டெஸ்ட் போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது,’’ என, தோனியிடம் கேட்ட கோஹ்லி, அவரை சமாதானம் செய்ய முயற்சித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் உலக கோப்பை வென்று தந்தவர் தோனி. டெஸ்ட் போட்டிகளிலும் துவக்கத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டார்.
2011 உலக கோப்பை தொடருக்கு முன் 24 டெஸ்டில் 14 வெற்றி, 7 ‘டிரா’ செய்த தோனிக்கு 3 போட்டிகளில் மட்டும் தான் தோல்வி. இதன் பின் களமிறங்கிய 36 டெஸ்டில், 13 வெற்றி, 15 தோல்வி (8 ‘டிரா’) கிடைத்தது.
இதனால் தான் டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றதாக தெரிகிறது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி ‘டிரசிங் ரூமில்’ ஏற்பட்ட பல சர்ச்சைகளும், இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே தோனியின் முடிவை மாற்ற, கோஹ்லி முயற்சித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் கோஹ்லி கூறியது:
மெல்போர்ன் டெஸ்ட் முடிந்த அன்று ‘டிரசிங் ரூம்’ வந்த தோனி, அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களையும் அழைத்தார். எதற்கும் கவலைப்படாத வழக்கமான பாணியில், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஓட்டலுக்கு சென்ற பின் தோனியிடம் சென்று,‘ ஓய்வு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது,’ என்று கூறி, சமாதானம் செய்ய முயற்சித்தேன். இருப்பினும், அவரது முடிவை யாராலும் தடுக்க முடியவில்லை. இது தான் உண்மை.
இவ்வாறு கோஹ்லி கூறியதாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எடுபடாத முயற்சி: கோஹ்லியை போல, இந்திய கிரிக்கெட் போர்டும் (பி.சி.சி.ஐ.,) தோனியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளது. பி.சி.சி.ஐ., உயரதிகாரி ஒருவர் கூறியது:
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்ததும், ஓய்வு பெறுவது என்ற முடிவில் உறுதியாக இருந்தார் தோனி. அதேநேரம், மெல்போர்ன் டெஸ்டில் எப்படியும் வென்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இது நடக்கவில்லை என்றதும், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
தோனியின் இம்முடிவை பி.சி.சி.ஐ., ஏற்க இல்லை. இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் டெஸ்டில் பங்கேற்க வேண்டும் என, நினைத்தோம். ஆனால் விருப்பம் இல்லாதவரை எத்தனை நாளைக்கு தாங்கிக் கொண்டிருப்பது. இவ்விஷயத்தில் தோனி தான் பிடிவாதமாக இருந்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment