சாதனை மழையில் ஆஸி., - உலக கோப்பைக்கு இன்னும் 29 நாட்கள்

உலக கோப்பை வரலாற்றில், பைனல் போட்டிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால், 2003ல் நடந்த பைனல் ஒருதலைபட்சமாக இருந்தது. 

இதில், ஆஸ்திரேலியா மட்டும் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணி, படுமோசமாக விளையாடி அதிர்ச்சி அளித்தது.        
                
தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் நடந்த இந்த பைனலில், "டாஸ்' வென்ற அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி சற்றும் எதிர்பாராதவிதமாக "பீல்டிங்' தேர்வு செய்தார். இந்த முடிவு எந்த அளவுக்கு தவறானது என்பதை ஜாகிர் கான் வீசிய முதல் ஓவரே சுட்டிக் காட்டியது. 

இந்த ஓவரில் மட்டும் இவர் 8 "எக்ஸ்டிராஸ்' விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து நமது பவுலர்கள் சொதப்ப, ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட்(57), ஹைடன்(37) அதிரடி துவக்கம் தந்தனர். 

பின் கேப்டன் பாண்டிங்(140*), டேமியன் மார்ட்டின்(88*) இணைந்து வாணவேடிக்கை காட்டினர். 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது.                        

ஒட்டுமொத்தமாக 37 "எக்ஸ்டிராஸ்' வழங்கிய இந்திய அணிக்கு, ஹர்பஜன் மட்டும் 2 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.        
                
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயயே "ஷாக்' காத்திருந்தது. மெக்ராத் பந்தில் சச்சின்(4) வீழ்ந்தார். அதிரடியாக ஆடிய சேவக்(82), லேமன் "த்ரோவில்' ரன் அவுட்டாக, கோப்பை கனவு தகர்ந்தது. 

கங்குலி(24), டிராவிட்(47), யுவராஜ்(24) ஆகியோர் வரிசையாக நடையை கட்ட, இந்திய அணி 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.                
        
இந்தியாவை பொறுத்தவரை கோப்பை வெல்ல தவறியது. அதே நேரத்தில், அப்போதைய புள்ளிவிபரப்படி பைனலில் அதிகபட்ச ஸ்கோர்(359), அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்(பாண்டிங் 140), மூன்றாவது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் சேர்த்த ஜோடி(பாண்டிங்-மார்ட்டின் 234 ரன்), அதிக சிக்சர் அடித்தவர்(பாண்டிங் 8), என பல்வேறு சாதனைகளுடன், ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.  

தோனி–கோஹ்லி ஒப்பிடலாமா? கங்குலி காட்டம்

டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை இப்போது தான் விராத் கோஹ்லி ஏற்றுள்ளார். போதிய அனுபவம் பெறும் போது, சிறப்பாக செயல்படுவார். இவரது தலைமைப் பண்பை தோனியுடன் ஒப்பிடுவது சரியல்ல,’’ என, கங்குலி தெரிவித்தார்.  
    
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. இதன் இரண்டு (அடிலெய்டு, சிட்னி) போட்டியில் கோஹ்லி கேப்டனாக செயல்பட்டார். 

களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. பின் டெஸ்டில் இருந்து தோனி ஓய்வு பெற, கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டார். தற்போது இருவரையும் ஒப்பிட்டு பேசுகின்றனர்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது: 

தோனி, கோஹ்லியின் தலைமைப் பண்பை   ஒப்பிடுவது கடினமானது. இப்படி பேசுவது தவறானது. தற்போதுதான் கோஹ்லி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகமுள்ளது. 

எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். வெற்றி பெற வேண்டும் என்ற போராடும் குணம் இவரிடம் உள்ளது. 

அணியை ஆக்ரோஷத்துடன் வழிநடத்தினார். இன்னும் அனுபவம் பெற்றால், கேப்டன் பதவியில் முன்னேற்றம் அடைவார்.        

உலக கோப்பை அணி - மீண்டும் கிளார்க் கேப்டன்

உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தில் அவதிப்படும் மைக்கேல் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் அடுத்த மாதம் 21ம் தேதிக்கு முன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. 

இதில் காயத்தால் (தோள்பட்டை) அவதிப்படும் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மட்டும் பங்கேற்ற இவர், காயத்தால் அடுத்த மூன்று போட்டிகளில் விலகினார். 

இதனால், ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். காயம் இன்னும் குணமாகாக நிலையில், கிளார்க்கிற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு தரப்பட்டுள்ளது.


