செஸ்டர் லி ஸ்டிரீட்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பார்த்திவ் பட்டேல் பிரமாதமாக ஆட இந்திய அணி 274 ரன் குவித்தது. ஆனால் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட், ஒரு டி&20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில் 4&0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்த இந்தியா, டி&20 போட்டியிலும் மண்ணை கவ்வியது. இந்நிலையில், ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது.
செஸ்டர் லி ஸ்டிரீட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பார்த்திவ், ரஹானே தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும், போகப் போக ரன் குவிக்கத் தொடங்கினர்.
அறிமுக வீரரான ரஹானே அற்புதமாக பேட்டிங் செய்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது.
ரஹானே 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிராவிட் சர்ச்சையான முறையில் வெளியேறினார். அரைசதத்தை கடந்த பார்த்திவுக்கு கோஹ்லி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது.
95 ரன் எடுத்திருந்த நிலையில் பார்த்திவ் ஆட்டமிழந்து, ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். கோஹ்லி தன் பங்குக்கு 55 ரன் எடுத்து வெளியேறினார்.
ரெய்னா (38), கேப்டன் டோனி (33) இருவரும் விரைவாக ரன் சேர்க்க, 50 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பிரவீன் குமார் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார்.
குக் (4), கெய்ஸ்வெட்டர் (6) இருவரையும் வெளியேற்றினார். 7.2 ஓவரில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
0 comments:
Post a Comment