சென்னை அணியை நீக்கலாம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி

பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். 

அணியின் உரிமையாளர்கள்  விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம் பெற்றவர்கள் பி.சி.சி.ஐ., தேர்தலில் இருந்து விலகி இருக்க வேண்டும்,’ என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராகும் சீனிவாசனின் கனவு தகர்ந்தது.                 
              
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) நடந்த ‘ஸ்பாட் பிக்சிங்’ எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் குழு, தனது 35 பக்க இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.      
                                                                               
இதில் குற்றம் சுமத்தப்பட்ட 13 பேரில், வீரர்களை தவிர்த்து 4 பேரின் செயல்பாடு குறித்த விவரத்தை மட்டும் கோர்ட் வெளியிட்டது. இதன் மீதான விசாரணை தற்போது நடக்கிறது. இதில், பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன் மீது கடுமையான கருத்துக்களை, கோர்ட் தெரிவித்தது.                               
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கலிபுல்லா ஆகியோர் அடங்கிய ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் தான் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் என முத்கல் குழு அறிக்கையில் குறிப்பிட்டதை ஏற்கிறோம்,’ என, பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.        
                                         
இதுகுறித்து ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ கூறியது:     
                         
பி.சி.சி.ஐ., விதிமுறைப்படி, சென்னை அணி பல முறைகேடுகளில் ஈடுபட்டது முத்கல் அறிக்கையில் அம்பலமானது. இதுவே போதுமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். சீனிவாசனுக்கு முக்கியமானது அவரது தலைவர் பதவியா அல்லது சென்னை அணியா? 

இவர், ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருப்பது தெளிவாகிறது. சென்னை அணியை வாங்க ரூ. 400 கோடி முதலீடு செய்வது என்ற முடிவை எடுத்தது யார்?, சென்னை அணி மற்றும் சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் இயக்குனர்கள் தொடர்பான விவரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். 

குருநாத்திற்கு தொடர்பு இல்லை என்றால், அணியின் உரிமையாளர் யார்? வீரர்களை தேர்வு செய்தது கம்பெனியா? அணியை கட்டுப்படுத்தியது யார் என்பது போன்ற விவரங்களை அறிய விரும்புகிறோம். திட்டமிட்டபடி வரும் டிச.17ல் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பொதுக்குழுவை நடத்தலாம். 

புதிதாத தேர்தல் நடத்தி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யலாம். இதில், முக்கல் குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் இடம் பெறக் கூடாது.        
                      
இவ்வாறு ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ தெரிவித்தது.     
                         
இவ்வழக்கின் அடுத்தகட்ட  விசாரணை வரும் டிச.1ல் நடக்கும்.                              

சென்னைக்கு ஆபத்து: 

ஐ.பி.எல்., தொடர் விதிமுறைப்படி, அணி உரிமையாளர்கள் ‘பெட்டிங்’, ‘பிக்சிங்’ செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. இதை மீறும் பட்சத்தில் அந்த அணி தொடரில் இருந்து நீக்கப்படும். 

முத்கல் அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் ‘பெட்டிங்கில்’ ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் என, பி.சி.சி.ஐ., தற்போது கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளது. தையடுத்து, சுப்ரீம் கோர்ட் கருத்துப்படி  சென்னை அணி, ஐ.பி.எல்., தொடரில் இருந்து விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முத்கல் அறிக்கையில் சீனிவாசன் பெயரும் இடம் பெற்றிருப்பதால், அவர் மீண்டும் பி.சி.சி.ஐ., தேர்தலில் போட்டியிட முடியாது. மொத்தத்தில் சீனிவாசனுக்கு இரட்டை ‘அடி’ விழுந்துள்ளது.

பிலிப் ஹியுஸ் உயிரை பறித்த பவுன்சர்

சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று கருப்பு நாளாக அமைந்தது. ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் தலையில் பலத்த காய­ம­டைந்த பிலிப் ஹியுஸ், கடைசி வரை நினைவு திரும்பாமல் மரணம் அடைந்தார். இதனால், கி­ரிக்கெட் உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.              
    
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முதல் தர போட்டி ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடர். இதில் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அப்போது, சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’, தெற்கு ஆஸ்­தி­­ரே­லிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, தலை­யில் பலமாக தாக்கியது. 

உடனடியாக நிலை குலைந்த இவர், நினைவு இழந்து கீழே சரிந்தார். செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்­லப்­பட்ட இவ­ருக்கு, தலையில் ‘ஆப்­ப­ரே­ஷன்’ செய்யப்­பட்­டது. 

மூளைக்கு ஏற்படும் அதிர்ச்சியை தடுக்கும் வகையில், தொடர்ந்து ‘கோமா’ நிலை­யில் வைக்­கப்பட்­டி­ருந்தார். 48 மணி நேரத்துக்குப் பின் தான் எதுவும் சொல்ல முடியும் என, டாக்டர்கள் தெரிவித்தனர். 

