Showing posts with label கால்பந்து. Show all posts
Showing posts with label கால்பந்து. Show all posts

தெறிக்க விட்ட சென்னை - டில்லியை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் இன்று சென்னை வீரர்கள் 4 கோல் அடித்து டில்லி அணியை  தெறித்து ஓடச் செய்தனர். 

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. சென்னை நேரு மைதானத்தில் இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணியை எதிர்கொண்டது.

இதில் ஜேஜே 2, மென்தோஜா 1, பெலிசாரி 1 என, சென்னை அணி 4 கோல் அடித்தது. டில்லி அணி சார்பில் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் சென்னை அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

சாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்

களத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா. இவரது ஆதங்கம் நியாயமானது தான். சொந்த மண்ணில் சென்னை வீழ்ந்ததை யாராலும் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.                  
சென்னையில், இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் (ஐ.எஸ்.எல்.) முதல் போட்டி நேற்று நடந்தது. இதில், சென்னை அணி, கோல்கட்டாவிடம் 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. 

சென்னை வசம் 53 சதவீதம் பந்து இருந்த போதும், ‘பினிஷிங்’ இல்லாததால் வெற்றி நழுவியது. இப்போட்டியின் சென்னை அணியின் அன்னிய வீரர்களை காட்டிலும் இந்திய நட்சத்திரங்களான ஹர்மன்ஜோத் கப்ரா, ரால்டே, ஜேஜே அடங்கிய மூவர் கூட்டணி தான் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது.                   
‘இத்தாலி அணியில் விளையாடக்கூடிய திறமை கப்ராவுக்கு உள்ளது’, என, சென்னை அணியின் பயிற்சியாளர் மெடாரசி ஒரு முறை கூறினார். இதை நிரூபிக்கும் வகையில் கப்ராவின் ஆட்டம் இருந்தது. 

மத்திய களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். கோல்கட்டாவின் நட்சத்திர வீரரான போர்ஜா பெர்னாண்டசிற்கு கடும் சவால் கொடுத்தார். போட்டி முடிந்ததும் தனது ஆட்டம் குறித்து கப்ரா கூறுகையில்,‘‘அணி தோற்ற நிலையில், நான் சிறப்பாக விளையாடியதில் பலன் இல்லை,’’என்றார்.                  
மற்றொரு வீரரான ரால்டேவும் பம்பரமாக சுழன்று ஆடினார். பந்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதில் வல்லவராக இருந்தார்.          
        
மிசோரமை சேர்ந்த ஜேஜே அற்புதமாக கோல் அடித்து, சென்னை ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். ‘அடுத்த பூட்டியா’ என வர்ணிக்கப்படும் இவர், பல முறை கோல் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தார். 

இவர் கூறுகையில்,‘‘அரங்கில் திரண்டிருந்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி. அணி தோல்வி அடைந்ததால், இவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை அணியின் ‘லெவனில்’ வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். கோல் அடித்த போதும், மகிழ்ச்சி கிடைக்கவில்லை,’’என்றார்.                  
வரும் போட்டிகளில் ஜேஜே, கப்ரா, ரால்டே அடங்கிய மூவர் அணி, இன்னும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் சென்னை அணி, வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.

400 கோல்களை கடந்தார் மெஸ்சி

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் பார்சிலோனா கிளப்புக்காக ஆடும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) , கிரனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல் அடித்தார். 

இதில் பார்சிலோனா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 

இந்த இரண்டு கோல்களையும் சேர்த்து மெஸ்சியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. கிளப் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக அவர் இதுவரை 524 ஆட்டங்களில் விளையாடி 401 கோல்கள் அடித்திருக்கிறார். 

இது போன்ற மைல்கல்லை தொடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்று மெஸ்சி கூறியிருக்கிறார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு பெல்ஜியம் அணி கால் இறுதிக்கு தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி 2–வது சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது.

இதில் ‘எச்’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெல்ஜியம் ‘ஜி’ பிரிவில் 2–வது இடத்தை பிடித்த அமெரிக்கா அணிகள் மோதின.

இரு அணி வீரர்களுமே கால் இறுதியில் நுழைய வேண்டும் என்ற ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

பெல்ஜியம், அமெரிக்க வீரர்கள் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்பை தவறவிட்டனர். மேலும் பெல்ஜியம் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை அமெரிக்க கோல்கீப்பர் டிம்ஹவார்டு பலமுறை தகர்த்தார். இதேபோல பெல்ஜியம் கோல்கீப்பர் கோர்ட்டசின் செயல்பாடும் நன்றாக இருந்தது.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 2–வது பாதி ஆட்டத்திலும் இதே நிலை நீடித்தது.

ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0–0 என்ற நிலை இருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய கூடுதல் நேரமான 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தில் ஆட்டம் தொடங்கிய 3–வது நிமிடத்திலேயே பெல்ஜியம் கோல் அடித்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. 93–வது நிமிடத்தில் கெவின்டி புருனே இந்த கோலை அடித்தார்.

ரோமலு ஹாகு தட்டி கொடுத்த பந்தை அமெரிக்கா பின்கள வீரர்கள் 3 பேர் மற்றும் கோல் கீப்பரை ஏமாற்றி இந்த கோலை அவர் அருமையாக அடித்தார்.

தொடர்ந்து பெல்ஜியம் கையே ஓங்கி இருந்தது. 105–வது நிமிடத்தில் அந்த அணி 2–வது கோலை அடித்து அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்தது. இந்த முறை புருனே தட்டி கொடுத்த பந்தை ஹாகு கோலாக்கினார். இதன்மூலம் பெல்ஜியம் 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனால் அமெரிக்க அணி ஆவேசத்துடன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அடுத்த 2–வது நிமிடத்தில் அந்த அணி கோல் அடித்தது. 107–வது நிமிடத்தில் மாற்று வீரரான ஜூலியன் கிரீன் இந்த கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

2–வது கோலை அடித்து சமன் செய்ய அமெரிக்க ஆட்டத்தின் இறுதி வரை போராடியது. ஆனால் முடியவில்லை. இறுதியில் பெல்ஜியம் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தது.

அமெரிக்கா போராடி இந்த தோல்வியை அடைந்தது. அந்த அணி தொடர்ந்து 3–வது முறையாக 2–வது சுற்றில் தோற்று வெளியேற்றப்பட்டது.

பெல்ஜியம் அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கால் இறுதியில் நுழைந்துள்ளது. கடைசியாக 1986–ம் ஆண்டு உலக கோப்பையில் 4–வது இடத்தை பிடித்து இருந்தது.

அதன்பிறகு 3 உலக கோப்பையில் 2–வது சுற்று வரையே வந்தது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு கால் இறுதியில் முன்னேற்றம் கண்டுள்ளது. பெல்ஜியம் கால்இறுதியில் அர்ஜென்டினாவை எதிர் கொள்கிறது.

1986 உலக கோப்பை அரை இறுதியில் இந்த இரு அணிகளும் மோதி இருந்தன. இதில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இருந்தது.

இத்தாலி வீரரை கடித்த சுராசுக்கு தடை

உருகுவே அணியின் முன்னணி கால்பந்து வீரர் லுயிஸ் சுராஸ். உலகின் தலைசிறந்த வீரரான அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல் அடித்து முத்திரை பதித்து இருந்தார்.

இத்தாலிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சுராஸ் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்.

ஆட்டத்தின் 80–வது நிமிடத்தில் இத்தாலி பின்கள வீரர் சிலினியின் தோள்பட்டையில் சுராஸ் கடித்தார். டெலிவிசன் ரீபேளயில் இத்தாலி வீரரை அவர் கடிப்பது தெளிவாக தெரிந்தது.

நடுவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது அதை அவர் கவனிக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிலினியன் கடித்த பகுதியில் காயம் ஏற்பட்டதை காண்பித்தார்.

சுராஸ் கடித்த விவகாரம் குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பிபாவின் ஒழுங்கு நடவடிக்கை குழு சுராஸ் மீது அதிகாரபூர்வமான குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சுராசுக்கு எஞ்சிய போட்டிகளில் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தி நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு (பிரேசில் நேரம் மாலை 5 மணி) சுராஸ் மீதான தடை குறித்து அறிவிக்கப்படும்.

சுராஸ் எதிர் அணி வீரரை கடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2 தடவை இது மாதிரி கடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரிமீயர் ‘லீக்’ போட்டியில் இவானோவிக் என்ற வீரரை கடித்ததற்காக அவருக்கு 10 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நேரத்தில் டிரா செய்தது போர்ச்சுகல்

அமெரிக்காவுக்கு எதிரான உலக கோப்பதொடரின் லீக் போட்டியை போர்ச்சுகல் அணி ‘டிரா’ செய்தது. 

பிரேசிலில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ஜீ’ பிரிவு லீக் போட்டியில் போர்ச்சுகல், அமெரிக்கா அணிகள் மோதின. 

இதில் துவக்கம் முதல் அசத்திய போர்ச்சுகல் அணிக்கு நானி, போட்டியின் 5வது நிமிடத்திலே‌யே முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இதற்கு அமெரிக்க வீரர்களால் முதல் பாதியில் பதிலடி கொடுக்கமுடியவில்லை. 

பின் விறுவிப்பாக நடந்த இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க அணிக்கு ஜோன்ஸ் (64), டெம்ப்சே (81) ஆகியோர் இரட்டை அடி கொடுத்தனர். 

இதற்கு பதிலடி கொடுக்க மும்முரமாக போராடி போர்ச்சுகல் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்த‌ை மற்றொரு போர்ச்சுகல் வீரர் வரேலா (90+5) கடைசி நிமிடத்தில் தலையால் முட்டி கோலாக மாற்றினார். 

இதையடுத்து அமெரிக்காவின் வெற்றி வாய்ப்பு பரிபோனது. 

இறுதியில் போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது. 

தள்ளாடிய மரகானா மைதானம்

ரசிகர்கள் எடையை தாங்காமல், மரகானா மைதானத்தின் மாடிப்படிக்கட்டுகள் தள்ளாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக மொத்தம் பல மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டன. ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா உள்ளிட்ட பல மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டன. 

இங்கு கடந்த வாரம் அர்ஜென்டினா, போஸ்னியா அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதைக்காண 74,738 பேர் திரண்டனர். அப்போது ரசிகர்கள் சென்றுவர அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிக்கட்டுகள், பாரம் தாங்காமல் தள்ளாடியது.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்தவர்கள், மரத்தினால் ஆன இந்த படிக்கப்பட்டுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் காணப்பட்டனர்.

இதுகுறித்து மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் மார்டினஸ் கூறுகையில்,‘‘ ஆயிரக்கணக்கான மக்கள் இதில் நடந்து சென்ற போது, எப்படியும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்தேன்,’’ என்றார்.


வேலை முடியலை:

சிலியை சேர்ந்த மிரண்டா கூறுகையில்,‘‘ ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு டிக்கெட்டுகள் பெற, மரத்தினால் ஆன, படிக்கட்டுகளில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது, கட்டுமான பணியாளர்கள், ஆடிக்கொண்டிருந்த படிகளை ‘வெல்டிங்’ வைத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்,’’ என்றார்.


மீண்டும் சோதனை:

அதேநேரம், இம்மைதானத்தில் உள்ள முக்கிய நபர்கள் வந்து செல்லும் பகுதி, கான்கிரீட் தளத்தினால் இருந்தது. 

இதுகுறித்து ரியோ டி ஜெனிரோ மாநில அரசு வௌியிட்ட அறிக்கையில்,‘ எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் இவைகள் ஆய்வு செய்யப்பட்டன. ரசிகர்கள் பாதுகாப்பு கருதி, மறுபடியும் சோதனை செய்துள்ளோம்,’ என, தெரிவித்துள்ளது.

