ஐ.பி.எல் பெட்டிங்: விசாரணைக் குழுவில் கங்குலிக்கு இடம்

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து முத்கல் தலைமையிலான குழுவினர் 07.06.2014 முதல் 08.06.2014 வரை மும்பையில் கூடி ஆலோசித்தனர். பின்னர் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான தங்கள் விசாரணைக்கு உதவ பல்வேறு வீரர்களின் பெயர்களை பரிசீலனை செய்தனர். 

இறுதியில் தங்களுடைய விசாரணைக்கு உதவ முன்னாள் கிரிக்கெட் கேப்டனான சவுரவ் கங்குலியை நியமித்து அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

முத்கல் கமிட்டியின் முடிவை கங்குலி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முத்கல் குழு தனது விசாரணை அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. 

இக்குழுவில் முத்கல்லை தவிர இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான நாகேஸ்வர ராவ் மற்றும் மூத்த வழக்கறிஞரான நிலோய் தத்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது தவிர இக்குழுவிற்கு உதவி செய்ய மூத்த போலீஸ் அதிகாரியான பி.பி. மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது.

ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

ஒவ்வொரு பிரிவில் உள்ள அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றான 2–வது சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து கால்இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டிக்கு அணிகள் முன்னேறும்.

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு தொகை வழங்கப்படும். கடந்த முறை உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட இது 17 சதவீதம் கூடுதலாகும்.

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 4927 கிராம் எடை கொண்ட தங்க கோப்பையும் வழங்கப்படும்.

2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.150 கோடியும், 3–வது இடத்தை பிடிக்கும் நாட்டுக்கு ரூ.132 கோடியும், 4–வது இடத்துக்கு ரூ.120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

கால் இறுதியில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2–வது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும், முதல் சுற்றில் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். கடந்த உலக கோப்பையில் (2010) வழங்கப்பட்ட பரிசு தொகையில் இருந்து 37 சதவீதம் கூடுதலாகும். 

ஐ.பி.எல்., வெற்றிவிழாவில் போலீஸ் தடியடி

ஐ.பி.எல்., கோப்பை வென்ற கோல்கட்டா அணிக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. இதனை காண ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால், போலீசார் தடியடி நடத்த, பெரும் அமளி ஏற்பட்டது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அசத்திய  கோல்கட்டா அணி, பஞ்சாப்பை வீழ்த்தி, கோப்பை வென்றது. 

இதைக் கொண்டாடும் வகையில், கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில், கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) மற்றும் மேற்கு வங்க அரசு இணைந்து விழா நடத்தின.

இதைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி என்பதால், நேற்று காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர். மைதானத்தில் 65 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடம் என்ற நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குவிந்தனர். 

ஆனால், கோல்கட்டா போலீஸ் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ‘சிறப்பு அனுமதி டிக்கெட்’ வைத்திருப்பவர்கள் மட்டும், மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட, குழப்பம் ஏற்பட்டது. 


போலீஸ் தடியடி:

சிலர் அங்கிருந்த தடுப்புகளை தாண்டிக் குதித்து, மைதானத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தினர். இதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.


கோப்பை இல்லை:

மதியம் 3 மணிக்கு வீரர்கள் மைதானத்துக்கு  வந்து சேர்ந்தனர். வரும் போது கோப்பையை கொண்டு வராமல் விட்டுவிட, லேசான குழப்பம் ஏற்பட்டது. பின், போலீசாரை ஓட்டலுக்கு அனுப்பி, கோப்பையை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐ.பி.எல். கனவு அணியில் சகா, மொகித்சர்மா

7–வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது. 

இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எல்.கனவு அணி வருமாறு:–

1. உத்தப்பா (கொல்கத்தா), 2. டேவிட் வார்னர் (ஐதராபாத்), 3. ரெய்னா (சென்னை), 4. விர்த்திமான் சகா (பஞ்சாப்), 5. மேக்ஸ்வெல் (பஞ்சாப்), 6. டோனி (சென்னை), 7. அக்ஷர்படேல் (பஞ்சாப்), 8. புவனேஸ்வர்குமார் (ஐதராபாத்), 9. மொகித்சர்மா (சென்னை), 10. மலிங்கா (மும்பை), 11. சுனில்நரின் (கொல்கத்தா). 12–வது வீரர் சகிப்அல்ஹசன் (கொல்கத்தா),

கோல்கட்டாவுக்கு கோப்பை - கடைசி ஓவரில் வீழ்ந்தது பஞ்சாப்

பந்துக்கு பந்து நெஞ்சம் படபடத்த பரபரப்பான ஐ.பி.எல்., பைனலில் அசத்திய கோல்கட்டா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. 