மூளையில் தொடர்ந்து ரத்தக் கசிவு இருந்த நிலையில், மருத்துவ கருவிகள் உதவியுடன் தாக்குப்பிடித்து வந்தார். ஆனால், இவரது உடல் நிலையில் எவ்வித முன்­னேற்­றமும் ஏற்­படவில்லை. சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், நினைவு திரும்பாமலேயே, நேற்று ஹியுஸ் மரணம் அடைந்தார்.                   
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி டாக்டர் பீட்டர் புருக்னர் கூறுகையில்,‘‘ஹியுஸ் மரணச் செய்தியை அறிவிப்பது சோகமாக உள்ளது. மிகவும் அரிதான விதத்தில், இவரது கழுத்து பகுதியில் பந்து தாக்கியுள்ளது. 

இதில், தமனியில் பிளவு ஏற்பட, மூளையில் அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணத்தை சந்தித்துள்ளார். கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இவருக்கு, கடைசி வரை நினைவு திரும்பவில்லை. இறக்கும் முன் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்,’ என்றார்.      
             
ஹியுஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், இவரது நெருங்கிய நண்பர் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், உடன் இருந்தார். ஹியுஸ் மரணத்தை அறிந்து கிளார்க், ஹாடின், வாட்சன் என, பலரும் பெரும் சோகத்துடன் காணப்பட்டனர். 

பின், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட சக வீரர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினர். ஹியுசிற்கு ‘பவுன்சர்’ வீசிய அபாட்டும், கனத்த இதயத்துடன் கிளம்பினார்.


  26க்கு முன் வந்த எமன்

ஹியுசின்  26வது பிறந்த நாள் நவ. 30ல் வருகிறது. இதுவரை முதல் தர போட்டிகளில் 26 சதம் அடித்துள்ள இவர், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் எடுத்திருந்தார். 

இன்னும் சில நாட்களில் தனது பிறந்த நாள் வரவுள்ள நிலையில், தொடர்ந்து அசத்தி, 27வது முதல் தர சதம் அடிக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், துரதிருஷ்டவசமாக பந்து தாக்கி, மரணம் அடைந்தார்.        

கேப்டன்ஷிப் சவாலை சந்திக்க தயார் - கோலி

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 4-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. 

விரல் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இந்திய கேப்டன் டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் விராட் கோலி பிரிஸ்பேன் டெஸ்டுக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். அப்போது அவர் இந்தியாவின் 32-வது டெஸ்ட் கேப்டன் என்ற சிறப்பை பெறுவார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய ரசிகர்களும், அங்குள்ள ஊடகத்தினரும் விராட் கோலியை குறி வைக்க தொடங்கி விட்டனர். கடந்த சுற்றுப்பயணத்தின் போது சிட்னி டெஸ்டில் ரசிகர்களின் கேலிக்குள்ளான அவர் ஆத்திரத்தில் அவர்களை நோக்கி நடுவிரலை காட்டி எச்சரித்தார். 

இதனால் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்றும், பிரிஸ்பேனில் கோலிக்கு சிக்கல் காத்திருக்கிறது என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதே போல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும், ‘பிரிஸ்பேனில் கூடும் ரசிகர்கள் ரவுடிகள். கோலி அவர்களின் வசை மொழிகளுக்கு உள்ளாக நேரிடும். நிச்சயம் அவருக்கு கடும் நெருக்கடி இருக்கும்’ என்று கூறியுள்ளார். 

இத்தகைய சூழ்நிலையில் நேற்று அடிலெய்டில் நிருபர்களை சந்தித்த 26 வயதான விராட் கோலி கூறியதாவது:- பீட்டர் சிடிலுக்கு எதிராக நான் விளையாடியிருக்கிறேன். அவர் கடும் சவால் அளிக்க கூடிய ஒரு பந்து வீச்சாளர். போட்டி தொடங்குவதற்கு முன்பே அவர்கள் (ஆஸ்திரேலியர்கள்) வம்பு இழுக்க தொடங்கியிருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. 

அதை எல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. மிட்செல் ஜான்சன் அபாயகரமான பந்து வீச்சாளர். அவர் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதை நாங்கள் அறிவோம். வேகத்துடன் கூடிய பவுன்ஸ் ஆடுகளங்களில் அவரது பந்து வீச்சை சமாளிப்பதற்கான போதுமான யுக்திகள் எங்களிடம் உள்ளன. 

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எங்களால் நல்ல போட்டி கொடுக்க முடியும். கேப்டனாக இருப்பதையும், அணியை வழிநடத்துவதையும் எப்போதும் நான் நேசிக்கிறேன். அணியை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமுடன் இருக்கிறேன். 

பிறகு ஏன் கேப்டன்ஷிப்புக்குரிய சவால்களை என்னால் சமாளிக்க முடியாது? அணி வீரர்களின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அணி வீரர்களை நான் எப்படி வழிநடத்தப் போகிறேன், வித்தியாசமான சூழ்நிலையை எப்படி திறம்பட கையாளப்போகிறேன் உள்ளிட்டவை எல்லாம் என்னை சார்ந்து தான் இருக்கிறது. 

