கோஹ்லியின் ஆக்ரோஷம் சரியா?

களத்தில் கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது. இவரது அணுகுமுறையை ஆஸ்திரேலிய அணியினரே பாராட்டுகின்றனர்,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார். 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 0–2 என தொடரை இழக்க, டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி திடீரென ஓய்வை அறிவித்தார். 

வரும் 6ம் தேதி சிட்னியில் துவங்கும் நான்காவது டெஸ்டில் கேப்டனாக விராத் கோஹ்லி களமிறங்க உள்ளார். இவர், களத்தில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷம் காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது. இத்தொடரில் ஜான்சன், ஹாடினுடன் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டார். 

இது குறித்து இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி கூறியது:

கோஹ்லி ஆக்ரோஷமாக விளையாடுவதாக சொல்கின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது. கடந்த 3 டெஸ்டில் வெறும் 5 ரன் எடுத்து சொதப்பியிருந்தால், நான் ஏதாவது கேள்வி கேட்க முடியும். 

ஆனால், 499 ரன்கள் குவித்துள்ளார். இது  சரியாகத் தான் செயல்படுகிறார் என்பதை உணர்த்துகிறது. களத்தில் ஆக்ரோஷமாக இருப்பதை விரும்புகிறார். இந்த அணுகுமுறை, இவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்த  உதவுகிறது.


பாராட்டு:

வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் கூட இவரது ஆக்ரோஷ செயல்பாட்டை புகழ்ந்தார். தவிர, ஆஸ்திரேலிய அணியினரே கோஹ்லியை பாராட்டுகின்றனர். 

நீண்ட காலத்திற்கு பின் இப்படியொரு ஆட்டத்தை இவர்கள் பார்த்தனர். இளம் கேப்டனான இவர், மிக விரைவில்  முதிர்ச்சியான வீரராக உருவெடுப்பார். 

பிராட்மேனை நெருங்கும் சங்ககரா

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், சங்ககரா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 356 ரன்கள் எடுத்த இலங்கை அணி முன்னிலை பெற்றது. 

இதன்மூலம் சங்ககரா, டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை நெருங்குகிறார்.

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. 

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 221 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (33) அவுட்டாகாமல் இருந்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கையின் சங்ககரா, நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தார். அபாரமாக ஆடிய இவர், டெஸ்ட் அரங்கில் தனது 38வது சதத்தை பதிவு செய்தார். 

மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த சண்டிமால் (67) அரைசதம் அடித்தார். தமிகா பிரசாத் (11), ஹெராத் (15) ஏமாற்றினர். தனிநபராக அசத்திய சங்ககரா (203), டெஸ்ட் வரலாற்றில் 11வது முறையாக இரட்டை சதம் அடித்தார். 

இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனுக்கு (12 முறை) பின், இரண்டாவது இடம் வகிக்கிறார். லக்மல் (5) ஏமாற்றினார்.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 356 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. நியூசிலாந்து சார்பில் பிரேஸ்வெல், நீஷம் தலா 3, டிரண்ட் பவுல்ட் 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்து, 113 ரன்கள் பின்தங்கி இருந்தது. டாம் லதாம் (9), ரூதர்போர்டு (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

சச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா

டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னிங்ஸ்) சாதனையை தகர்த்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி வெலிங்டன் இன்று துவங்கியது. இதன் முதல் இன்னிங்சில், நியூசிலாந்து அணி 221 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. 

இலங்கை அணிக்கு கருணாரத்னே (16), சில்வா (5) ஏமாற்றினர். பின் வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, அனுபவ வீரர் சங்ககரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பவுல்ட் பந்தில் 2 ரன்கள் எடுத்த இவர், டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ரன்களை எட்டினார். முதல் நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (33) அவுட்டாகாமல் இருந்தார். 


சச்சினை முந்தினார்

சங்ககரா ஒட்டு மொத்தமாக 224 இன்னிங்சில் விளையாடி 12 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், சச்சின், பாண்டிங்கை விட குறைந்த இன்னிங்சில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இருவரும் 247 இன்னிங்சில்தான் 12 ஆயிரம் ரன்களை எட்டினர். 


முதல் இலங்கை வீரர்

இலங்கை வீரர் சங்ககரா 5 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ரன்கள் எடுத்த 5வது வீரரானார். தவிர, இந்த இலக்கை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையுைம் படைத்தார். இதுவரை 130 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 12028 ரன்கள் குவித்துள்ளார். 

இப்பட்டியலில், முதல் மூன்று இடங்களில் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் (15921), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (13378), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (13289) உள்ளனர். இந்தியாவின் டிராவிட் (13288) நான்காவது இடத்தை வகிக்கிறார். 

எடுபடாத கோஹ்லி சமாதானம் - ஓய்வு முடிவில் தோனி உறுதி

டெஸ்ட் போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது,’’ என, தோனியிடம் கேட்ட கோஹ்லி, அவரை சமாதானம் செய்ய முயற்சித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்தியாவுக்கு 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை வென்று தந்தவர் தோனி. டெஸ்ட் போட்டிகளிலும் துவக்கத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டார்.       

2011 உலக கோப்பை தொடருக்கு முன் 24 டெஸ்டில் 14 வெற்றி, 7 ‘டிரா’ செய்த தோனிக்கு 3 போட்டிகளில் மட்டும் தான் தோல்வி. இதன் பின் களமிறங்கிய 36 டெஸ்டில், 13 வெற்றி, 15 தோல்வி (8 ‘டிரா’) கிடைத்தது.   
    
இதனால் தான் டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றதாக தெரிகிறது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி ‘டிரசிங் ரூமில்’ ஏற்பட்ட பல சர்ச்சைகளும், இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  
     
இதனிடையே தோனியின் முடிவை மாற்ற, கோஹ்லி முயற்சித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் கோஹ்லி கூறியது:      

மெல்போர்ன் டெஸ்ட் முடிந்த அன்று ‘டிரசிங் ரூம்’ வந்த தோனி, அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களையும் அழைத்தார். எதற்கும் கவலைப்படாத வழக்கமான பாணியில், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.        

ஓட்டலுக்கு சென்ற பின் தோனியிடம் சென்று,‘ ஓய்வு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது,’ என்று கூறி, சமாதானம் செய்ய முயற்சித்தேன். இருப்பினும், அவரது முடிவை யாராலும் தடுக்க முடியவில்லை. இது தான் உண்மை.    
   
இவ்வாறு கோஹ்லி கூறியதாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.      

எடுபடாத முயற்சி:  கோஹ்லியை போல, இந்திய கிரிக்கெட் போர்டும் (பி.சி.சி.ஐ.,) தோனியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளது. பி.சி.சி.ஐ., உயரதிகாரி ஒருவர் கூறியது:      

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்ததும், ஓய்வு பெறுவது என்ற முடிவில் உறுதியாக இருந்தார் தோனி. அதேநேரம், மெல்போர்ன் டெஸ்டில் எப்படியும் வென்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இது நடக்கவில்லை என்றதும், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.       

தோனியின் இம்முடிவை பி.சி.சி.ஐ., ஏற்க இல்லை. இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் டெஸ்டில் பங்கேற்க வேண்டும் என, நினைத்தோம். ஆனால் விருப்பம் இல்லாதவரை எத்தனை நாளைக்கு தாங்கிக் கொண்டிருப்பது. இவ்விஷயத்தில் தோனி தான் பிடிவாதமாக இருந்தார்.  
    
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தோனிக்கு சிக்கல் கொடுத்த கூட்டணி - ஓய்வின் பின்னணி என்ன?

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திடீரென ஓய்வு பெற்றதற்கு, விராத் கோஹ்லி–ரவி சாஸ்திரி கூட்டணியே காரணம் என கூறப்படுகிறது. 

இவர்களது ஆதிக்கம் அதிகரிக்க, தோனி ஓரங்கட்டப்பட்டுள்ளார். வேறுவழியின்றி ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி தந்துள்ளார்.

இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பை பெற்று தந்த பெருமைமிக்கவர் தோனி. டெஸ்டில் மட்டும் சறுக்கினார். அதிலும் அன்னிய மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார். தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இவருக்கு விராத் கோஹ்லி கூடுதல் தொல்லை தந்தார்.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் காயம் காரணமாக தோனி பங்கேற்வில்லை. அப்போது அணிக்கு முதல் முறையாக தலைமை ஏற்ற கோஹ்லி, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். இது, இந்திய அணியின் இயக்குனரான முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து இவருக்கு ஆதரவு தந்துள்ளார்.

பின் விரல் காயத்தில் இருந்து மீண்ட தோனி, பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது டெஸ்டுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இப்போட்டியின் பயிற்சியில் காயமடைந்த தவான் களமிறங்க மறுக்க, கோஹ்லி முன்னதாக களமிறக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோஹ்லி, தவானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சை கிளப்பினார்.

தொடர்ந்து மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டிலும் கோஹ்லியின் ஆக்ரோஷம் நீடித்தது. ஆஸ்திரேலியாவின் ஜான்சன், ஹாடினுடன் வார்த்தை போரில் ஈடுபட்டார். கேப்டன் போலவே செயல்பட்டார். இது களத்தில் அமைதியை விரும்பும் ‘கேப்டன் கூல்’ தோனிக்கு அதிருப்தியை தந்தது. 

ரன் மழை பொழிந்து நல்ல ‘பார்மில்’ இருந்த கோஹ்லியை இவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. பயிற்சியாளர் பிளட்சரின் ஒத்துழைப்பு மட்டுமே இருந்துள்ளது. ஆனால், அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி, கோஹ்லிக்கு ஆதரவாக இருந்துள்ளார். 

அணி தேர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகளில் பிளட்சர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். தனக்கு ஒத்துவராத ரவி சாஸ்திரி–கோஹ்லி ‘அரசியலை’ சமாளிப்பதை காட்டிலும் ஓய்வு பெறுவதே சிறந்தது என தோனி நினைத்துள்ளார். இந்த பனிப் போர் காரணமாக தான், தோனி ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

தவிர, ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கில் தோனியின் பெயரும் உள்ளது. இதில், சுப்ரீம் கோர்ட் இன்னும் ஒரு மாத காலத்தில் தீர்ப்பு அளிக்க இருக்கிறது. இதனையும் மனதில் வைத்து தான் டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி விடைபெற்றதாக தெரிகிறது.