இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பிரிவிற்கு ஜாகிர் கான் நீண்டகாலம் தலைமை ஏற்கமுடியாது. இப்போது காயமடைந்துள்ள இவர், விரைவில் மீண்டு வருவது கடினம் தான்,'' என, கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் (32). சமீபகாலமாக போட்டிகளில் பங்கேற்பதை விட, காயம் காரணமாக ஓய்வில் தான் அதிகமாக உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின், முதல் நாளில் மீண்டும் காயமடைந்த இவர், இப்போது "ஆப்பரேஷன்' செய்துள்ளார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியது:
வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர், 30 வயதுக்கு மேல் காயமடைகிறார் என்றால், அவரால் மீண்டு வருவது கடினமாகி விடும். ஒருவேளை மீண்டும் வந்தாலும், சில போட்டிகளில் வேண்டுமானால் பங்கேற்கலாம். பிறகு மறுபடியும் காயம் ஏற்பட்டுவிடும். இப்போது "ஆப்பரேஷன்' செய்துள்ள ஜாகிர் கான் இனி மீண்டு வருவது சிரமம் தான்.
மேற்பாதிதான் பலம்:
கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளோம். துரதிருஷ்டவசமாக ஏதாவது ஒருவகையில் காயம் அடைந்து விடுகின்றனர். அதிக போட்டிகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த வீரர்கள் களத்தில் அதிக நேரம் செலவு செய்வதை விட, உடற்பயிற்சி நிலையத்தில் தான் எப்போதும் உள்ளனர்.
போதுமான அளவு ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. இவர்களின் கால்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பவுலர்களின் கால், பாதங்களை விட, உடலின் மேல் பாதிதான் வலுவாக உள்ளது.
பயிற்சி இல்லை:
பவுலர்கள் போதிய அளவு வலைப்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. நீண்ட நேரம் பவுலிங் செய்வதில்லை. எந்தளவுக்கு பவுலிங் செய்கின்றமோ, அந்தளவுக்கு உடல் வலுவாகும். ஆனால், நான் பார்க்கும் பவுலர்கள் எல்லாம், 4 அல்லது 5 ஓவர்கள் தான் பவுலிங் பயிற்சி செய்கின்றனர்.
முயற்சி தேவை:
இந்தியாவுக்காக விளையாடுவது பெரிய விஷயமாக இருக்கக்கூடாது. குறைந்தது 10 ஆண்டுகளாவது நிலைத்து இருக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு கடின முயற்சி தேவை. "டிரசில் ரூம்' மற்றும் கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவிட்டு புள்ளி விபரங்களை தெரிந்து கொள்ளாமல், சிறந்த வீரராக உருவாக முடியாது. இவற்றை சரியாக செய்துவிட்டால், நீண்டகாலம் நிலைத்திருக்கலாம்.
எனது காலத்தில் நானும் காயமடைந்தேன். இது ஓய்வுநேரத்தில் நடந்தது. ஆனால், இப்போது வீரர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. கிரிக்கெட் என்பது இரக்கமின்றி விளையாடப்பட்டுக் கொண்டுள்ளது. இதை வீரர்கள், நிர்வாகிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
சச்சின் வருவார்:
இப்போது காயமடைந்துள்ள சச்சின், இனி அவ்வளவு தான், ஓய்வு பெற்றுவிடுவார் என்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் பேட்ஸ்மேனுக்கும், பவுலருக்கும் வித்தியாசம் உள்ளது. சச்சின் எப்படியும் மீண்டும் வந்துவிடுவார். இதற்கு முன் பலமுறை இப்படி நடந்துள்ளது.
சர்வதேச அளவில் 100வது சதம் அடிக்க வேண்டியது உள்ளது. இதற்காக எந்தவகையிலும் திரும்பி வருவார்.
இவ்வாறு கபில் தேவ் கூறினார்.
இவ்வாறு கபில் தேவ் கூறினார்.
0 comments:
Post a Comment