களத்தில் கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது. இவரது அணுகுமுறையை ஆஸ்திரேலிய அணியினரே பாராட்டுகின்றனர்,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 0–2 என தொடரை இழக்க, டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி திடீரென ஓய்வை அறிவித்தார்.
வரும் 6ம் தேதி சிட்னியில் துவங்கும் நான்காவது டெஸ்டில் கேப்டனாக விராத் கோஹ்லி களமிறங்க உள்ளார். இவர், களத்தில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷம் காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது. இத்தொடரில் ஜான்சன், ஹாடினுடன் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டார்.
இது குறித்து இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி கூறியது:
கோஹ்லி ஆக்ரோஷமாக விளையாடுவதாக சொல்கின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது. கடந்த 3 டெஸ்டில் வெறும் 5 ரன் எடுத்து சொதப்பியிருந்தால், நான் ஏதாவது கேள்வி கேட்க முடியும்.
ஆனால், 499 ரன்கள் குவித்துள்ளார். இது சரியாகத் தான் செயல்படுகிறார் என்பதை உணர்த்துகிறது. களத்தில் ஆக்ரோஷமாக இருப்பதை விரும்புகிறார். இந்த அணுகுமுறை, இவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்த உதவுகிறது.
பாராட்டு:
வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் கூட இவரது ஆக்ரோஷ செயல்பாட்டை புகழ்ந்தார். தவிர, ஆஸ்திரேலிய அணியினரே கோஹ்லியை பாராட்டுகின்றனர்.
நீண்ட காலத்திற்கு பின் இப்படியொரு ஆட்டத்தை இவர்கள் பார்த்தனர். இளம் கேப்டனான இவர், மிக விரைவில் முதிர்ச்சியான வீரராக உருவெடுப்பார்.
0 comments:
Post a Comment