தோகர்டிக்கு வாய்ப்பு:

 மற்றபடி பெய்லி, வார்னர், வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்சல் ஜான்சன், ஹேசல்வுட் இடம்பிடித்துள்ளனர். சுழல் வீரர் தோகர்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 


நிரூபிக்க வேண்டும்:

இது குறித்து ஆஸ்திரேலிய அணி தேர்வாளர் ரோட் மார்ஷ் வெளியிட்ட செய்தியில்,‘‘ உலக கோப்பை அணியில் கேப்டன் பொறுப்பை கிளார்க் ஏற்றுள்ளார். 

வங்கதேசத்துக்கு எதிரான (பிப்.,21) போட்டிக்கு முன்பாக, கிளார்க் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இல்லை எனில், இவருக்குப்பதில் வேறு வீரர் தேர்வு செய்யப்படுவார்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை, கிளார்க் பங்கேற்கவில்லை எனில், கேப்டன் பொறுப்பை பெய்லி ஏற்கலாம். 

அணி விவரம்: கிளார்க் (கேப்டன்), பெய்லி (துணை கேப்டன்), கம்மின்ஸ், தோகர்டி, பால்க்னர், ஆரோன் பின்ச், ஹாடின், ஹேசல்வுட், மிட்சல் ஜான்சன், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், ஸ்டார்க், வார்னர், வாட்சன். 

டிராவிட் சாதனை முறியடிப்பு

நேற்று 140 ரன்கள் எடுத்த கோஹ்லி (7 இன்னிங்ஸ், 639 ரன்கள்), ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் பட்டியலில், முன்னாள் கேப்டன் டிராவிட்டை முந்தி முதலிடம் பிடித்தார்.

கடந்த 2003–04ல் ஆஸ்திரேலிய மண்ணில் டிராவிட், 619 ரன்கள் (8 இன்னிங்ஸ்)  எடுத்திருந்தார். லட்சுமண் (494 ரன்கள், 2003), சச்சின் (493 ரன்கள், 2007) 3, 4வது இடத்தில் உள்ளனர்.


 86 ஆண்டுக்குப் பின்...

நேற்று 4வது சதம் கடந்த விராத் கோஹ்லி, ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் 4 சதம் அடித்த மூன்றாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமை பெற்றார்.

இதற்கு முன், முன்னாள் இங்கிலாந்தின் சட்கிளிபே (1924–25), ஹேமண்டு (1928–29) ஆஸ்திரேலிய மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் தொடரில், தலா 4 சதம் அடித்தனர்.

தற்போது 86 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில், ஒரே தொடரில் நான்கு சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்  கோஹ்லி.

உலக கோப்பை அணி - யுவராஜ், விஜய்க்கு நோ

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்த்த யுவராஜ் சிங் புறக்கணிக்கப்பட்டார். ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஸ்டூவர்ட் பின்னி வாய்ப்பு பெற்றனர்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி கடந்த டிச., 4ல் அறிவிக்கப்பட்டது.

இதிலிருந்து 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் படேல் தலைமையில் நடந்தது. இதில், கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளட்சர் ‘வீடியோ கான்பெரன்சிங்’ முறையில், ஆஸ்திரேலியாவில் இருந்து பங்கேற்றனர்.

பின் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல் அணியை அறிவித்தார். துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரகானே இடம் பெற்றனர்.

‘மிடில் ஆர்டரில்’ துணைக் கேப்டன் கோஹ்லி, ரெய்னா, கேப்டன் தோனி வருகின்றனர். 3 சுழற்பந்து வீச்சாளர்களாக அஷ்வின், அக்சர் படேலுடன், காயத்தில் இருந்து இன்னும் மீளாத ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டது சர்ச்சை கிளப்பியுள்ளது.

உலக கோப்பை போட்டி நடக்கும் மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் என, 4 பேர் இடம் பெற்றனர். இவர்களுடன், ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடுவும் அணியில் இடம் பிடித்தனர். 


‘இருவர்’ பரிதாபம்:

ரஞ்சி கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்ததால் எப்படியும் அணியில் இடம் பெறுவார் என்று நம்பப்பட்ட யுவராஜ் சிங்கிற்கு, ஏமாற்றம் தான் கிடைத்தது. இதேபோல, தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முரளி விஜய்க்கும் வாய்ப்பு தரப்படவில்லை.