கடைசி ஓவரில் பவுண்டரி அடித்த பியுஸ் சாவ்லா, சாம்பியன் கனவை நனவாக்கினார். போராடிய பஞ்சாப் அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது. சகாவின் சதம் வீணானது. 

பெங்களூருவில் நேற்று இரவு நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் சந்தீப் சர்மா நீக்கப்பட்டு, பாலாஜி இடம் பெற்றார். கோல்கட்டா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், துணிச்சலாக ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.


சேவக் ஏமாற்றம்:

பஞ்சாப் அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை. சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் புலியாக உறுமிய சேவக், இம்முறை பூனையாக பம்மினார். இவர், உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ வெறும் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். 

அடுத்து ‘பேட்டிங்’ வரிசையில் தேவையில்லாமல் மாற்றம் செய்யப்பட்டது. மேக்ஸ்வெல்லுக்கு பதில் முன்னதாக வந்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி(1), ‘சுழல் மாயாவி’ சுனில் நரைனின் முதல் பந்தில் போல்டானர்.

பின் சகா, மனன் வோரா சேர்ந்து அசத்தினர். யார் பந்துவீசினாலும் விளாசித் தள்ளிய இவர்கள், மின்னல் வேகத்தில் ரன் சேர்த்தனர். நரைன் கைநழுவ கண்டம் தப்பிய சகா, தனது அதிரடியை தொடர்ந்தார். உமேஷ் யாதவ் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். சாவ்லா வலையில் வோரா(67) சிக்கினார். ‘அபாய’ மேக்ஸ்வெல்(0) ஏமாற்றினார். 

நரைன் ஓவரில் சிக்சர் அடித்த சகா, சதம் கடந்து அசத்தினார். முதல் 10 ஓவரில் 58 ரன்கள் தான் எடுக்கப்பட்டன. அடுத்த 10 ஓவரில் 141 ரன்கள் கிடைத்தன. பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. சகா 115 ரன்களுடன்(55 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.ஆட்ட நாயகன் விருதை மணிஷ் பாண்டே வென்றார். 


பாண்டே நம்பிக்கை:

கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. ஜான்சன் வீசிய முதல் ஓவரில் உத்தப்பா(5) அவுட்டானார். கேப்டன் காம்பிர்(23) அதிக நேரம் நீடிக்கவில்லை. 

அடுத்து வந்த யூசுப் பதான், கரண்வீர் சிங் ஓவரில் வரிசையாக 2 சிக்சர்கள் விளாசி நம்பிக்கை தந்தார். மறுபக்கம் அபார ஆட்டத்தை தொடர்ந்த மணிஷ் பாண்டே, அவானா ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி விளாசினார். 

இந்த நேரத்தில் கரண்வீர் சிங் பந்தில் யூசுப்(36) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. சாகிப்(12), டஸ்காட்டே(4) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய மணிஷ் பாண்டே, 94 ரன்களுக்கு வெளியேற, பதட்டம் அதிகரித்தது. சூர்ய குமார் யாதவ்(5) அணியை கைவிட்டார்.


சபாஷ் சாவ்லா:

ஜான்சன் வீசிய போட்டியின் 19வது ஓவரில் பியுஸ் சாவ்லா ஒரு இமாலய சிக்சர் அடிக்க, மீண்டும் நம்பிக்கை துளிர் விட்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. அவானா பந்துவீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. இரண்டாவது பந்தில் நரைன் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் பியுஸ் சாவ்லா ஒரு ‘சூப்பர்’ பவுண்டரி அடித்து, கோப்பையை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாவ்லா(13), நரைன்(2) அவுட்டாகாமல் இருந்தனர்.


ரூ. 15 கோடி பரிசு

நேற்றைய ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற கோல்கட்டா அணிக்கு, கோப்பையுடன் ரூ. 15 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பஞ்சாப் அணிக்கு ரூ. 10 கோடி பரிசு கொடுக்கப்பட்டது. ‘பிளே–ஆப்’ சுற்று வரை முன்னேறி, பைனல் வாய்ப்பை இழந்த சென்னை, மும்பை அணிகளுக்கு தலா ரூ. 7.5 கோடி வழங்கப்பட்டது.


