இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் வரை ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க வேண்டும்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் சமீபத்தில் இந்தியாவில் நடந்தது. இதற்கான வீரர்கள் ஏலத்தில், முதல் மூன்று தொடர்களில் கோல்கட்டா அணிக்காக விளையாடிய சவுரவ் கங்குலி புறக்கணிக்கப்பட்டார்.
பின் ஆஷிஸ் நெஹ்ரா காயம் காரணமாக விலகியதால், புதிதாக இடம் பெற்ற புனே வாரியர்ஸ் அணியில் கடைசி கட்டத்தில் வாய்ப்பு பெற்றார். இதில் மூன்று போட்டிகளில் பங்கேற்ற இவர், மொத்தம் 50 ரன்கள் எடுத்தார்.
இதுகுறித்து கங்குலி கூறியதாவது:
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் வரை ஐ.பி.எல்., தொடரில் விளையாட விரும்புகிறேன்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் எனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதை இன்றும் மறக்க முடியாது. ஏனெனில் இப்போட்டியில் சதம் கடந்ததன் மூலம், இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதேபோல ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கான்பூரில் 90 ரன்கள் எடுத்தது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக கருதுகிறேன்.
நான் எதிர்கொண்ட பவுலர்களில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் பந்துவீச்சு சவால் நிறைந்ததாக இருக்கும். இவரது பந்துவீச்சை சந்திப்பது எளிதான காரியமல்ல. இந்தியாவை பொறுத்தவரை ஜாகிர் கான், ஜவகல் ஸ்ரீநாத் உள்ளிட்டோரின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும்.
"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுடன் நிறைய போட்டிகளில் விளையாடியதை மறக்க முடியாது. சச்சின், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். இதேபோல
சேவக், சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு கங்குலி கூறினார்.
0 comments:
Post a Comment