பிராட்மேனை நெருங்கும் சங்ககரா

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், சங்ககரா இரட்டை சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 356 ரன்கள் எடுத்த இலங்கை அணி முன்னிலை பெற்றது. 

இதன்மூலம் சங்ககரா, டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை நெருங்குகிறார்.

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. 

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 221 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (33) அவுட்டாகாமல் இருந்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கையின் சங்ககரா, நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தார். அபாரமாக ஆடிய இவர், டெஸ்ட் அரங்கில் தனது 38வது சதத்தை பதிவு செய்தார். 

மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த சண்டிமால் (67) அரைசதம் அடித்தார். தமிகா பிரசாத் (11), ஹெராத் (15) ஏமாற்றினர். தனிநபராக அசத்திய சங்ககரா (203), டெஸ்ட் வரலாற்றில் 11வது முறையாக இரட்டை சதம் அடித்தார். 

இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனுக்கு (12 முறை) பின், இரண்டாவது இடம் வகிக்கிறார். லக்மல் (5) ஏமாற்றினார்.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 356 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. நியூசிலாந்து சார்பில் பிரேஸ்வெல், நீஷம் தலா 3, டிரண்ட் பவுல்ட் 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்து, 113 ரன்கள் பின்தங்கி இருந்தது. டாம் லதாம் (9), ரூதர்போர்டு (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment