டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் சமீபத்திய எழுச்சிக்கு "டெயிலெண்டர்கள்' முக்கிய காரணம். ஹர்பஜன், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் கடைசி கட்டத்தில் கைகொடுக்கின்றனர். இவர்களது அசத்தல் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் நீடிப்பதால், கேப்டன் தோனி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிநடை தொடர்கிறது. கடந்த 22 போட்டிகளில் 12 வெற்றி, 7 "டிரா' மற்றும் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக டெஸ்டில் தோனி தலைமையிலான நமது "நம்பர்-1' இடத்தில் உள்ளது.
சில போட்டிகளில் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினாலும் கூட, பின் வரிசையில் களமிறங்கும் "டெயிலெண்டர்கள்' அணியை கரை சேர்த்து விடுகின்றனர்.
சமீபத்தில் ஜமைக்காவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து தத்தளித்தது. இந்த நேரத்தில் பொறுப்பாக ஆடிய ஹர்பஜன்(70), ரெய்னாவுடன் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்க்க உதவினார். இதே போல இரண்டாவது இன்னிங்சில் அமித் மிஸ்ரா(28) கைகொடுத்தார். இவரும் டிராவிட்டும் சேர்ந்து 9வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜாகிர் அபாரம்:
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த பரபரப்பான டெஸ்ட் போட்டிகளை பார்த்தால், "டெயிலெண்டர்களின்' பங்கு தெளிவாக புரியும். இவர்கள் பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தியுள்ளனர். 2010ல் கிங்ஸ்மீட்டில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து திணறியது.
அப்போது 8வது விக்கெட்டுக்கு ஜாகிர் கான்(27) கைகொடுக்க, லட்சுமண்(96) வெற்றியை உறுதி செய்தார். கடந்த ஆண்டு மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 216 ரன்கள் தேவைப்பட்டன.
ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் என்ற படுமோசமான நிலையில் இருந்தது. இந்த நேரத்தில் இஷாந்த் சர்மா(31) துணிச்சலாக ஆடினார். மறுபக்கம் லட்சுமண்(73) வழக்கம் போல அசத்தினார். பிரக்யான் ஓஜாவும்(5) தனது பங்களிப்பை உறுதி செய்ய, இந்தியா ஒரு விக்கெட்டில் "திரில்' வெற்றி பெற்றது.
பின் கொழும்புவில், கடந்த ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் அபிமன்யு மிதுன்(46), அமித் மிஸ்ராவின்(40) அபார ஆட்டம், அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.
ஹர்பஜன் சதம்:
வெற்றி மட்டுமல்ல, தோல்வியின் விளிம்பில் இருந்தும் இந்திய அணியை "டெயிலெண்டர்கள்' மீட்டுள்ளனர். கடந்த ஆண்டு நியூலாண்ட்சில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஹர்பஜன்(40), ஜாகிர் கான்(23) பொறுப்பாக ஆடி, போட்டியை "டிரா' செய்தனர்.
கடந்த 2010ல் ஆமதாபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்குக்கு 15 ரன்கள் எடுத்து திணறியது. இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை ஆபத்பாந்தவனாக மாறிய ஹர்பஜன் சதம்(115) அடித்து அணியை தோல்வியில் இருந்து மீட்டார்.
இதே போல 2009ல் வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஹர்பஜன்(60), ஜாகிர் கான்(33), இஷாந்த் சர்மா(18) ஆகியோர் பொறுப்பாக ஆடி, போட்டியை "டிரா' செய்தனர். இதன் மூலம் இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.
புதிய "ஆல்-ரவுண்டர்':
இப்படி "வால்' ஆடும் போதெல்லாம் இந்தியாவின் "தலை' நிமர்வது வாடிக்கையாக உள்ளது. இதில், ஹர்பஜன் தான் முன்னிலை வகிக்கிறார். கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம், இரண்டு அரைசம் உட்பட 483 ரன்கள் எடுத்துள்ளார். சுழல் மன்னனான இவர், டெஸ்டில் இதுவரை 2 ஆயிரம் ரன்களுக்கும் மேல் எடுத்து, தன்னை மிகச் சிறந்த "ஆல்-ரவுண்டராக' அடையாளம் காட்டியுள்ளார்.
மாறுமா "பார்முலா':
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பின் பேட்டி அளித்த கேப்டன் தோனி, அணியின் "டெயிலெண்டர்களை' வாயார புகழ்ந்தார். பின் வரிசை வீரர்கள் கைகொடுப்பதால், 7 பேட்ஸ்மேன்கள்+ 4 பவுலர்கள் என்ற பழைய "பார்முலாவை' மாற்றலாம். வரும் போட்டிகளில் 5 பவுலர்களுடன் துணிந்து களமிறங்கலாம். இதன் மூலம் அதிக டெஸ்டில் வெற்றியை வசப்படுத்தலாம். இது பற்றி யோசிப்பாரா தோனி.
ஒரு நாள் அரங்கில் ஏமாற்றம்
ஒரு நாள் போட்டிகளில் நிலைமை தலைகீழாக உள்ளது. இந்திய அணியின் "டெயிலெண்டர்கள்' தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். உதாரணமாக, சமீபத்திய உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி 6 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்தோம்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கடைசி 8 விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு பறிகொடுத்தோம். தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில், கடைசி இரண்டு ஒரு நாள் போட்டிகளில் "டெயிலெண்டர்கள்' சோபிக்காததால் தோல்வி அடைந்தோம். வரும் காலங்களில் ஒரு நாள் போட்டிகளிலும் அசத்த வேண்டும்.
0 comments:
Post a Comment