ஆஸ்கார் விருது விழாவை மிஞ்சிய உலக கோப்பை தொடக்க ஆட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை பற்றி ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் 5.8 கோடி கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. 

இது இந்த ஆண்டில் நடந்த ஆஸ்கார் விருது குறித்து பேஸ்புக்கில் கருத்துகளை பரிமாறியவர்களின் எண்ணிக்கையை விட 5 மடங்கு அதிகமாகும். பிரேசில் ‘ஹீரோ’ நெய்மார் அடித்த முதல் கோல் பற்றி தான் பெரும்பாலானோர் வர்ணித்துள்ளனர். 

இதே போல் சர்ச்சைக்கு மத்தியில் வழங்கப்பட்ட ‘பெனால்டி’ குறித்தும் அதிகமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.6 கோடி கருத்துகள் பிரேசிலில் இருந்து பதிவு செய்யப்பட்டவை. அடுத்த இடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளன.

உலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது.

ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

ஒவ்வொரு பிரிவில் உள்ள அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றான 2–வது சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து கால்இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டிக்கு அணிகள் முன்னேறும்.

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு தொகை வழங்கப்படும். கடந்த முறை உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட இது 17 சதவீதம் கூடுதலாகும்.

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 4927 கிராம் எடை கொண்ட தங்க கோப்பையும் வழங்கப்படும்.

2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.150 கோடியும், 3–வது இடத்தை பிடிக்கும் நாட்டுக்கு ரூ.132 கோடியும், 4–வது இடத்துக்கு ரூ.120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

கால் இறுதியில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2–வது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும், முதல் சுற்றில் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். கடந்த உலக கோப்பையில் (2010) வழங்கப்பட்ட பரிசு தொகையில் இருந்து 37 சதவீதம் கூடுதலாகும். 

கால்பந்து களத்தில் கங்குலி

 பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் கோல்கட்டா அணியை வாங்குவது தொடர்பாக கங்குலி, நடிகர் ஷாருக்கான் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, 41. கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் துவக்கப்பட்ட போது, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின், 48, கோல்கட்டா அணியில் இடம் பெற்றார்.             
            
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோல்கட்டா அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்டார். பின்,  2011ல்  புனே அணியில் இடம் பெற்றார். தற்போது பிரிமியர் தொடரில் பங்கேற்கவில்லை.  
                       
சிறுவயதில் கிரிக்கெட் தேர்வு செய்வதற்கு முன், கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தவர் கங்குலி. இந்தச்சூழலில், பிரிமியர் கிரிக்கெட் போல, இந்தியாவில் பிரிமியர் கால்பந்து தொடர் வரும் செப்டம்பரில் நடக்கவுள்ளது. 

மும்பை, கோல்கட்டா, டில்லி, பெங்களூரு, சென்னை, கவுகாத்தி, கோவா, கொச்சி உட்பட 9 நகரங்களை அடிப்படையாக கொண்டு, கால்பந்து அணிகள் இடம் பெறவுள்ளன.    
   
இந்த அணிகள் 10 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் விற்கப்படும். ஒவ்வொரு அணிக்கும் அடிப்படை விலை, ரூ. 120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    
   
கங்குலி ஆர்வம்: இதில் கோல்கட்டா அணியை வாங்குவதில் கங்குலி ஆர்வம் காட்டுகிறார். இதற்காக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) தலைவர் பிரபுல் படேலை சந்தித்து, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.                        

ஷாருக் போட்டி: 

அதேநேரம், பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணியை தன்வசம் வைத்துள்ள ஷாருக்கான், கோல்கட்டா கால்பந்து அணியையும் வாங்க திட்டமிட்டுள்ளார். இதை ஏ.ஐ.எப்.எப்., துணைத்தலைவர் சுப்ரட்டோ தத்தா உறுதி செய்தார்.            
            
