Showing posts with label ஹாக்கி. Show all posts
Showing posts with label ஹாக்கி. Show all posts

ஹாக்கி - இந்தியா அவுட்

ஜூனியர் உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் தென் கொரியாவுடன் "டிரா' செய்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், 10வது ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர், டில்லியில் நடக்கிறது. "சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் லீக் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றது. அடுத்து கனடாவை வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில், தென் கொரியாவை எதிர்கொண்டது. 

இதில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு, 3 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை, ராமன்தீப் வீணடித்தார்.

தொடர்ந்து இந்திய வீரர்கள் செய்த தவறுகளால், 16வது நிமிடம் தென் கொரிய அணிக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் லீ ஒரு கோல் அடிக்க, 0-1 என இந்திய அணி பின்தங்கியது. 

பின், 33வது நிமிடம் கிடைத்த "பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் கோலாக மாற்ற இந்திய அணிக்கு சற்று நிம்மதி கிடைத்தது. அடுத்த சில நிமிடத்தில் (35வது), "பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 2-1 என, முன்னிலை பெற்றது.


திடீர் திருப்பம்:

இரண்டாவது பாதியில் மன்தீப் ஒரு "பீல்டு' கோல் அடிக்க, 3-1 என, வ<லுவான முன்னிலை பெற்றது. இருப்பினும், கடைசி நேரத்தில் எதிரணியை கோல் அடிக்க விட்டு ஏமாறுவதை வழக்கமாக கொண்ட இந்திய வீரர்கள், நேற்றும் சொதப்பினர். 

இதைப் பயன்படுத்திய தென் கொரிய வீரர் சீயுங்ஜு, 58, 60 வது நிமிடங்களில் , இரண்டு கோல்கள் அடிக்க, இந்திய அணியின் காலிறுதி கனது தகர்ந்தது. முடிவில், போட்டி 3-3 என்ற கணக்கில் "டிரா' ஆனது. 


இந்தியா "அவுட்';

"சி' பிரிவில் இந்தியா, தென் கொரிய அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்ற போதும், இத்தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் அடிப்படையில், இரண்டாவது இடம் பெற்ற தென் கொரிய அணி காலிறுதிக்கு முன்னேறியது. 9 முதல் 12வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி, நாளை அர்ஜென்டினாவை சந்திக்கிறது.

இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டி


2018–ம் ஆண்டுக்கான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த உரிமம் கேட்டு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. இதில் ஆண்கள் உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு ஆக்கி இந்தியா அனுமதி கோரி இருந்தது.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. 

உலக கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி இங்கிலாந்தில் ஜூலை 7–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12–ல் இருந்து 16 ஆக உயத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தமிழருக்கு பெருமை சேர்த்தவர்

மகாராஷ்டிரத்தில் பிறந்த தன்ராஜ் பிள்ளையின் பெற்றோர் தமிழர். அவருடைய தந்தை நாகலிங்கம், தாய் ஆண்டாளம்மாள். பிழைப்புக்காக மகாராஷ்டிரத்தில் நிரந்தரமாக தங்கிவிட்டபடியால் புணே அருகிலுள்ள கிர்கீயில் 1968-ல் பிறந்தார். 

குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்தாலும், குழந்தைகள் ஐவருக்கும் அவருடைய தாய் உணவுடன் விளையாட்டையும் ஊட்டி ஊக்குவித்தார்.


இளமை பருவத்தில் வீட்டுக்கு அருகில் இருந்த மைதானத்தில் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் விளையாடி ஹாக்கியை வளர்த்துக் கொண்டார். இவர் முன்னாள் இந்திய வீரர் முகமது ஷாஹித்தின் ஆட்டத்தை விரும்பியதால், அவரைப் போலவே முன்கள ஆட்டக்காரராக விளங்கினார்.


1980-களில் மும்பைக்கு இடம்பெயர்ந்து மஹிந்திரா மற்றும் மஹிந்திரா அணிக்காக விளையாடினார். இவருடைய சகோதரர் ரமேஷ், இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவருடைய தீவிர பயிற்சி காரணமாக 1989ல் முதல் சர்வதேச போட்டிகளில் தன்ராஜ் பிள்ளை பங்கேற்றார்.


1989 டிசம்பர் முதல் 2004 ஆகஸ்ட் வரை, இந்திய அணி சார்பில் 339 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த சமயத்தில் எண்ணற்ற கோல்களை அடித்துள்ளார்.


நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் (1992, 1996, 2000, 2004) பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேபோல் நான்கு உலகக் கோப்பை போட்டிகள், நான்கு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள், நான்கு ஆசியப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆசியக் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவரது தலைமையில் பங்கேற்ற இந்திய அணி கோப்பையை வென்றது.


பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக கோல் அடித்த பெருமையை பெற்றுள்ளார். 1994-ல் சிட்னியில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் உலக லெவன் அணியில் இடம்பெற்ற ஒரு இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.


பல வெளிநாட்டு கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். பிரீமியர் ஹாக்கி லீக் போட்டியில் மராத்தா வாரியர்ஸ் அணிக்காக இரண்டு முறை விளையாடியுள்ளார். ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.  இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் இடைக்கால கமிட்டியின் உறுப்பினராக இருந்துவருகிறார்

யாருக்கு கேப்டன் பதவி?

