நழுவியது நம்பர்-1

ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் "நம்பர்-1' இடத்தை இழந்தார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.

இதில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காததால், இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (873 புள்ளி), "நம்பர்-1' இடத்தை இழந்தார். இதன்மூலம் தென் ஆப்ரிக்க "ஆல்-ரவுண்டர்' காலிஸ் (883 புள்ளி) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.


டிராவிட் முன்னேற்றம்:

இந்தியாவின் டிராவிட், ஒன்பது இடங்கள் முன்னேறி 20வது இடம் பிடித்தார். இதற்கு, சமீபத்தில் ஜமைக்காவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டதே காரணம்.

முதல் இன்னிங்சில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் ரெய்னா, 26 இடங்கள் முன்னேறி 61வது இடம் பிடித்தார். முதல் டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத லட்சுமண் (13வது இடம்), கேப்டன் தோனி (38வது இடம்) உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் பின்னடைவை சந்தித்தனர்.


இஷாந்த் அபாரம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மூன்று இடங்கள் முன்னேறி 11வது இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் ஆறு விக்கெட் வீழ்த்தியதே இம்முன்னேற்றத்துக்கு காரணம்.

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன், இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சுவான், வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்டோர் "டாப்-3' வரிசையில் உள்ளனர்.

0 comments:

Post a Comment