ஏற்கனவே, பிரிமியர் அணி தொடர்பாக கங்குலி–ஷாருக் இடையே பிரச்னை உள்ளது. தற்போது கால்பந்து அணியை வாங்க இருவரும் கோதாவில் இறங்கியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அணியை வாங்கியவர்கள் விவரம் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும். அப்போது, கோல்கட்டா அணி யாருக்கு சொந்தம் என்பது தெரிய வரும்.

சகாப்தம் படைக்கும் இந்தியா

பிபா உலக கோப்பை (17 வயதுக்குட்பட்டோர்) தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்ததன் மூலம், புதிய சகாப்தம் உருவாகும்,'' என, இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி தெரிவித்தார்.
வரும் 2017ல் உலக கோப்பை கால்பந்து தொடரை (17 வயதுக்குட்பட்டோர்) நடத்தும் அரிய வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதை தங்களது மண்ணில் அரங்கேற்ற, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, உஸ்பெகிஸ்தான் நாடுகளும் போட்டியிட்டன. 

முடிவில், இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. "பிபா'வின் மிகப் பெரும் ஒரு தொடரை நடத்த இருப்பது இதுவே முதல் முறை. இது பல இளம் வீரர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை பாய்ச்சியுள்ளது. 

இது குறித்து இந்திய அணிக்கு அதிக கோல் (43 ) அடித்த செத்ரி கூறியது: இந்தியாவுக்கு உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தும் பெருமை கிடைத்தது மிகப்பெரியது. 

பல நாடுகள் போட்டியிட்டதன் முடிவில், நமக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி எனத் தெரியவில்லை. இதன் மூலம், புதிய சகாப்தம் உருவாகியுள்ளது. இது மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக திறமையான வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

நமது அணி முன்னாள் கேப்டன் பாய்ச்சங் (42 கோல்) பூட்டியாவின் சாதனையை முறியடித்துள்ளேன். 

இதை நான் மனதில் வைத்துக் கொள்வது கிடையாது. அணியின் வெற்றிக்காக மட்டும்தான் செயல்படுவேன். 

நான் பூட்டியாவின் தீவிர ரசிகன். அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள "பிபா' உலக கோப்பை தொடரில் ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் பலமானவை. இவ்வாறு செத்ரி கூறினார்.

யூரோ 2020 கோப்பையை நடத்த பல நாடுகள் விருப்பம்

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுஈஎப்ஏ அதன் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. 

பாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும். ஆனால், 2020 ஆம் ஆண்டுப் போட்டிகள் ஐரோப்பாவின் 13 நாடுகளில் பகிர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வருடம் கால்பந்துப் போட்டித் தொடரின் 60 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதால் போட்டி அமைப்புகளில் மாற்றத்தைப் பற்றி இந்தக் கழகம் சென்ற டிசம்பர் மாதமே முடிவெடுத்திருந்தது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு போலந்து மற்றும் உக்ரேன் நாடுகள் நிகழ்த்திய போட்டிகளின்போதே மாற்றங்கள் குறித்து யுஈஎப்ஏ தலைவர் மைக்கேல் பிளாட்டினி யோசனை தெரிவித்திருந்தார். 

சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவிடம் டிசம்பர் மாதம் ஒப்புதல் பெற்று இந்த வருடம் ஜனவரி மாதம் போட்டி நடத்தும் விதம் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. உறுப்பினர் நாடுகளின் கால்பந்து சங்கங்களில் இருந்து இந்த மாற்றத்திற்கு வந்த வரவேற்பு குறித்து தலைவர் மைக்கேல் பிளாட்டினி மகிழ்ச்சி தெரிவித்தார்.



யூரோ பார் யூரோப் என்ற இந்தத் திட்டத்தின் வடிவம் யூரோ சாம்பியனான ஸ்பெயின் மற்றும் பாரம்பரிய கால்பந்து போட்டி நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மனுக்கள் பெறுவதற்கான இறுதி நாளாக அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதியையும், போட்டி நடத்தும் நாடுகள் குறித்து தெரிவிக்க செப்டம்பர் 25 ஆம் தேதியையும் யுஈஎப்ஏ குறிப்பிட்டுள்ளது.

கால்பந்து தூதராக டோனி நியமனம்



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி தீவிர கால்பந்து ரசிகர் ஆவார். தனது பள்ளி பருவத்தில் கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்து விளையாடியவர். அதன்பின் கிரிக்கெட் மீது ஆர்வம் திரும்பியது.

தற்போது டோனியை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியின் இந்திய தூதராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி நிறுவனம் நியமித்து உள்ளது. 

இந்தியாவில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரை பிரபலபடுத்தும் விளம்பரங்களில் அவர் தோன்றுவார். 

கால்பந்து போட்டியுடன் இணையுங்கள் என்று ரசிகர்களை அழைக்க உள்ளார்.

இதுகுறித்து டோனி கூறுகையில், கிரிக்கெட் மீது ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் மற்ற விளையாட்டுகளையும் ரசிக்க வேண்டும். 

இதேபோல் மற்ற விளையாட்டுகளுக்கும் மதிப்பு தர வேண்டும் என்றார்.

உலகக் கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை

கிரீன் பார்க் மைதானம்
கால்பந்துப் போட்டி நடைபெறும் பிரமாண்ட மைதானங்களில் கேப் டவுனிலுள்ள கிரீன்பாயிண்ட் மைதானமும் ஒன்று. சிக்னல் ஹில் பகுதிக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் கேப்டன் டவுன் மையத்தில் அமைந்துள்ளது. 

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இந்த நகரில் இந்த கால்பந்து மைதானம் 2007-ம் ஆண்டில் கட்டத் துவங்கி 2009-ல் திறக்கப்பட்டது. 69,070 பேர் அமர்ந்து போட்டியை ரசித்துப் பார்க்கலாம்.

உலகக் கோப்பைப் போட்டிக்காகவே இந்த மைதானம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தையொட்டி 60 ஹெக்டேர் பரப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்திலிருந்து சற்று தொலைவில் கடற்கரை அமைந்துள்ளது. 

கடற்கரையையும், மைதானத்தையும் இணைக்கும் வகையில் சாலை அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 கால்பந்து ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் அரை இறுதி ஆட்டம் ஒன்றும் நடைபெறுகிறது.

மொம்பேலா மைதானம்

போட்டிகள் நடைபெறும் 10 மைதானங்களில் அழகாக வடிவமைக்கப்பட்ட மைதானங்களில் மொம்பேலா மைதானமும் ஒன்று. மேற்கு நெல்ஸ்புரூட் நகரில் அமைந்துள்ளது. கால்பந்து, ரக்பி போட்டிகளை இங்கு நடத்த முடியும். 2007-ம் ஆண்டு கட்டத் துவங்கி 2009-ம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டன. 43,589 பேர் அமர்ந்து ஆட்டங்களை ரசிக்க முடியும். 

கிருகர் தேசியப் பூங்கா அருகே இந்த மைதானம் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்கா, ஒட்டகச் சிவிங்கிகளுக்கு புகழ்பெற்றது. அதை நினைவுபடுத்தும் விதமாக மைதானத்தின் 18 கூரைகள் ஒட்டகச் சிவிங்கி போல வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மைதானத்துக்கு ஜிராபி ஸ்டேடியம் என்றும் பெயருண்டு. உலகக் கோப்பை கால்பந்தின் 4 ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளன.

எல்லிஸ் பார்க் மைதானம்

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அமைந்துள்ளது எல்லிஸ் பார்க் கால்பந்து மைதானம். இது 1929-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 62,567 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும். 7 உலகக் கோப்பை ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளன.

1948 முதல் 1954 வரை 6 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 1956-ம் ஆண்டு வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானம் துவங்கப்பட்ட பின்னர் இந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது நிறுத்தப்பட்டது. தற்போது இந்த மைதானத்தில் ரக்பி, கால்பந்து விளையாட்டுகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அவ்வப்போது திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோக-கோலா நிறுவனம் இந்த மைதானத்துக்கு ஸ்பான்ஸர் செய்வதால் இதற்கு கோக-கோலா மைதானம் என்ற பெயரும் உண்டு.

நெல்சன் மண்டேலா மைதானம்

தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது நெல்சன் மண்டேலா கால்பந்து மைதானம். தென்னாப்பிரிக்காவின் தன்னிகரில்லா தலைவர் நெல்சன் மண்டேலாவின் பெயரில் அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு கட்டத் துவங்கி 2009-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. நகரின் மையப் பகுதியில் அழகுற அமைந்துள்ளது. 

போட்டிக்காக கட்டப்பட்டுள்ள 3 கடற்கரையோர மைதானங்களில் இதுவும் ஒன்று. மைதானத்தின் அருகிலேயே நார்த் எண்ட் ஏரி கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. 48,459 ஆயிரம் பேர் அமர்ந்து இங்கு போட்டியை ரசிக்கலாம்.

கால்பந்து போட்டி மட்டுமல்லாமல் ரக்பி விளையாட்டையும் இங்கு நடத்தலாம். ஏராளமான ரக்பி, கால்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. உலககக் கோப்பை கால்பந்தின் 5 லீக் ஆட்டங்கள், கால் இறுதி, 3-ம் இடத்துக்கான ஆட்டங்கள் என மொத்தம் 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

உலகக் கால்பந்து தரவரிசை:147-வது இடத்தில் இந்தியா


உலகக் கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் புதன்கிழமை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆசியப் பிரிவில் இந்தியா 23வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரேசில், இங்கிலாந்து, ஆர்ஜெண்டீனா, குரோஷியா, ரஷியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

ஹரியாணாவுடன் தமிழகம் இன்று மோதல்

தமிழ்நாட்டில் நடைபெறும் 63-வது சந்தோஷ் கோப்பை தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன் போட்டியில் கிளஸ்டர் 7-ல் முதலிடம் பெற்ற ஹரியாணாவுடன் தமிழகம் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

சென்னையில் ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இப் போட்டி விடுமுறை ரசிகர்களுக்கு விருந்தளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளஸ்டர் 8-ல் இடம்பிடித்திருந்த தமிழ்நாடு, லீக் சுற்றில் தான் எதிர்கொண்ட ஒவ்வோர் அணியையும் ஒரு கோலும் அடிக்கவிடாமல் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய அடுத்த கட்ட சுற்றுக்கான பயிற்சி ஆட்டம் போல ஒவ்வோர் அணியையும் தோற்கடித்து முன்னேறியது. ராஜஸ்தான் அணியை 7-0 எனவும், இமாசலப் பிரதேசத்தை 11-0 எனவும், திரிபுராவை 5-0 எனவும் தோற்கடித்து வீறுநடை போட்டுள்ளது குலோத்துங்கன் தலைமையிலான தமிழ்நாடு.

மற்ற இடங்களில்: இதே போல கோவையில் நடைபெறும் போட்டியில் கேரளம்- மகாராஷ்டிரம் அணிகளும், திருச்சியில் மிசோரம்- கோவா அணிகளும், ரெட்ஹில்ஸ் விஸ்டம் டவுன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரயில்வே- மணிப்பூர் அணிகளும் விளையாடுகின்றன.

ஒவ்வோர் இடத்தில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், காலிறுதி ரவுண்ட் ராபின் லீக் சுற்றுக்கு முன்னேறும். காலிறுதி லீக் சுற்று முதல் அனைத்து போட்டிகளும் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பஞ்சாப், இரண்டாம் இடத்தைப் பிடித்த சர்வீசஸ், பெங்கால் மற்றும் கர்நாடகம் ஆகிய அணிகளுடன் இணைந்து 2 பிரிவாக லீக் முறையில் விளையாடும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளிலும், இறுதி ஆட்டம் 14-ம் தேதியும் நடைபெற உள்ளது.