மீண்டும் அசத்துமா கோல்கட்டா அணி

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்று கோல்கட்டா நைட் ரைடர்ஸ், வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இமாலய வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று பெங்களூருவில் நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.


காம்பிர் நம்பிக்கை:

லீக் சுற்றில் கடைசி போட்டியில் பங்கேற்கும் கோல்கட்டா அணி, இதுவரை ஒரு வெற்றியுடன் 2 புள்ளி தான் பெற்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால் மட்டும் போதாது. நல்ல "ரன் ரேட்' பெற வேண்டும். அப்போது தான் அரையிறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இதனை மனதில் வைத்து கேப்டன் காம்பிர், காலிஸ், ஹாடின் ஆகியோர் பொறுப்பாக ஆட வேண்டும். பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியாக ரன் சேர்த்த இவர்கள், அணிக்கு வெற்றி தேடி தந்தனர். மீண்டும் இதே போன்று அசத்த வேண்டும்.


பிரட் லீ வேகம்:

பந்துவீச்சில் பிரட் லீயின் "வேகம்' வாரியர்ஸ் அணிக்கு தொல்லை தரலாம். காலிஸ், உனத்கட், இக்பால் அப்துல்லா, பாட்யா ஆகியோரும் கைகொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.


பலமான வாரியர்ஸ்:

வாரியர்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்றும் இவர்களின் ஆதிக்கம் தொடரலாம். ஜான் ஸ்மட்ஸ், பிரின்ஸ், இங்ராம், மார்க் பவுச்சர், போத்தா என அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சாதித்து வருவது அணியின் பலமாக உள்ளது.

டிசாட்சொபே, போத்தா, பார்னல், நிக்கி போயே போன்றோர் பந்துவீச்சில் அசத்துகின்றனர். இதனால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க கோல்கட்டா அணியும், தொடர் வெற்றி பெற வாரியர்ஸ் அணியும் உறுதியாக இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment