இன்று இங்கிலாந்துடன் முதல் சவால்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று செஸ்டர் லீ ஸ்டீரிட்டில் நடக்கிறது. டெஸ்ட் மற்றும் "டுவென்டி-20' போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, இம்முறை எழுச்சி காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று செஸ்டர் லீ ஸ்டீரிட், ரிவர்சைடு மைதானத்தில் நடக்கிறது.

முன்னதாக இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' அந்தஸ்தை பறிகொடுத்தது. அடுத்து நடந்த "டுவென்டி-20' போட்டியிலும் தோல்வி அடைந்தது.

தற்போது ஒரு நாள் தொடரில் சாதிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் "உலக சாம்பியன்' இந்தியா உள்ளது. காம்பிர், சேவக் இல்லாதது பெரும் பின்னடைவு. இதையடுக்கு துவக்க வீரராக சச்சினுடன் இணைந்து பார்த்திவ் படேல் களமிறங்கலாம். டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிட் மீண்டும் கைகொடுக்கலாம்.

பயிற்சி போட்டிகளில் அசத்திய விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பொறுப்பாக ஆட வேண்டும். சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நல்லது. கேப்டன் தோனி "பார்மிற்கு' திரும்ப வேண்டும். இளம் வீரர் ரகானேவுக்கு வாய்ப்பு கிடைத்தால், அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


முனாப் நம்பிக்கை:

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பிரவீண்குமார், முனாப் நம்பிக்கை அளித்து வருகின்றனர். இவருடன் வினய் குமாரும் இணைந்து இங்கிலாந்து வீரர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தலாம். அஷ்வின், அமித் மிஸ்ரா இருவரும் சுழலில் அசத்தலாம். ஆர்.பி. சிங்., அணியில் இடம் பெறவாரா என்பது தெரியவில்லை.


குக் கேப்டன்:

இங்கிலாந்து அணியின் கேப்டனாக அலெஸ்டர் குக் களமிறங்குகிறார். இவர் கீஸ்வெட்டருடன் துவக்க வீரராக களமிறங்கி அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. "மிடில் ஆர்டரில்' இயான் பெல், மார்கன், ரவி போபரா, சமித் படேல் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபடலாம். அனுபவ வீரர் பீட்டர்சன் இல்லாதது அணிக்கு சிக்கலை தரலாம்.

ஸ்டூவர்ட் பிராட், பிரஸ்னன், ஆண்டர்சன், ஸ்டீவன் பின் இருப்பதால், இங்கிலாந்து அணியின் பவுலிங் பலமாக உள்ளது. கடந்த "டுவென்டி-20' போட்டியில் 4 விக்கெட் எடுத்த டெர்ன்பாக் இதிலும் இந்திய அணிக்கு தொல்லை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழலில் சுவான் எழுச்சி பெறலாம்.


ஆறுதல் கிடைக்குமா?

சொந்த மண் என்பதால் இங்கிலாந்து வீரர்கள் ஒரு நாள் தொடரிலும் சாதிக்கலாம். இந்திய அணியை பொறுத்தவரை, ஒரு நாள் தொடரை வெற்றியுடன் துவக்க முயற்சிக்கும். எனவே இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.


வெற்றி அதிகம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை 71 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 38, இங்கிலாந்து 30 போட்டிகளில் வென்றுள்ளன. இரு போட்டிகளுக்கு முடிவில்லை. ஒரு ஆட்டம் "டை' ஆனது.


இம்மைதானத்தில் இதுவரை

* இந்தியா, இங்கிலாந்து அணிகள் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் ஒரு போட்டியில் பங்கேற்றன. இந்திய வீரர் சச்சின் சதம் அடித்த இப்போட்டி (285/4), மழை காரணமாக (இங்கிலாந்து 12.3 ஓவரில் 53/1) ரத்தானது.

* மற்றபடி இங்கிலாந்து அணி இங்கு விளையாடிய 8 போட்டிகளில் 4 ல் வென்றுள்ளது.


மழை வரும்

முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள மைதானத்தில், இன்றைய வெப்பநிலை அதிகபட்சமாக 18, குறைந்த அளவாக 13 டிகிரி செல்சியஸ் இருக்கும். வானம் மேகமூட்டமாக காணப்படும். லேசான மழை வர வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment