இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி கிங்ஸ்டன் நகரில் இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் சந்தித்த தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கிங்ஸ்டன் நகரில் இன்று நடக்கிறது.
ரோகித் நம்பிக்கை:
முதல் மூன்று போட்டியில் அசத்திய இந்திய அணி, நான்காவது போட்டியில் சறுக்கியது. இன்று எழுச்சி காண வேண்டும். இதுவரை நான்கு போட்டிகளில் 200 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா, "மிடில்-ஆர்டரில்' நம்பிக்கை அளிப்பது பலம். துவக்க வீரராக பார்த்திவ் படேல் சிறப்பாக செயல்படுகிறார். இவருக்கு மனோஜ் திவாரி, ஷிகர் தவான் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. விராத் கோஹ்லி, பத்ரிநாத், ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் அசத்தினால், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
மிஸ்ரா அபாரம்:
இந்திய அணியின் மிகப் பெரிய பலம் சுழற்பந்துவீச்சு. கடந்த நான்கு போட்டிகளில் ஒன்பது விக்கெட் வீழ்த்தியுள்ள சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருக்கு ஹர்பஜன் சிங், அஷ்வின் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேகத்தில் முனாப் படேல், பிரவீண் குமார் நம்பிக்கை அளிக்கின்றனர்.
சர்வான் ஆறுதல்:
வெஸ்ட் இண்டீஸ் அணி சிறந்த துவக்கம் இல்லாமல் திணறுகிறது. கடந்த போட்டியில் அரைசதம் கடந்த சிம்மன்ஸ் இன்றும் சாதிக்கலாம். கடந்த நான்கு போட்டிகளில் 141 ரன்கள் எடுத்துள்ள அனுபவ வீரர் சர்வான், ஓரளவு ஆறுதல் அளிக்கிறார். போலார்டு, கார்ல்டன் பாக், ஆன்ட்ரூ ரசல் உள்ளிட்டோர் அதிரடியாக எழுச்சி கண்டிருப்பது பேட்டிங் பலத்தை அதிகரித்துள்ளது. இவர்களுடன் டேரன் பிராவோ, சாமுவேல்ஸ் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.
மார்டின் துல்லியம்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சில் கேப்டன் டேரன் சமி நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு ஆன்ட்ரூ ரசல், ரவி ராம்பால், கீமர் ரோச் உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்லது. சுழலில் தேவேந்திர பிஷூ சிறப்பாக செயல்படுகிறார்.
கடந்த போட்டியில் விக்கெட் மழை பொழிந்த அந்தோனி மார்டின், இன்றும் சுழலில் சாதிக்கும் பட்சத்தில் இரண்டாவது வெற்றியை பெறலாம்.
இப்போட்டியில் கிடைக்கும் வெற்றி, அடுத்து வரவுள்ள டெஸ்ட் தொடருக்கு மனரீதியாக உற்சாகம் அளிக்கும் என்பதால், இரு அணிகளும் முழுத்திறமையை வெளிப்படுத்தலாம்.
----
----
கெய்ல் இல்லை
ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கிர்க் எட்வர்ட்ஸ், ஹயாத் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக அட்ரியன் பரத், ரவி ராம்பால் இடம் பிடித்துள்ளனர். நட்சத்திர துவக்க வீரர் கிறிஸ் கெய்லுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
0 comments:
Post a Comment