அழுதார் பிரித்தி

நேற்றைய பைனலில் நடிகர் ஷாருக்கானின் கோல்கட்டா, நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணிகள் மோதியதால், பாலிவுட் ‘டென்ஷனை’ காண முடிந்தது. இருவரும் மைதானத்துக்கு வந்து போட்டியை ரசித்தனர். கோல்கட்டா வென்றதும் ஷாருக் சிரித்து மகிழ்ந்தார். கோப்பை நழுவிய சோகத்தில் பிரித்தியின் கண்கள் குளமாகின. 


9வது வெற்றி

லீக் சுற்றில் துவக்கத்தில் சொதப்பிய கோல்கட்டா அணி, முதல் 7 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. அதன்பின் தொடர்ச்சியாக 7 லீக் போட்டியில் வெற்றி பெற்றது. பின், ‘பிளே–ஆப்’ முதலாவது தகுதிச் சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்தி, தொடர்ந்து 8வது வெற்றியை பெற்றது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை பஞ்சாப்புடன் (2013–14, 8 வெற்றி) பகிர்ந்து கொண்டது.

நேற்றைய பைனலில் மீண்டும் பஞ்சாப் அணியை வீழ்த்திய கோல்கட்டா அணி, வரிசையாக 9வது வெற்றியை பதிவு செய்து, தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனை படைத்தது. பெங்களூரு (2011), சென்னை (2013) அணிகள் தொடர்ச்சியாக 7 வெற்றி பெற்றன.


சிறந்த ‘சேஸ்’

பஞ்சாப் அணி நிர்ணயித்த 200 ரன்களை எட்டிய கோல்கட்டா அணி, ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சிறந்த ‘சேஸிங்கை’ பதிவு செய்து, தனது சொந்த சாதனையை முறியடித்தது. முன்னதாக 2012ல் நடந்த பைனலில், சென்னை அணி நிர்ணயித்த 191 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி 192 ரன்கள் எடுத்து சிறந்த ‘சேஸிங்’ செய்தது.


இதெல்லாம் அதிசயம்

மேற்கு வங்கத்தை சேர்ந்த சகா முதலாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக தான் விளையாடினார். நேற்று, தன்னை புறக்கணித்த அதே கோல்கட்டா அணிக்கு எதிராக சதம் அடித்த இவர், பஞ்சாப் அணிக்கு கைகொடுத்தார்.

* பஞ்சாப் அணிக்கு கடந்த போட்டிகளில் கைகொடுத்த வெளிநாட்டு வீரர்களான மேக்ஸ்வெல்(0), மில்லர்(1) இம்முறை ஏமாற்றிய நிலையில், இந்திய வீரர்களான வோரா(67), சகா(115) அசத்தினர்.

* சகா சதம் அடித்ததும், எதிரணியான கோல்கட்டாவின் உரிமையாளரான ஷாருக் கான் எழுந்து நின்று கைதட்டி தனது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

* கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பாவுக்கு பெங்களூரு சின்னசாமி மைதானம் பழக்கப்பட்டது. இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர் என்பதால் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 ரன்களில் வெளியேறினார்.


முதல் வீரர்

நேற்று அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் சகா சதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., பைனலில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.  முன்னதாக 2011ல் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான பைனலில், சென்னை அணியின் முரளி விஜய் 95 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

* இது, இம்முறை பதிவு செய்யப்பட்ட 3வது சதம். முன்னதாக மும்பை அணியின் லெண்டில் சிம்மன்ஸ் (100*, எதிர்–பஞ்சாப்), பஞ்சாப் அணியின் சேவக் (122, எதிர்–சென்னை) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

* தவிர இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 31வது சதம். இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.

* ஐ.பி.எல்., வரலாற்றில் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் சகா. முன்னதாக டெக்கான் (109*), பஞ்சாப் (106) அணிகளுக்காக விளையாடிய கில்கிறிஸ்ட் இச்சாதனை படைத்தார்.


இரண்டாவது அதிகபட்சம்

நேற்று 199 ரன்கள் எடுத்த பஞ்சாப், ஐ.பி.எல்., பைனலில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. சென்னையில் 2011ல் நடந்த பெங்களூருவுக்கு எதிரான பைனலில், சென்னை அணி அதிகபட்சமாக 205 ரன்கள் குவித்தது.