தோனிக்கு சிக்கல் கொடுத்த கூட்டணி - ஓய்வின் பின்னணி என்ன?

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திடீரென ஓய்வு பெற்றதற்கு, விராத் கோஹ்லி–ரவி சாஸ்திரி கூட்டணியே காரணம் என கூறப்படுகிறது. 

இவர்களது ஆதிக்கம் அதிகரிக்க, தோனி ஓரங்கட்டப்பட்டுள்ளார். வேறுவழியின்றி ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி தந்துள்ளார்.

இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பை பெற்று தந்த பெருமைமிக்கவர் தோனி. டெஸ்டில் மட்டும் சறுக்கினார். அதிலும் அன்னிய மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார். தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இவருக்கு விராத் கோஹ்லி கூடுதல் தொல்லை தந்தார்.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் காயம் காரணமாக தோனி பங்கேற்வில்லை. அப்போது அணிக்கு முதல் முறையாக தலைமை ஏற்ற கோஹ்லி, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். இது, இந்திய அணியின் இயக்குனரான முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து இவருக்கு ஆதரவு தந்துள்ளார்.

பின் விரல் காயத்தில் இருந்து மீண்ட தோனி, பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது டெஸ்டுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இப்போட்டியின் பயிற்சியில் காயமடைந்த தவான் களமிறங்க மறுக்க, கோஹ்லி முன்னதாக களமிறக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோஹ்லி, தவானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சை கிளப்பினார்.

தொடர்ந்து மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டிலும் கோஹ்லியின் ஆக்ரோஷம் நீடித்தது. ஆஸ்திரேலியாவின் ஜான்சன், ஹாடினுடன் வார்த்தை போரில் ஈடுபட்டார். கேப்டன் போலவே செயல்பட்டார். இது களத்தில் அமைதியை விரும்பும் ‘கேப்டன் கூல்’ தோனிக்கு அதிருப்தியை தந்தது. 

ரன் மழை பொழிந்து நல்ல ‘பார்மில்’ இருந்த கோஹ்லியை இவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. பயிற்சியாளர் பிளட்சரின் ஒத்துழைப்பு மட்டுமே இருந்துள்ளது. ஆனால், அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி, கோஹ்லிக்கு ஆதரவாக இருந்துள்ளார். 

அணி தேர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகளில் பிளட்சர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். தனக்கு ஒத்துவராத ரவி சாஸ்திரி–கோஹ்லி ‘அரசியலை’ சமாளிப்பதை காட்டிலும் ஓய்வு பெறுவதே சிறந்தது என தோனி நினைத்துள்ளார். இந்த பனிப் போர் காரணமாக தான், தோனி ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

தவிர, ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கில் தோனியின் பெயரும் உள்ளது. இதில், சுப்ரீம் கோர்ட் இன்னும் ஒரு மாத காலத்தில் தீர்ப்பு அளிக்க இருக்கிறது. இதனையும் மனதில் வைத்து தான் டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி விடைபெற்றதாக தெரிகிறது.   

0 comments:

Post a Comment