Showing posts with label டென்னிஸ். Show all posts
Showing posts with label டென்னிஸ். Show all posts

சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் தொடர் இன்று ஆரம்பம்

இந்திய டென்னிஸ் வளர்ச்சிக்கு வித்திட காத்திருக்கும் சி.டி.எல்., தொடர் இன்று துவங்குகிறது.                  

கடந்த 2008ல் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற, இந்தியன் பாட்மின்டன் லீக், கபடி லீக்,  ஹாக்கி லீக், கால்பந்து லீக் தொடர்கள் துவங்கப்பட்டன. இந்த வரிசையில் தற்போது டென்னிசும் சேர்ந்துள்ளது.       
                             
முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் (சி.டி.எல்.,) என்ற பெயரில் புதிய தொடர் ஒன்றை உருவாக்கி உள்ளார். இத்தொடர் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடக்கிறது. 

இதில் மும்பை, ஐதராபாத், டில்லி, புனே, பெங்களூரு, பஞ்சாப் என 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிவிக்கப்பட்டு, ‘ரவுண்டு–ராபின்’ முறையில் போட்டிகள் நடத்தப்படும். 

ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை (உள்ளூர், வௌியூர்) மோதும். லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், வரும் நவ. 26ல் நடக்கும் பைனலில் மோதும். டில்லி, பஞ்சாப், மும்பை அணிகள் ஒரு பிரிவிலும், ஐதராபாத், பெங்களூரு, புனே அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.                   
ஒவ்வொரு அணியிலும், ஒரு முன்னாள் வீரர், ஒரு சர்வதேச வீரர், வீராங்கனை மற்றும் ஒரு இந்திய வீரர் இடம் பெற்றிருப்பர்.          
         
டில்லியில் இன்று நடக்கும் முதல் போட்டியில் டில்லி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் பஞ்சாப் அணிக்காக இந்தியாவின் லியாண்டர் பயஸ், சோம்தேவ் தேவ்வர்மன் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஜா விளையாடுகின்றனர். 

பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தமான ஸ்பெயின் வீரர் டேவிட் பெடரர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. டில்லி அணிக்காக செர்பிய வீராங்கனை ஜெலினா ஜான்கோவிச், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், இந்தியாவின் சனம் சிங் விளையாடுகின்றனர்.  
                
ஐதராபாத்தில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இதில் பெங்களூரு அணிக்காக அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ் பங்கேற்கின்றனர். 

ஐதராபாத் அணியில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ரஷ்யாவின் மைக்கேல் யூஸ்னி உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.                  

ரோஜர் பெடரர் சாம்பியன்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டிநகரில் ஏ.டி.பி.,சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன்ஒற்றையர் பைனலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நோவக் டோகோவிச்சை சந்தித்தார். விறுவிறுப் பான பைனலின் முதல் செட்டை பெடரர் 6-1 என கைப்பற்றினார்.

தொடர்ந்து அபாரமாக ஆடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-5 என சற்று போராடி தன்வசப்படுத்தினார். இறுதியில் பெடரர் 6-1, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் இத்தொடரில் மூன்றாவது முறையாக (2005, 2007, 2009) சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர். இரட் டையர் பைனலில் கனடாவின் டேனியல் நெஸ்டர், செர்பியாவின் நினாட் ஜிமோன் ஜிக் ஜோடி, அமெரிக்காவின் பாப், மைக் பிரையான் ஜோடியை 3-6, 7-6, 15-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.

வரலாறு படைத்தார் ஃபெடரர்!

பதினைந்தாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.

இது அவருக்கு 6-வது விம்பிள்டன் பட்டமாகியுள்ளது.

ஃபெடரருக்கும், அமெரிக்காவின் ஆன்டி ராடிக்கிற்கும் இடையே விம்பிள்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டம் ரசிகர்களுக்கு மிகவும் விருந்து படைத்திருந்தது.

4 மணி 15 நிமிடம் நீடித்த மெகா போட்டியில் 5-7, 7-6 (8-6), 7-6 (7-5), 3-6, 16-14 என்ற செட்களில் வெற்றியைச் சுவைத்தார் 27 வயதாகும் ஃபெடரர்.

கடைசி செட் ஆட்டம், இதுவரையிலான விம்பிள்டன் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நடைபெற்றதாக அமைந்தது.

முதல் செட்டை 7-5 என கைப்பற்றி ஃபெடரருக்கு அதிர்ச்சி அளித்த ராடிக், அதன்பிறகும் சளைக்காமல் போராடினார். இரண்டாவது செட்டையும் கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பை பெற்றிருந்தார். 4 முறை செட் பாய்ண்டுகளைப் பெற்றிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அதை இழந்தார்.

