தற்போது 100 சதவீதம் குணமடைந்துள்ளேன். எதிர்வரும் இங்கிலாந்து எதிரான தொடருக்கு தயாராக உள்ளேன்,'' என, இந்திய வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த உலககோப்பை தொடரில் 362 ரன்கள் எடுத்து, 15 விக்கெட் வீழ்த்திய யுவராஜ் சிங், சுவாச தொற்று காரணமாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. இது குறித்த யுவராஜ் சிங் கூறியது:
உலக கோப்பை தொடருக்கு முன்பாக, காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டது மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த காலம் தான் எனது வாழ்வின் சோதனையான நேரம். இந்த நேரத்தில் முக்கியமான விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
இத் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பது எனது முக்கிய லட்சியம். ஒருவழியாக அணியில் இடம் பெற்று, உலக கோப்பை தொடரில் சாதித்து கோப்பை வென்றது மகிழ்ச்சியாக இருந்தது. நீண்ட நாளைய கனவை, நனவாக மாற்றியதுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். உலக கோப்பை வென்றது எங்களது மிகப்பெரிய சாதனை.
தயாராக உள்ளேன்:
இதன் பின் ஏற்பட்ட சுவாச தொற்று காரணமாக வெஸ்ட்இண்டீஸ் தொடரில் பங்கேற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது. தற்போது இதிலிருந்து 100 சதவீதம் குணமடைந்து இங்கிலாந்து தொடருக்கு தயாராக உள்ளேன். எனது மருத்துவ சான்றிதழை பி.சி.சி.ஐ.,க்கு விரைவில் அனுப்புவேன்.
ரசிகர்கள் ஆதரவு:
இங்கிலாந்து தொடரில் நிச்சயமாக கலந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதேபோல, மற்ற சீனியர் வீரர்களும் தயாராகி விடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
கோல்கட்டாவின் ஈடன் கார்டனில், மீண்டும் போட்டிகள் நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வேறெந்த மைதானத்திலும் பார்க்க முடியாத, வித்தியாசமான உணர்வை ஈடன் கார்டனில் காணலாம். அந்தளவுக்கு ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தருவார்கள்.
வீரர்களுக்கு பாராட்டு:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பேட்டிங்கில் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இருவரும் இணைந்து அருமையாக செயல்பட்டனர். அமித் மிஸ்ரா, முனாப் பவுலிங்கில் முத்திரை பதித்தனர். ஒரு சில வீரர்கள் சிறப்பாக செயல்படாததால் தான் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி கிடைத்தது.
நான் டி.ஆர்.எஸ்., முறைக்கு சாதகமாகவோ, எதிராகவோ எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. என்னுடைய வேலை கிரிக்கெட் விளையாடுவது தான். இதனை பற்றி முடிவு எடுப்பது அல்ல. எந்த முறையாக இருந்தாலும் அது நியாமானதாக இருக்க வேண்டும்.
கங்குலி இதற்கு முன் நிறைய வெற்றிகளை கொடுத்துள்ளார் கங்குலி. அவரைப்பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஐ.பி.எல்., தொடரில் சாதிக்காத நாங்கள், அடுத்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை நிரூபிப்போம்.
இவ்வாறு யுவராஜ் கூறினார்.
0 comments:
Post a Comment