கேள்விக்குறியானது கெயிலின் எதிர்காலம்?

கடந்த மாதம் வானொலிக்கு அளித்த பேட்டியில் கிரிக்கெட் வாரியம் குறித்து சில கருத்துகளை கெயில் கூறியிருந்தார். அவரது கருத்துகளால் கோபமடைந்த கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு எதிரான ஒரு தினத் தொடரில் அவருக்கு இடம் அளிக்கவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அதிரடி வீரர் கிறிஸ் கெயில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூன் 20-ல் தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறுவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையேயான கூட்டம் கிங்ஸ்டனில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கெயிலுடன் வீரர்கள் சங்கத் தலைவர் தினாநாத் ராம்நாராயண், துணைத் தலைவர் வேவல் ஹைண்ட்ஸ் ஆகியோரும், வாரியத்தின் தரப்பில் தலைமை நிர்வாக அதிகாரி எர்னஸ்ட் ஹிலாரே, கிரிக்கெட் இயக்குநர் டோனி ஹோவர்ட், தலைமைப் பயிற்சியாளர் ஓட்டீஸ் கிப்சன், மேலாளர் ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காரசாரமான விவாதத்துடன் மோதல் வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் ஹிலாரேயை ராம்நாராயண் தாக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது

ஐ.பி.எல்.லில் கொடுக்கப்படும் பணத்துக்கு ஈடாக பணம் அளித்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாடுவேன் என கெயில் கூறியதிலிருந்து பிரச்னை துவங்கியதாகக் கூறப்படுகிறது.

4 மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடைபெற்றும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிறிஸ் கெயில் பங்கேற்பது சாத்தியமில்லாததாகிவிட்டது என கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்ததாக "டிரினிடாட் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: கெயிலுக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வீரர்கள் கருத்து தெரிவித்தனர். அவரது கருத்தை கடந்த கால நிகழ்வாகக் கருதி அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும் என வீரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கெயிலின் கருத்து வாரியத்தையும், அதிகாரிகளையும் அவமானப்படுத்தும் விதத்தில் இருந்தது. எனவே, அவர் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என வாரிய அதிகாரிகள் கூறினர்.

"ரீடெய்னர்' ஒப்பந்தத்தில் கெயில் கையெழுத்திட்டால்தான் கேப்டன் பதவிக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படும் என வாரியம் உறுதிபடத் தெரிவித்தது. ஆனால், அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்பதில் கெயிலும் உறுதியாக இருந்ததால் பிரச்னை அதிகரித்தது என்றார்.

இப்போதைக்கு இருதரப்பும் சந்திக்க திட்டமிடப்படாததால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கெயில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

0 comments:

Post a Comment