எலியாட், ரான்கி ஜோடி உலக சாதனை படைக்க, இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்தின் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 4 போட்டிகள் முடிவில், நியூசிலாந்து அணி 2–1 என, முன்னிலையில் இருந்தது.
ஐந்தாவது போட்டி டுனிடினில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு கப்டில், ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பிரண்டன் மெக்கலம் (25), கேப்டன் வில்லியம்சன் (26), ராஸ் டெய்லர் (20) சீரான இடைவெளியில் அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 93 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
பின் இணைந்த ரான்கி, எலியாட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரான்கி, 74வது பந்தில், தனது முதல் சர்வதேச சதம் கடந்தார்.
உலக சாதனை:
இவருக்கு நல்ல ‘கம்பெனி’ கொடுத்த எலியாட், தன் பங்கிற்கு 2வது சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்தது. 6வது விக்கெட்டுக்கு 30 ஓவர்களில் 267 ரன்கள் சேர்த்த ரான்கி, எலியாட் ஜோடி, புதிய உலக சாதனை படைத்தது.
இலங்கை தோல்வி:
கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு திரிமான்னே (45), ஜெயவர்தனா (30), மெண்டிஸ் (18) சற்று ஆறுதல் தந்தனர். தில்ஷன் ஒருநாள் அரங்கில் 21 வது சதம் அடித்தார்.
இருப்பினும், இலங்கை அணி 43.4 ஓவரில், 252 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 3–1 என, முன்னிலை பெற்றது.
0 comments:
Post a Comment