வெற்றியுடன் துவக்குமா இந்திய அணி?

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. கடந்த "டுவென்டி-20' போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி மீண்டும் சாதிக்க காத்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நேற்று முன்தினம் நடந்த ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் (டிரினிடாட்) நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது.


"மிடில்-ஆர்டர்' பலம்:

சேவக், காம்பிர், சச்சின் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவான விஷயம். இன்று பார்த்திவ் படேல், ஷிகர் தவான் ஜோடி சிறந்த துவக்கம் அளிக்க வேண்டும். இந்திய அணியின் "மிடில்-ஆர்டர்' பலமுடன் காட்சி அளிக்கிறது.

கேப்டன் சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம். சமீபத்திய ஐ.பி.எல்., மற்றும் "டுவென்டி-20' போட்டியில் அசத்திய பத்ரிநாத் இன்றும் ரன் குவிக்கலாம். யூசுப் பதான் அதிரடி காட்டினால் நல்லது.


முனாப் எதிர்பார்ப்பு:

ஜாகிர் கான், நெஹ்ரா இல்லாத நிலையில் முனாப் படேல், இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் உள்ளிட்ட வேகங்கள் விக்கெட் வேட்டை நடத்த வேண்டும். இவர்களுக்கு வினய் குமார் கைகொடுக்க வேண்டும். சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் இருப்பது பலம். இவருக்கு அஷ்வின், அமித் மிஸ்ரா <உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.


பிராவோ நம்பிக்கை:

"டுவென்டி-20' போட்டியில் விளையாடாத போலார்டு, டுவைன் பிராவோ, சர்வான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒருநாள் தொடரில் விளையாட இருப்பது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பலம் சேர்க்கிறது. "டுவென்டி-20' போட்டியில் ஏமாற்றிய சிம்மன்ஸ் இன்று சிறந்த துவக்கம் அளிக்க வேண்டும். "மிடில்-ஆர்டரில்' டேரன் பிராவோ, சாமுவேல்ஸ் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.


சமி அபாரம்:

"டுவென்டி-20' போட்டியில் விக்கெட் வேட்டை நடத்திய கேப்டன் சமி இன்றும் சாதிக்கலாம். இவர்களுடன் ரவி ராம்பால், ஆன்ட்ரூ ரசல், சாமுவேல்ஸ், சிம்மன்ஸ், டுவைன் பிராவோ, டேரன் பிராவோ, போலார்டு உள்ளிட்ட வேகங்கள் துல்லியமாக பந்துவீசினால் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும். சுழலில் தேவேந்திர பிஷூ நம்பிக்கை அளிக்கிறார்.

இரு அணிகளும் இளம் வீரர்களுடன் களமிறங்குவதால், விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.


வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம்

முன்னதாக இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஆறு முறை கரீபிய சுற்றுப்பயணம் செய்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு முறை (1982/83, 1988/89, 1996/97, 2006) தொடரை வென்றது. கடந்த 2002ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி முதன்முதலில் கரீபிய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதன் பின் கடந்த 2009ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் தொடரை வென்றது.

* இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 96 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 54, இந்தியா 39 போட்டிகளில் வெற்றி கண்டன. ஒரு போட்டி "டை' ஆனது. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.


இம்மைதானத்தில் இதுவரை...

இன்றைய போட்டி நடக்கவுள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் (போர்ட் ஆப் ஸ்பெயின்) இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் எட்டு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 6, இந்தியா 2 போட்டிகளில் வெற்றி கண்டன.

* இம்மைதானத்தில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிகபட்சமாக 260 ரன்கள் (2002) எடுத்தது. தவிர, கடந்த 2007ல் இங்கு நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, பெர்முடாவுக்கு எதிராக 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது. கடந்த 2006ல், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு எதிராக இங்கு அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.

* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சேவக் (302), கங்குலி (296), சச்சின் (238) "டாப்-3' வரிசையில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் லாரா (1276), ஹெய்ன்ஸ் (828), ரிச்சர்ட்சன் (652) ஆகியோர் உள்ளனர்.

* இங்கு அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் வரிசையில் அகார்கர் (10), ஜாகிர் கான் (7), அனில் கும்ளே (6) "டாப்-3' வரிசையில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அம்புரோஸ் (24), திலான் (15), கிறிஸ் கெய்ல் (15), வால்ஷ் (15) ஆகியோர் உள்ளனர்.

0 comments:

Post a Comment