7வது ஒருநாள் போட்டியில் சேவாக்குக்கு மீண்டும் ஓய்வு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்சி முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

தொடக்க வீரர்களான தெண்டுல்கர், சேவாக், காம்பீர் ஆகியோர் சுழற்சி முறையில் அணியில் ஆடிவருகிறார்கள்.

முதல் ஆட்டத்தில் சேவாக்கும், 2-வது ஆட்டத்தில் காம்பீருக்கும், 3-வது ஆட்டத்தில் தெண்டுல்கருக்கும், 4-வது போட்டியில் மீண்டும் சேவாக்குக்கு ஒய்வு வழங்கப்பட்டது.

இந்திய அணி 5-வது 'லீக்' ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரிஸ்பேனில் சந்திக்கிறது. சுழற்சி முறைப்படி இந்த ஆட்டத்தில் காம்பீருக்கு ஒய்வு கொடுக்கப்படும்.

ஆனால் காம்பீர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருப்பதால் அவருக்கு ஒய்வு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கேப்டன் தோனி தொடக்க வீரர்களின் சுழற்சி முறையை தொடர்ந்து பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், நாளைய போட்டியில் காம்பீருக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. இம்முறை மீண்டும் சேவாக்குக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

துவக்க ஆட்டக்காரர்களாக கௌதம் கம்பீரும், சச்சினும் களமிறக்கப்பட உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுவராஜ் சிங் விரைவாக குணமடைய வேண்டி பாடல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் விரைவாக குணமடைய வேண்டி அவரது ரசிகர் ஒருவர் ’அலா’ என்னும் பாடல் ஒன்றை இசையமைத்துப் பாடியுள்ளார்.
ஹர்கோவிந்த் விஷ்வா என்னும் அந்த ரசிகர், ‘இது படை வீரர்களுக்காக பாடப்படும் பாடல் ரகம். இது யுவராஜுக்கு தைரியம் கொடுப்பதாக அமையும்.இந்தப் பாடலில் யுவராஜ் பற்றிய முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன’ எனக் கூறியுள்ளார்.

பயிற்சிக்கு இந்திய வீரர்கள் NO

இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடாமல் தங்களது ஓட்டல் அறையில் "ரெஸ்ட்' எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், 2 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றனர்.

இப்போது முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் துவங்கி 64 நாட்கள் ஆனநிலையில், 22 நாட்கள் போட்டியில் பங்கேற்றனர்.

போக்குவரத்துக்கு 10, பயிற்சியில் 16 நாட்கள் செலவிட்டனர். 15 நாட்கள் ஓய்வில் இருந்தனர். நேற்று 16வது நாளாக முழு ஓய்வில் இருந்தனர்.

பெரும்பாலான வீரர்கள் தங்கள் அறைகளில், "வீடியோ கேம்ஸ்' விளையாடி பொழுது போக்கினர். வேறு சிலர் தங்கள் வீடுகளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டு இருந்தனர்.


எதுவும் தெரியாது:

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறுகையில்,""நான் "டிவி' பார்ப்பதில்லை. செய்திகள் கேட்பதில்லை. தோனி சொன்னதுக்கு ஏற்ப, கடந்த ஒரு மாதமாக எந்த பத்திரிகையும் தொடவில்லை. இந்தியாவில் இருந்து என்ன செய்திகள் வருகின்றன என்றும் தெரிந்து கொள்வதில்லை. இதனால் தற்போது என்ன நடக்கிறது என்றே தெரியாது,'' என்றார்.


தோனி ஆதரவு:

வீரர்கள் ஓய்வு குறித்து அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,"" எங்களது பயிற்சிகள் நீண்ட நேரம் நடக்கும். குறைந்தது நான்கு மணிநேரங்கள் செலவிடுவோம். இதனால் தான் இன்று பயிற்சி செய்யவில்லை,'' என்றார்.

வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாததால், இவர்களை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


அதிக வித்தியாசம்:

அதேநேரம் இன்று போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் ஹசி, பீட்டர் பாரஸ்ட், வார்னர், மெக்கே ஆகியோர், நேற்று முன்தினம் சிறுவர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பாண்டிங் உள்ளிட்ட சிலர் ரசிர்களுக்காக சமையலில் ஈடுபட்டனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வீரர்கள், ரசிகர்கள் இடையே மோதல் வராது.

பொதுவாக இந்திய அணியினர் "டாஸ்' போடுவதற்கு அரைமணி நேரம் முன்னதாகத்தான் மைதானத்துக்கு வருவர். நமது வீரர்கள் வரும் போது, ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

வின்னர் தோனி - குவிகிறது பாராட்டு

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி, போட்டியை வென்று தரும் "மேட்ச் வின்னராக' உள்ளார் இந்தியாவின் தோனி. இதை இலங்கை, ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. "ரன்ரேட்' அதிகமாக தேவைப்படும். பின்வரிசையில் வரும் போது, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும்.

இவை அனைத்தையும் மீறி இந்திய அணி கேப்டன் தோனி, சிறப்பாக செயல்படுகிறார் என்றால், முதல் காரணம் இவரது "கூல்' பாணி தான்.

தற்போதைய முத்தரப்பு தொடரில், கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக "சிக்சர்' அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போல இலங்கைக்கு எதிராக 3 ரன்கள் எடுத்து போட்டி "டை' ஆக காரணமாக இருந்தார்.


"சேஸ்' மன்னன்:

தோனியை பொறுத்தவரை இரண்டாவதாக "பேட்' செய்யும் போது அசத்துகிறார். "சேஸ்' செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது. இதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், "சேஸ்' செய்த போது 50 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை "சேஸ்' செய்த போது எடுத்தது தான்.


கடின பணி:

கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார்.

இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் ஜெயர்வர்தனா கூறுகையில்,"" அடிலெய்டு போட்டியில் ஒரு "இன்ச்' அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம், இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது,'' என்றார்.


கிளார்க் பாராட்டு:

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்÷ல் கிளார்க் கூறுகையில்,"" தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது,'' என்றார்.


எல்லாமே சமம் தான்

நேற்று முன்தினம் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சம அளவில் ஸ்கோர் (236/9) எடுத்ததால் முடிவு "டை' ஆனது. இதில் ஸ்கோர் மட்டுமல்ல, பல சமமான ஒற்றுமைகள் அமைந்துள்ளது வியப்பாக உள்ளது.


இதன் விவரம்:

இரு அணிகள் எடுத்த ஸ்கோர்: 236
சந்தித்த ஓவர்கள்: 50
அடித்த பவுண்டரிகள்: 15
விழுந்த விக்கெட்டுகள்: 9
விட்டுக்கொடுத்த உதிரிகள்: 8
பவுலிங் செய்த பவுலர்கள்: 6
அடித்த சிக்சர்கள்: 2
மெய்டன் ஓவர்கள்: 2
"ஸ்டிரைக் ரேட்' 100க்கும் மேல் உள்ள வீரர்கள்: 2
(அஷ்வின், இர்பான் மற்றும் ஹெராத், சேனநாயகே)

இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளர்

இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார். தற்போதைய பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் எரிக் சிம்மன்ஸ் உள்ளார். இவரது இரண்டு ஆண்டுகால பணி, முத்தரப்பு ஒருநாள் தொடருடன் முடிகிறது.

இவரது ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ., புதுப்பிக்கவில்லை. இவருக்கு பதில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார்.

இவர் 1997 முதல் 2005 வரை 76 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல், பயிற்சியாளராக மாறினார்.

தற்போது தெற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருக்கும் இவர், 2011-12 "பிக்பாஷ்' "டுவென்டி-20' தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியிலும் பயிற்சியாளராக இருந்தார்.

முத்தரப்பு தொடர் முடிந்ததும், இவர் பவுலிங் பயிற்சியாளராக முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.