இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட டோனி

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. 

முதலில் ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 226 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வாணவேடிக்கையை காண்பித்தார். 

அவர் சென்னை அணி வீரர்கள் வீசிய பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசி தள்ளினார். பின்னர் வெற்றிக்கு 227 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 

கேப்டன் டோனி ஆரம்பத்திலேயே பேட்டிங் ஆர்டர் தேர்வில் சொதப்பினார். சர்வதேச அரங்கில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மெக்கல்லத்தை துவக்க வீரராக களமிறக்காமல் மத்திய வரிசையில் களமிறங்கும் டு பிளெசிஸ்சை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். 

அவர் டக் அவுட்டாக வெளியேறி டோனி எடுத்தது மோசமான முடிவு என நிரூபித்தார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டிய மெக்கல்லம் மத்திய வரிசையில் களமிறங்கியதால் ரன் குவிக்க தடுமாறினார். 

அதேசமயம், அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 87 ரன் குவித்த ரெய்னாவை ரன் அவுட்டாக்கியதுடன் தானும் ரன் அவுட்டாகி சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

பஞ்சாப் அணி வீரர் அவானா வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில் இரண்டு சிக்ஸர் ஐந்து பவுண்டரிகள் விளாசி 33 ரன்களை குவித்து ரெய்னா அசத்தியது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். 

இந்த இக்கட்டான தருணத்தில் கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து அணியை வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்குவதை தவிர்த்த டோனி 5வது விக்கெட்டுக்கு ஜடேஜாவை களமிறக்கினார். 

சரி அடுத்த வீரராகவாவது களமிறங்குவார் என பார்த்தால் டேவிட் ஹசியை 6வது விக்கெட்டுக்கு களமிறக்கினார். அதன் பிறகு 7வது வீரராக 13வது ஓவரின் போது தான் டோனி களமிறங்கினார். 

அப்போது அணியின் ஸ்கோர் 140 ரன்னாக ஆக இருந்தது. வெற்றிக்கு 48 பந்துகளில் 87 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் என்ற முறையில் இக்கட்டான நிலையில் அணி இருக்கும்போது அதனை தூக்கி நிறுத்தாமல் ஒடி ஒளிவது போல் இருந்தது டோனியின் செயல். ஜான்சன் வீசிய 17வது ஒவரில் யார்க்கர் பந்தில் மிடில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் டோனி. 

ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 31 பந்துகளில் 42 ரன்களை சந்தித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததுடன் அணியையும் தோல்விக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்தார் டோனி. 

தான் பொறுப்பற்ற முறையில் ஆடிவிட்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடியதால் தான் தோற்றோம் என்று டோனி கூறியது தான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருந்தது.

சுரேஷ் ரெய்னா கேப்டன் - டெஸ்ட் அணியில் மீண்டும் காம்பிர்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் கவுதம் காம்பிர் மீண்டும் இடம் பிடித்தார்.

அடுத்த மாதம் இறுதியில் (ஜூன் 26 – செப்., 7) இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய அணி, மூன்று போட்டிகள் (ஜூன் 15, 7, 19) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க அடுத்த மாதம் வங்கதேசம் செல்கிறது.


ரெய்னா கேப்டன்: 

வங்கதேசதுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி அகமது உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

இத்தொடருக்கு கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டார். ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் பேட்டிங்கில் அசத்திய கோல்கட்டா அணியின் ராபின் உத்தப்பா, மீண்டும் தேசிய அணியில் இடம் பிடித்தார். 

ஆசிய கோப்பையில் விளையாடிய வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, புஜாரா, அஜின்கியா ரகானே, அம்பதி ராயுடு ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். 

விக்கெட் கீப்பராக விரிதிமன் சகா தேர்வு செய்யப்பட்டார். மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ் ஆகியோருக்கும் இடம் கிடைத்தது. பர்வேஸ் ரசூல், அக்சர் படேல், வினய் குமார், மோகித் சர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட பவுலர்கள் வாய்ப்பு பெற்றனர்.


மீண்டும் காம்பிர்: 

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் நீக்கப்பட்டார். ஏழாவது ஐ.பி.எல்., போட்டியில் இவர், முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் விலகினார். 

துவக்க வீரர் கவுதம் காம்பிர், மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். கடைசியாக இவர், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதேபோல இளம் வேகப்பந்துவீச்சாளர் பங்கஜ் சிங் வாய்ப்பு பெற்றார்.


ஒருநாள் அணி: 

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), ராபின் உத்தப்பா, அஜின்கியா ரகானே, புஜாரா, அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், விரிதிமன் சகா (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ரசூல், அக்சர் படேல், வினய் குமார், உமேஷ் யாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா, அமித் மிஸ்ரா.


டெஸ்ட் அணி: 

தோனி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான், காம்பிர், புஜாரா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஈஷ்வர் பாண்டே, இஷாந்த் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், விரிதிமன் சகா, பங்கஜ் சிங்.

IPL 7 - சென்னை-மும்பை நாளை எலிமினேட்டர் ஆட்டம்

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் 2 இடங்களை பஞ்சாப், கொல்கத்தா பிடித்தன. 3–வது இடத்தை சென்னை சூப்பர் கிங்சும், 4–வது இடத்தை மும்பை இந்தியன்சும் பிடித்தன.

இந்த இரு அணிகளும் மும்பையில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

ஜெயிக்கும் அணி குவாலிபையர் ஆட்டத்தில் தோற்ற அணியுடன் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

சென்னை அணியில் வெய்ன் சுமித், டுபெலிசிஸ், ரெய்னா, டோனி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். அதில் மாற்றம் செய்வது கட்டாயமாக உள்ளது. எனவே நாளைய ஆட்டத்தில் ஹில்பெனாஸ் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

மும்பை அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வென்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

அந்த அணியில் மைக்ஹஸ்சி, ஆண்டர்சன், ரோகித்சர்மா, அம்பதி ராயுடு, போல்லார்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் மோதிய 2 போட்டியிலும் சென்னை அணியே வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் நடந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் சென்னை வெற்றி பெற்றது. நாளைய ஆட்டத்தில் தோற்றால் வெளியேறும் நிலை ஏற்படும் என்பதால் வெற்றிக்கு இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இந்தியா–பாக்., தொடர் : அக்ரம் வலியுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடத்தப்பட வேண்டும்,’’ என, கோல்கட்டா அணியின் பவுலிங் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், 47. சிறந்த வேகப்பந்துவீச்சாளரான இவர், 104 டெஸ்ட் (414 விக்கெட்), 356 ஒருநாள் (502 விக்கெட்) போட்டிகளில் விளையாடினார். தற்போது இவர், 7வது ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் கோல்கட்டா அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக உள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது குறித்து அக்ரம் கூறியது: அரசியல் காரணங்களுக்காக, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படாதது வருத்தம் அளிக்கிறது. 

நான் எப்போதும் விளையாட்டையும், அரசியலையும் ஒன்றாக பார்க்க மாட்டேன். இவ்விரு அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் விரைவில் நடத்தப்படும் என நம்புகிறேன்.

ஐ.பி.எல்., தொடரில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில், ஒவ்வொரு அணிகளும் பலம் பெறும். 

தவிர, பாகிஸ்தானிலும் ஐ.பி.எல்., போட்டி பிரபலமடையும். எனவே அடுத்து வரும் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இம்முறை கோல்கட்டா அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அனுபவ வீரர்களுடன், திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடுகின்றனர்.

கோல்கட்டா அணியை வழிநடத்தும் கவுதம் காம்பிர், வீரராக மட்டுமல்லாமல், கேப்டன் பொறுப்பிலும் சிறப்பாக செயல்படுகிறார். இத்தொடரின் துவக்கத்தில் லேசான சரிவை சந்தித்த இவர், மனவலிமை மற்றும் தன்நம்பிக்கையால் எழுச்சி கண்டார். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம், அணியை முன் நின்று வழிநடத்த உதவுகிறது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் சேவக், காம்பிர், யுவராஜ், ஜாகிர் கான் ஆகியோருக்கு இடம் கொடுக்க வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம், இவர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். அங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை குறித்து இவர்கள் நன்கு அறிந்திருப்பதால், அதற்கேற்ப சிறப்பாக செயல்படுவார்கள்.

உலக கோப்பையில், இந்திய அணிக்கு ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அணியில் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். கேப்டன் தோனி, விராத் கோஹ்லி உள்ளிட்டோர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார்கள்.

இதேபோல பாகிஸ்தான் அணியிலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பை வெல்ல முயற்சிப்பார்கள்.

உலக கோப்பை தொடருக்கு தயாராக இனிவரும் நாட்களில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பட்சத்தில், சிறந்த முறையில் தயாராகலாம்.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

2012-ம் ஆண்டில் உமர்அக்மலை அணுகிய சூதாட்ட தரகர்?

பாகிஸ்தான் அணி 2012–ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் இங்கிலாந்துடன் விளையாடியது, அப்போது அந்த அணி வீரர் உமர் அக்மலை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் உள்ள சூதாட்ட தரகர் ஒருவர் அவருடன் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுமாறு 3 முறை வலியுறுத்தி உள்ளார். 

சூதாட்டத்தில் ஈடுபட மறுத்து உமர்அக்மல் இது குறித்து ஊழல் தடுப்பு அதிகாரியிடம் உடனே தகவல் கொடுத்து இருக்கிறார். இதேபோல ஐ.சி.சி.க்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.