இந்திய ஹாக்கியில் மீண்டும் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. அணியின் கேப்டனாக யாரை தேர்வு செய்வது என்பதில், ஹாக்கி இந்தியா அமைப்பு மற்றும் பயிற்சியாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

உலககோப்பை ஹாக்கி தொடர் வரும் 28 ம் தேதி முதல் மார்ச். 13 வரை இந்தியாவில் நடக்க உள்ளது. தொடருக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இந்திய ஹாக்கியில் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. உலககோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த 6ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில், கேப்டனாக ராஜ்பால் சிங்கை நியமித்தது ஹாக்கி இந்தியா அமைப்பு. ஆனால் இதற்கு அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசா மற்றும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பிரப்ஜோத் சிங்கை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது. இதனால் பயிற்சியாளர், ஹாக்கி இந்தியா அமைப்பு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்?: சமீபத்தில் சம்பள பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய இந்திய ஹாக்கி வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர். உலககோப்பை பயிற்சி முகாமை புறக்கணித்தனர். இப்பிரச்னையின் போது, அணியின் கேப்டனாக இருந்த ராஜ்பால் சிங், வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட வில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக ராஜ்பால் சிங்கின் மீதான நம்பிக்கையை வீரர்கள் இழந்து விட்டனர். இதனால் அவர் உலககோப்பையில் கேப்டனாக நீடிப்பதை வீரர்கள் விரும்பவில்லை. இது ஒரு புறம் இருக்க, 10 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி சார்பாக விளையாடி வரும் பிரப்ஜோத் சிங், தனக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்திடம் தொடரை இழந்தது இந்தியா

இங்கிலாந்துடனா ஹாக்கி தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இந்திய ஆடவர் அணி.

பர்மிங்காமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடரின் கடைசி மற்றும் 3-வது போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியுற்றது.

முதல் போட்டியில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றது.

அடுத்து பெல்ஜியத்துடன் இந்திய அணி தொடரில் பங்கேற்கிறது. அந்த அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இந்தியா அபாரம்

இரண்டாவது ஹாக்கி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை அடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்கள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றனர். முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி பர்மிங்ஹாமில் நேற்று நடந்தது.ஆட்டத்தின் துவக்கம் முதல் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஆஷ்லே ஜாக்சன் 22வது நிமிடத்தில் முதல் கோலடித்து முன்னிலை தந்தார். இங்கிலாந்து வீரர் ஜான்டி கிளார்க் 26வது நிமிடத்தில் கோலடித்து 2-0 என வலுவான முன்னிலை தந்தார்.

தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு 35வது நிமிடத்தில் அர்ஜுன் ஹலாப்பா 35வது நிமிடத்தில் கோலடித்து நம்பிக்கை தந்தார். முதல் பாதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, தனன்ஜெய் மகாதிக் (41வது நிமிடம்), ராஜ்பால் சிங் (43வது நிமிடம்), குருவிந்தர் சிங் (65வது நிமிடம்) தலா ஒரு கோலடித்து 4-2 என முன்னிலை தந்தனர். இறுதிவரை போராடிய இங்கிலாந்து வீரர் ஆஷ்லே ஜாக்சன் 69வது நிமிடத்தில் கோலடித்து ஆறுதல் தந்தார். இருப்பினும், ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்தியா முன்னேற்றம்

கசானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி-2 போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் சாம்பியன்ஸ் சாலஞ்ச்-1 போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளது இந்திய மகளிர் குழு.

கசானில் கடந்த சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை 6-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைப் பெற்றது இந்திய அணி.

ராணி ராம்பால் அதிரடியாக 4 கோல்களும், சபா அஞ்சும், சான்சான் தேவி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினர்.

இந்தியக் குழுவுக்கு இவ்வெற்றி, சிறப்பான முன்னேற்றம் அளித்துள்ளது.

சாம்பியன்ஸ் சாலஞ்ச்-1 போட்டியிலும் பட்டம் வென்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும்.

வங்கதேசத்துடன் இந்தியா இன்று மோதல்

கவுன்டன்:மலேசியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு அணிகள் விளையாடுகின்றன.அதில் இன்று நடக்கும் 7வது இடத்திற்கான போட்டியில் இந்தியா,வங்கதேச அணிகள் மோதுகின்றன. "பி"பிரிவில் இந்தியா.பாகிஸ்தான்,சீனா உள்ளிட்ட மூன்று அணிகள் லீக் சுற்றில் மோதின.

நடப்புச் சாம்பியனான இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. அடுத்த ஆட்டத்தில் சீனாவுடன் டிரா (2-2) செய்தது. இதையடுத்து அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்தியா, 6 மற்றும் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் வங்கதேசத்துடன் விளையாடுகிறது.

இதில் வெற்றி பெரும் அணி 5வது மற்றும் 6வது இடத்திற்கான போட்டியில் ஜப்பான் அணியை சந்திக்கும்.

இது குறித்து இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில் "ஆசிய ஹாக்கி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.கடந்த எட்டு மாதங்களில் நான் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.இன்றைய போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்ய விரும்புகிறேன்.இப்போட்டியில் இதுவரை விளையாடாத ஹரிபிரசாத், வி.எஸ்.வினயா, அஜிதேஷ் ராய் ஆகியோருக்கு வங்கதேசத்துடனான ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளேன்.முன்பு கூறியது போல அந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்," என்றார்.