சாம்பியன்ஸ் லீக்: காம்பிர் நீக்கம்

காயம் காரணமாக, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் தகுதிச் சுற்றில் விளையாடமாட்டார்.

இந்தியாவில், மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடக்கிறது. இதில், உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாதித்த 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியஸ் உள்ளிட்ட 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.


தகுதிச் சுற்று:

மீதமுள்ள மூன்று இடங்களுக்கு, வரும் 19-21ம் தேதிகளில் ஐதராபாத்தில் தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்திய நான்காவது ஐ.பி.எல்., தொடரில் நான்காவது இடம் பிடித்த பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் (இந்தியா) அணியும் விளையாடுகிறது.


காம்பிர் காயம்:

இந்த அணியின் கேப்டனாக, இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சமீபத்தில் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது. இப்போட்டியில் இங்கிலாந்தின் பீட்டர்சன் அடித்த பந்தை "கேட்ச்' செய்ய முயன்ற காம்பிரின், பின் தலைப்பகுதியில் பலமாக அடிபட்டது. இதனால் இவரது கண் பார்வை மங்கியது.

இதன்மூலம் இவர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். தற்போது சிகிச்சை மேற்கொண்டு வரும் இவரது காயம் முற்றிலும் குணமடையவில்லை.


காலிஸ் கேப்டன்:

காயம் காரணமாக காம்பிர், தகுதிச் சுற்றில் விளையாடமாட்டார். ஒருவேளை காயம் குணமடையும் பட்சத்தில், கோல்கட்டா அணி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றால், உடற்தகுதியை பொறுத்து விளையாடுவார். தகுதிச் சுற்றில் கோல்கட்டா அணியின் கேப்டனாக, தென் ஆப்ரிக்க "ஆல்-ரவுண்டர்' காலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கோல்கட்டா அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காம்பிரின் காயம், வரும் 19ம் தேதிக்குள் பூரண குணமடைவதாக தெரியவில்லை. இதனால் இவரை, தகுதிச் சுற்றுக்கான அணியில் இருந்து நீக்குகிறோம். இவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்காவின் காலிஸ் அணியை வழிநடத்துவார்.

ஒருவேளை கோல்கட்டா அணி தகுதி பெறும் பட்சத்தில், காம்பிரின் உடற்தகுதியை பொறுத்து விளையாடுவார். காம்பிர் இல்லாதது கோல்கட்டா அணிக்கு பின்னடைவானது. இருப்பினும் காயம் காரணமாக காம்பிரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment