கிரிக்கெட்டின் சிறந்த வீரர் சச்சின், விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும். இது தான் எனது கனவாக உள்ளது,'' என, 100 மீ., உலக சாம்பியன் உசைன் போல்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்து வருபவர் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதேபோல, தடகள உலகில் சாதனை வீரராக இருப்பவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். "மின்னல் மனிதன்' என்றழைக்கப்படும் இவர் 100 மீ., ஓட்டத்தை 9.58 வினாடியில் கடந்து, உலக சாதனை படைத்துள்ளார்.
தவிர, ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடரில், தங்கம் வென்றுள்ளார். இம்முறை சச்சின் வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்தால், கிங்ஸ்டன் ஜமைக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்று இருப்பார். சச்சின், ஓய்வில் இருப்பதால் இது நடக்கவில்லை.
இதனிடையே சச்சின் குறித்து, ஜமைக்காவின் உசைன் போல்ட் கூறியது:
நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில், என்னைப் பொறுத்தவரையில் சச்சின் தான் சிறந்த வீரர். கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்துள்ள இவர், களத்தில் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துவார். இவரது விளையாட்டை நேரில் காணும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.
இதுதான் எனது நீண்ட நாளைய கனவாக உள்ளது. இவர் ஜமைக்காவில் விளையாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதேபோல, தோனியும் சிறந்த வீரர். இவரும் களத்தில் போராடுவதில் வல்லவர். இவரது ஆட்டத்தையும் காணவேண்டும்.
கெய்லுக்கு பாராட்டு:
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. எனது விருப்பமான வீரரான இவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புகின்றேன்.
இந்தியா வருவேன்:
இந்தியாவில் எனக்காக அதிக ரசிகர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். எனக்கு ஆதரவளித்து வரும் இவர்களுக்கு நன்றி. காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காத நான், எப்படியும் இந்தியா வருவேன் என்று நம்புகிறேன்.
வரும் ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவில் துவங்கும் உலக சாம்பியன்ஷிப் தொடர் எனக்கு விருப்பமானது. எனது முழுக்கவனத்தையும் செலுத்தி, இங்கு சிறப்பாக செயல்பட உள்ளேன் என்றார்.
0 comments:
Post a Comment