இம்முறை விம்பிள்டனில் பட்டம் வென்று சாதனை படைக்கத் துடித்த பிரிட்டன் வீரர் ஆன்டி முரேவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மேற்கொண்ட உத்தியையே ஃபெடரருக்கு எதிராகவும் மேற்கொண்டார். ஆனால் பலத்த அனுபவமுடைய ஃபெடரர் பட்டத்துக்குரியவரானார்.

இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 2003 யு.எஸ்.ஓபனில் வென்றுள்ள ராடிக், 2004, 2005 ஆகிய ஆண்டுகளில் நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும் ஃபெடரரிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

நம்பர்-1 ஆனார்: இந்த வெற்றி மூலம் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலிடமிருந்து உலகின் நம்பர்-1 வீரர் என்ற அந்தஸ்தையும் ஃபெடரர் பெற்றார். கடந்த ஆண்டு போட்டியில் நடாலிடம் 5 செட்களில் ஃபெடரர் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு காயம் காரணமாக திடீரென நடால் விலகிக்கொண்டார்.

சாதனை: அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்துவந்தது. அதை, தற்போது ஃபெடரர் முறியடித்துள்ளார்.

6 முறை விம்பிள்டன், 5 முறை யு.எஸ். ஓபன், 3 முறை ஆஸ்திரேலிய ஓபன், ஒரு முறை பிரெஞ்ச் ஓபன் என கிராண்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார்.

ஃபெடரரின் சாதனை வெற்றியைக் காண பீட் சாம்ப்ராஸ், ராட் லேவர், ஜான் போர்க் ஆகியோரும் அரங்கிற்கு வந்திருந்தனர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மனைவியுடன் ஆட்டத்தை ரசித்தார்.

ஷரபோவா, ஷுட்லருக்கு அதிர்ச்சி: சானியா மிர்சா தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ஜெர்மனி வீரர் ரெய்னர் ஷுட்லர், ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினர்.
புதன்கிழமை நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் இடம் பெறாத இஸ்ரேல் வீரர் டுடி செலா 7-6 (7-3), 6-3, 6-2 என்ற நேர் செட்டுகளில் ஷுட்லரை வெளியேற்றினார்.
தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ளவர் ஷுட்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் 28-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா 6-4, 6-4 என இந்தியாவின் சானியா மிர்சாவை வீழ்த்தினார்.
தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள ஷரபோவா 2-6, 6-3, 4-6 என தரவரிசையில் இடம்பெறாத ஆர்ஜென்டீனா வீராங்கனை ஜிசெலா டுல்கோவிடம் அதிர்ச்சித் தோல்வியுற்றார்.
இத்தாலி வீரர் சிமோன் பொலெலி காயம் காரணமாக விளையாடாததால் பிரான்ஸ் வீரர் ஜோ-வில்பிரட் சோங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ரஷியாவின் நடியா பெட்ரோவா 6-3, 6-2 என எளிதாக இஸ்ரேலின் ஷாஹர் பீரைத் தோற்கடித்தார்.
தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள டொமினிகா சிபுல்கோவா 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் போலந்தின் உர்சுலா ராட்வன்ஸ்காவை வீழ்த்தினார்.
தரவரிசையில் இடம் பெறாத ஸ்லோவேகிய வீராங்கனை டேனியலா ஹான்டுகோவா 6-3, 7-5 என தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஜீ ஜெங்கை வென்றார்.
ஜப்பானைச் சேர்ந்த மூத்த வீராங்கனை அய் சுஜியாமா 7-6 (7-5), 6-3 என ஸ்பெயினின் அரண்ட்சா பாரா சன்டோன்ஜாவைத் தோற்கடித்தார்.


20 இடங்கள் முன்னேறினார் சானியா


பர்மிங்காமில் நடைபெற்ற ஏகான் கிளாஸிக் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் விளையாடியதால், உலக டென்னிஸ் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார் இந்தியாவின் சானியா மிர்சா.

அப் போட்டிக்கு முன்னர் 98-வது இடத்தில் இருந்த அவர், தற்போது 78-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டையர் பிரிவில் 2 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தைப் பிடித்துள்ளார்

காலிறுதியில் மன்கட் ஜோடி


அமெரிக்காவில் உள்ள லாங்போட் கீ என்ற இடத்தில் நடைபெறும் சரசோடா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் ஹர்ஷ் மன்கட், அமெரிக்காவின் கையஸ் வான்ட் ஹாஃப் ஜோடி தகுதி பெற்றது.

முதல் சுற்று ஆட்டத்தில், இப்போட்டியின் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள மன்கட் ஜோடி 6-3, 6-2 என்ற கணக்கில் செர்பியாவின் விளாதிமீர் ஓப்ராடோவிக், செக். குடியரசின் ஆடம் வெஜ்மெல்கா ஜோடியை வெளியேற்றியது.

காலிறுதியில் அமெரிக்காவின் பிராஸ்வெல், டெரெக் மைர்ஸ் ஜோடியை மன்கட் ஜோடி எதிர்கொள்கிறது.