இந்திய பவுலர்கள் பதிலடி

பார்படாஸ் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். பேட்டிங்கில் லட்சுமண்(85) கைகொடுத்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் பார்படாசில் நடக்கிறது.


"சூப்பர் ஜோடி:

முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் தொல்லை கொடுத்தனர். இதனால் முகுந்த்(1), அனுபவ டிராவிட்(5), முரளி விஜய்(11) நிலைக்கவில்லை. விராத் கோஹ்லியும் "டக் அவுட்டானார்.

இதன் பின் இணைந்த லட்சுமண், ரெய்னா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில், டெஸ்ட் அரங்கில் நான்காவது அரைசதம் (53) கடந்த ரெய்னா, அம்பயரின் தவறான தீர்ப்பில் வெளியேற்றப்பட்டார்.


லட்சுமண் அபாரம்:

மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 50வது அரைசதம் கடந்த லட்சுமண், தொடர்ந்து அசத்தினார். அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி (2) கைவிட்டார். ஹர்பஜன் (5) இம்முறை நிலைக்கவில்லை. 85 ரன்கள் எடுத்த லட்சுமண், பிஷூ சுழலில் வீழ்ந்தார். அபிமன்யு மிதுன், "டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

பிரவீண் குமார் தன் பங்குக்கு 11 ரன்கள் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் எட்வர்ட்ஸ், ராம்பால், தேவேந்திர பிஷூ ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


பவுலர்கள் அபாரம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆட்ரியன் பரத், சிம்மன்ஸ் துவக்கம் தந்தனர். இம்முறை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பிரவீண் குமார், இஷாந்த் சர்மா மற்றும் அபிமன்யு மிதுன் ஆகியோர் "போட்டுத் தாக்க ஆரம்பித்தனர். இஷாந்த் வேகத்தில் முதலில் பரத் (3) வெளியேறினார். சிம்மன்ஸ் (2), பிரவீணுக்கு பலியானார். டேரன் பிராவோவை (9), அபிமன்யு மிதுன் திருப்பி அனுப்பினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் பின்தங்கியிருந்தது.


இஷாந்த் அசத்தல்:

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் 45 நிமிடம் தாமதமாக துவங்கியது. இஷாந்த் சர்மா வேகப்பந்து வீச்சில் மிரட்டினார். இவரது ஓவரின் 4வது பந்தில் "நைட் வாட்ச்மேன் பிஷூ (13) பெவிலியன் திரும்பினார். இதே ஓவரின் கடைசி பந்தில், 18 ரன்கள் எடுத்திருந்த சர்வானையும் அவுட்டாக்கினார்.

உணவு இடைவேளைக்குப் பின், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட போது, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து, 103 ரன்கள் பின்தங்கி இருந்தது. சந்தர்பால் (20), சாமுவேல்ஸ் (21) களத்தில் இருந்தனர். இந்தியாவின் இஷாந்த் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

0 comments:

Post a Comment