சொன்னதை செய்வது தான் சச்சினின் சிறப்பம்சம். தனது பிறந்தநாளில் கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக, புனேயில் உள்ள ராணுவ வீரர்களின் மறுவாழ்வு மையத்திற்கு சென்றார்.
அங்கே உடல்நலம் பாதிக்கப்பட்ட வீரர்களுடன் உணர்ச்சிகரமாக உரையாடினார். ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார். அந்த நாள் சச்சின் வாழ்வில் மறக்க முடியாததாக அமைந்தது.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனைகளை படைத்த இவருக்கு, ராணுவப் பணிகளில் ஆர்வம் அதிகம். இவரது விருப்பத்துக்கு ஏற்ப, இந்திய விமானப் படையின் கவுரவ "குரூப்' கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து ராணுவ விஷயங்களில் அக்கறை காட்டிய இவர், போரில் ஊனமுற்ற வீரர்கள், புனே அருகே உள்ள காட்கி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருவதை கேள்விப் பட்டார். தனது 38வது பிறந்தநாளின் போது, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் அவர்களுடன் பேசினார்.
அப்போது மிக விரைவில் நேரில் சந்திப்பதாக உறுதி அளித்தார். இதற்கேற்ப, சமீபத்தில் அந்த மையத்துத்கு திடீரென வருகை புரிந்தார். சச்சினை கண்டதும் அங்கிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
இங்குள்ள சிலர் ஊனமுற்றோருக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் விளையாடிய கூடைப்பந்து போட்டியை சச்சின் ரசித்து பார்த்தார். இம்மையத்தில் சுமார் 2 மணி நேரம் செலவிட்ட இவர், தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொருவரின் விருப்பத்தையும் நிறைவு செய்தார். தனது கையெழுத்திட்ட "கிளவ்ஸ்களை' பரிசாக வழங்கினார். இவரிடம் ஆர்வத்துடன் "ஆட்டோகிராப்' பெற்றனர். பின் அனைவரும் சேர்ந்து "போட்டோ' எடுத்துக் கொண்டனர்.
உதவி உறுதி:
வில்வித்தை வீரர் அமோல் போரிவாலே, இத்தாலி சென்று பாரலிம்பிக் தகுதிப் போட்டியில் பங்கேற்க விரும்பினார். இதற்கான செலவை ஏற்றுக் கொள்வதாக சச்சின் கூறினார். தொடர்ந்து இரண்டு பெட்டிகள் நிறைய தான் கொண்டு வந்த மாம்பழங்களை வீரர்களுக்கு கொடுத்தார்.
சச்சின் கையால் பெற்றது என்பதால், மாம்பழங்களின் சுவையும் அதிகரித்தது; வீரர்களின் மனதில் மகிழ்ச்சியும் கரை புரண்டு ஓடியது. இது குறித்து அமோல் கூறுகையில்,""சச்சினை நேரில் சந்திப்பேன் என கனவிலும் நினைக்க வில்லை. மிகவும் எளிமையானவராக இருக்கிறார்.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிக்கான செலவை பற்றி கவலைப்படாமல், பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார்,''என்றார்.
அந்த இனிய தருணத்தில் உணர்ச்சிகரமாக சச்சின் கூறியது:
உங்களுக்கு கொடுத்த வாக்கின்படி நேரில் சந்திக்க வந்தேன். உங்களது மனவலிமையை கண்டு பெருமிதம் கொள்கிறேன். கோடிக்கணக்கான ரசிகர்கள் விளையாட்டு உலகின் "ஹீரோ'வாக என்னை போற்றுகின்றனர். உண்மையில், நாட்டு மக்களை பாதுகாக்கும் ராணுவத்தினரே நிஜ "ஹீரோக்கள்'. விளையாட்டு வீரர்கள் மக்களை மகிழ்விப்பவர்கள் தான்.
உலக கோப்பை வெல்ல வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்தீர்கள். உங்களது வாழ்த்துக்கள் கைகொடுக்க, நாங்கள் கோப்பை வென்று சாதித்தோம். மீண்டும் இங்கு வர விரும்புகிறேன். அடுத்த முறை வரும்போது எனது குழந்தைகளையும் அழைத்து வருவேன்.
இவ்வாறு உற்சாகமாக கூறினார் சச்சின்.
0 comments:
Post a Comment