உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தில் அவதிப்படும் மைக்கேல் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் அடுத்த மாதம் 21ம் தேதிக்கு முன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் காயத்தால் (தோள்பட்டை) அவதிப்படும் கிளார்க் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மட்டும் பங்கேற்ற இவர், காயத்தால் அடுத்த மூன்று போட்டிகளில் விலகினார்.
இதனால், ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். காயம் இன்னும் குணமாகாக நிலையில், கிளார்க்கிற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
தோகர்டிக்கு வாய்ப்பு:
மற்றபடி பெய்லி, வார்னர், வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்சல் ஜான்சன், ஹேசல்வுட் இடம்பிடித்துள்ளனர். சுழல் வீரர் தோகர்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நிரூபிக்க வேண்டும்:
இது குறித்து ஆஸ்திரேலிய அணி தேர்வாளர் ரோட் மார்ஷ் வெளியிட்ட செய்தியில்,‘‘ உலக கோப்பை அணியில் கேப்டன் பொறுப்பை கிளார்க் ஏற்றுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான (பிப்.,21) போட்டிக்கு முன்பாக, கிளார்க் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இல்லை எனில், இவருக்குப்பதில் வேறு வீரர் தேர்வு செய்யப்படுவார்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, கிளார்க் பங்கேற்கவில்லை எனில், கேப்டன் பொறுப்பை பெய்லி ஏற்கலாம்.
அணி விவரம்: கிளார்க் (கேப்டன்), பெய்லி (துணை கேப்டன்), கம்மின்ஸ், தோகர்டி, பால்க்னர், ஆரோன் பின்ச், ஹாடின், ஹேசல்வுட், மிட்சல் ஜான்சன், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், ஸ்டார்க், வார்னர், வாட்சன்.
0 comments:
Post a Comment