டெஸ்டில் இருந்து தோனி திடீர் ஓய்வு

இந்திய அணி கேப்டன் தோனி, டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி, 33. இதுவரை 90 டெஸ்ட் (4876 ரன்கள்), 250 ஒரு நாள் (8192), 50 ‘டுவென்டி–20’ (849) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்திய அணிக்கு ‘டுவென்டி–20’(2007), 50 ஓவர் (2011) என இரண்டு முறை உலக கோப்பை வென்று தந்தார். தவிர, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கோப்பை வென்று காட்டினார்.

இந்நிலையில், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து இவரது தலைமையிலான இந்திய அணி தோல்வி கண்டது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0–2 என. இழந்துள்ளது.

இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார்.


பங்களிப்புக்கு நன்றி:

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு நாள் மற்றும் ‘டுவென்டி–20’ போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக, கேப்டன் தோனி டெஸ்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். 

மிகச்சிறந்த கேப்டனான இவரின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த இவருக்கு நன்றி.
வரும் ஜன.,6ல் சிட்னியில் துவங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஓய்வு ஏன்:

கடந்த 2005, டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான சென்னை டெஸ்டில் அறிமுகம் ஆனார் தோனி. கடந்த 2008ல் கும்ளே ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ஆனார். 1967-–68க்குப் பின், அதாவது 41 ஆண்டுகள் கழித்து, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தினார்.

இவர் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி உலகின் ‘நம்பர்–1’ இடத்தை பெற்று அசத்தியது.

2011 முதல் இவரது டெஸ்ட் வீழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து இங்கிலாந்த, ஆஸ்திரேலிய மண்ணில் இரு முறை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க மண்ணிலும் தோல்வி துரத்த, ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். 

இதுவரை கேப்டனாக பங்கேற்ற 60 டெஸ்டில், 27 வெற்றி, 15 ‘டிரா’ செய்த தோனி அணிக்கு, 18 தோல்விகள் கிடைத்தது. தவிர, அன்னிய மண்ணில் அதிக தோல்விகளை (15) சந்தித்த முதல் இந்திய அணி கேப்டன் தோனி தான்.

இவருக்கு அடுத்த இடத்தில், மன்சூர் அலிகான் பட்டோடி, அசார், கங்குலி ஆகியோர், அன்னிய மண்ணில் கேப்டனாக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் தலா 10 தோல்விகள் பெற்றனர்.

0 comments:

Post a Comment