப்ரிக்க அணி, 4 ரேட்டிங் புள்ளிகள் குறைவாக பெற்று (123 புள்ளி), தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடம் பிடித்தது. அடுத்த இரண்டு இடங்களில் இங்கிலாந்து (104 புள்ளி), பாகிஸ்தான் (103 புள்ளி) அணிகள் உள்ளன.