அணி வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கும்பொழுது, விரும்புகிற மாதிரியான திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இறுதியில் நல்ல முடிவே கிடைக்கும். அதைத் தான் நான் எதிர்நோக்கியுள்ளேன். 

ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருவதை கேள்விப்பட்டேன். ஆனால் அவரது காயத்தன்மை மோசமானதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஒரு கிரிக்கெட் வீரர் காயத்தால் அவதிப்படுவது துரதிர்ஷ்டசமானது. 

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

மறக்க முடியாத நினைவுகள் - கவாஸ்கர்

மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான வெளிநாட்டு பயணங்களில், விளையாட்டு வீரர்களை அழைத்துச் செல்வது என்பதை, இதற்கு முன் எந்த இந்திய பிரதமரும் நினைத்தது கூட கிடையாது. 

முதன் முறையாக, ஆஸ்திரேலிய பயணத்தில் மோடி இதை செய்து காட்டினார். 

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி தான் மிகவும் சிறப்பாக அமைந்தது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில், ‘கவாஸ்கர்–பார்டர்’ டிராபியை, ஆஸ்திரேலிய பிரதமர் அபாட்டும், அடுத்து 2015ம் ஆண்டுக்கான உலக கோப்பையை நமது பிரதமர் மோடியும் பிடித்திருந்தனர். 

இதில் விசேஷம் என்னவெனில், இரண்டுமே தற்போது வென்றவர்கள் கையில் தான் இருந்தது. அதாவது நடப்பு உலக சாம்பியன் இந்தியா, நடப்பு ‘கவாஸ்கர்–பார்டர்’ டிராபியை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. என்ன ஒரு ஒற்றுமையான விஷயம்.


உண்மையான கேப்டன்:

அடுத்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சி மிகவும் ‘ஹைலைட்டாக’ இருந்தது. மகாத்மா காந்தியின்  ராட்டை போன்று அமைக்கப்பட்டு இருந்த இந்த நினைவு பரிசில் மூன்று வெள்ளை நிற பந்துகள் வைக்கப்பட்டு இருந்தன.

இதில் பிரதமர் மோடி, கபில்தேவ், லட்சுமண் மற்றும் நான் கையெழுத்திட்டு இருந்தோம். 

அப்போது கபில்தேவ்,‘ இவற்றில் மோடியின் கையெழுத்து தான் மிகவும் முக்கியமானது, ஏனெனில், அவர் தான் இந்தியாவின் உண்மையான கேப்டன்,’ என்றார்.

பிரதமர் மோடியின் உலக கனவு - கபில் தேவ், கவாஸ்கர் பங்கேற்பு

வரும் 2015ல் உலக கோப்பை தொடரின் பைனலை நடத்த தகுதியான மைதானமாக மெல்போர்ன் திகழ்கிறது. இதில், இந்திய–ஆஸ்திரேலியா விளையாட வேண்டும்,’’என, பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய பிரதமர் மோடி ‘ஜி–20’ மாநாட்டில் பங்கேற்றார். நேற்று வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றார். 

161 ஆண்டு கால பாரம்பரியமிக்க மிகப் பிரமாண்டமான இம்மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணலாம். இங்கு நடந்த சிறப்பு கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அபாட், இந்திய அணி முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், கபில்தேவ், லட்சுமண், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மெக்ராத், பிரட் லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மோடியின் ‘கிரிக்கெட் ராஜதந்திர’ பேச்சை சுமார் 600 பேர்  ஆர்வத்துடன் கேட்டனர். 


மோடி பேசியது:

மெக்ராத், பிரட் லீ பந்துவீசும் சமயத்தில் சதத்தை நெருங்கும் வீரருக்கு மிகவும் பதட்டமாக இருக்கும். இதே போன்றதொரு உணர்வு தான் வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன்  மைதானத்தில் பேசும் போது எனக்கு ஏற்படுறது.

இங்கு டிசம்பரில் நடக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை ‘டிவி’ யில் காண இந்தியர்கள் பலர் அதிகாலையில் விழித்துவிடுவர். இப்படிப்பட்ட மைதானத்தில்தான் இந்திய அணி 1985ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 

இந்தியா, ஆஸ்திரேலியா ஜாம்பவான்களான பிராட்மேன், சச்சினின் சாதனைகளை கொண்டாட வேண்டும். அடுத்த ஆண்டு உலக கோப்பை (2015) தொடரை சிறப்பாக நடத்த வாழ்த்துகிறேன். 

பைனலை நடத்த தகுதியான மைதானமாக மெல்போர்ன் திகழ்கிறது. இதில், இந்திய–ஆஸ்திரேலியா விளையாட வேண்டும். இந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து இருக்கும்

இவ்வாறு மோடி பேசினார்.