தோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், பொறுப்பில்லாமல் விளையாடியதே தோல்விக்கு காரணம்,'' என, இந்திய அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா குற்றம் சுமத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டியில் வென்ற ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, தொடரை கைப்பற்றியது. நேற்று முன் தினம் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது


இது குறித்து ரெய்னா கூறியது:

நான்காவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். குறிப்பாக பேட்டிங் "பவர்பிளேயை' நன்கு பயன்படுத்தி ரன்கள் குவித்தனர். உண்மையை சொல்வதென்றால், எங்களது பேட்ஸ்மேன்கள் தான் சரியான முறையில் விளையாடவில்லை. தவறான "ஷாட்களை' தேர்வு செய்தனர்.


பேட்டிங் சரியில்லை:

எங்களது துவக்கம் முதலில் நன்றாக இருந்தது. பின் வந்த வீரர்கள் இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர். 250 ரன்கள் என்ற இலக்கை விரட்டிக்கொண்டிருக்கும் போது, களத்தில் பேட்ஸ்மேன்கள் இருந்திருக்க வேண்டும். ரோகித் சர்மாவுடன் நானும், யூசுப் பதானும் சரியான முறையில் "பார்ட்னர்ஷிப்' அமைக்கவில்லை. விரைவில் அவுட்டாகி விட்டோம்.


எதிரணிக்கு பாராட்டு:

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அந்தோனி மார்டின் பந்துகளை, அடித்து விளையாடத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், ரன்சேர்க்க முடியவில்லை. இதனால் தான் தோல்வியடைய நேரிட்டது. இந்த வெற்றியின் மூலம், அவர்கள் சிறப்பான முறையில் மீண்டு வந்துள்ளனர்.
வெற்றிக்கு பாடுபடுவோம்:

ஜமைக்காவில் நடக்கும் கடைசி போட்டியில் சிகர் தவான், பத்ரிநாத், யூசுப் பதான் ஆகியோர் மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். இங்கு எங்களது கூட்டணி எப்படி நன்கு செயல்படுகின்றது என்று பார்க்க உள்ளோம். ஏனெனில் இங்குதான் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதில் முடிந்தவரை திறமை வெளிப்படுத்துவோம். சரியான அளவில் பவுலிங் செய்ய முயற்சிக்கும் அதேநேரம், பேட்டிங்கிலு<ம் சிறப்பான "பார்ட்னர்ஷிப்' அமைக்க பாடுபடுவோம்.


பாடம் கற்றேன்:

போட்டிகளில் நமது அணியின் திறமைக்கு ஏற்ப எப்படி விளையாடுவது, போட்டியை நமக்கு சாதகமாக மாற்றுவது, சிக்கலான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வருவது எப்படி போன்ற விஷயங்களை முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இது தான் தற்போது பலன் தருகிறது.

இவ்வாறு ரெய்னா கூறினார்.


"ஷார்ட் பிட்ச்' பலவீனமா?

கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் அவுட்டாகினர். ஆனால் இதை ஒத்துக்கொள்ள மறுத்த இந்திய அணி பவுலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியது:

"ஷார்ட் பிட்ச்' பந்துகளால் இந்திய அணிக்கு பிரச்னை என்று நினைக்கவே இல்லை. இந்திய வீரர்கள் சரியாக எதிர்கொள்ளவில்லை. எளிதாக விட்டுவிட்டனர் என்பது தான் உண்மை. இஷாந்த் சர்மாவை கடந்த ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக செயல்பட்டார். வலைப் பயிற்சியிலும் நேர்த்தியாக பவுலிங் செய்தார். போட்டியிலும் நன்றாகத்தான் செயல்பட்டார்.

பொதுவாக எங்களது பவுலர்களின் திறமைக்கு ஏற்ப, திட்டமிட்டுத் தான் விளையாடுகின்றோம். புதியதாக முயற்சித்து பார்க்கும் எண்ணம் எதுவுமில்லை. எங்களால் முடிந்தவரை இரண்டு பக்கங்களில் இருந்தும் நெருக்கடி கொடுத்து, விக்கெட் வீழ்த்த முயற்சிக்கிறோம்.

இவ்வாறு எரிக் சிம்மன்ஸ் கூறினார்.


இந்திய அணிக்கு முதல் தோல்வி

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி, நேற்று முன்தினம் ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது.

சற்றுக் கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். மற்றபடி பார்த்திவ் படேல் (26), விராத் கோஹ்லி (22), அஷ்வின் (15) நிலைக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரெய்னா (10), யூசுப் பதான் (1) அணியை கைவிட, இந்திய அணி 39 ஓவரில் 146 ரன்களுக்கு சுருண்டு, 103 ரன்கள் வித்தியாசத்தில், தோல்வியடைந்தது.


ரோகித் சர்மா அதிகம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில், இதுவரை நடந்த போட்டிகளில் 200 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றார் ரோகித் சர்மா.

* இரு அணிகள் இடையிலான தொடரில் முதன் முறையாக ரோகித், இந்த ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியாவின் சேவக் (237), முகமது கைப் (205) இந்த இலக்கை கடந்துள்ளனர்.

* கரீபிய மண்ணில் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக, இந்திய அணி அடைந்த மிகப்பெரிய தோல்வி இது தான். இதற்கு முன் 1989ல் ஜார்ஜ்டவுன் போட்டியில், 101 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

* இரு அணிகள் இடையிலான தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற அஜித் அகார்கரின் (9 விக்.,) சாதனையை முறியடிக்க, அமித் மிஸ்ராவுக்கு இன்னும் ஒரு விக்கெட் தான் தேவை.

0 comments:

Post a Comment