டி.ஆர்.எஸ்., சதியில் டிராவிட்

இங்கிலாந்து தொடரில் அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை(டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையில் டிராவிட் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இவருக்கு எதிராக முதலாவது ஒரு நாள் போட்டியிலும் அநியாயமாக "அவுட்' கொடுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் தோனி, சர்ச்சைக்குரிய டி.ஆர்.எஸ்., முறை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது. அடுத்து, 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. நேற்று முன் தினம் செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

இப்போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்து, டிராவிட்டை கடந்து விக்கெட் கீப்பர் கீஸ்வெட்டர் கையில் தஞ்சம் புகுந்தது. உடனே அவர் "அப்பீல்' செய்தார். களத்தில் இருந்த அம்பயர் டாக்ட்ரோவ் (வெ.இண்டீஸ்) மறுத்தார். இதையடுத்து டி.ஆர்.எஸ்., முறையில் இங்கிலாந்து வீரர்கள் "ரிவியு' கேட்டனர்.

"ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல முறை "ரீப்ளே' மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால், "டிவி' அம்பயர் மரைஸ் எராஸ்மஸ்(தென் ஆப்ரிக்கா) "அவுட்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.


சந்தேகம் சாதகம்:

பொதுவாக, "ரீப்ளே' தெளிவில்லாத நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வழங்கப்படும். டிராவிட் விஷயத்தில் எல்லாமே தலைகீழாக உள்ளது. இங்கிலாந்து தொடரில் இவருக்கு எதிராகவே டி.ஆர்.எஸ்., முறை அமைந்துள்ளது. உதாரணமாக மூன்றாவது டெஸ்டில் ஆண்டர்சன் பந்தில் வீணாக "அவுட்' கொடுக்கப்பட்டார்.

உண்மையில் பந்து இவரது "ஷூ லேசில்' தான் பட்டது. இதே போல நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் சுவான் வீசிய பந்து, டிராவிட்டின் கால் பேடில் பட்டுச் சென்றது. ஆனால், டி.ஆர்.எஸ்., முறையில் "டிவி' அம்பயர் ஸ்டீவ் டேவிஸ்(ஆஸி.,) தவறாக "அவுட்' கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு முறை டி.ஆர்.எஸ்., சதியில் "இந்திய பெருஞ்சுவர்' டிராவிட் சிக்கியிருப்பதாக கருதப்படுகிறது.

இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:

டிராவிட் "அவுட்' தொடர்பாக நிறைய விஷயங்கள் ஆராயப்பட வேண்டும். "ஹாட் ஸ்பாட்' மூலம் ஆய்வு செய்ததில், பந்து பேட்டில் பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில், சந்தேகத்தின் அடிப்படையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். "டிவி' அம்பயர் எந்த அடிப்படையில் "அவுட்' கொடுத்தார் என தெரியவில்லை.

ஒருவேளை "ஸ்னிக்கோமீட்டர்'(பேட்டில், பந்து படும் சத்தத்தை வைத்து கண்டுபிடிக்கும் கருவி) பயன்படுத்தினாரா? டி.ஆர்.எஸ்., தொழில்நுட்பத்தில் "ஸ்னிக்கோமீட்டர்' பயன்படுத்த முடியாது என்பது அவருக்கு தெரியாதா? "அவுட்' கொடுத்தது "ஆடியோ' தொழில்நுட்ப வல்லுனரா அல்லது "டிவி' அம்பயரா? "ரீப்ளே' தெளிவான முடிவை தராதபட்சத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக ஏன் தீர்ப்பு வழங்கவில்லை? இந்த தவறான தீர்ப்பு டி.ஆர்.எஸ்., தொழில்நுட்பம் துல்லியமாக இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. இதில், நிறைய குறைகள் உள்ளன.


வருகிறார் திவாரி:

இந்திய வீரர்கள் தொடர்ந்து காயத்தில் சிக்குவது கவலை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் பட்டியலில் தற்போது சச்சின்(வலது கால் பெருவிரல் பகுதியில் வீக்கம்), ரோகித் சர்மாவும்(வலது கை சுட்டு விரலில் எலும்பு முறிவு) சேர்ந்துள்ளனர்.

ரோகித்திற்கு பதிலாக மனோஜ் திவாரி இடம் பெறுகிறார். சச்சின் காயம் தொடர்பாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற உள்ளார். இவர்களுக்கு பதிலாக புதிதாக வரும் வீரர்கள், இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப உடனடியாக பக்குவப்படுத்திக் கொள்வது மிகவும் கடினம்.

இருக்கும் வீரர்களை கொண்டு போராட வேண்டிய நிலையில் உள்ளோம். வரும் காலங்களில் குறைந்தது 18 வீரர்களுடன் பயணம் செய்ய வேண்டும்.


வெற்றி வாய்ப்பு:

முதலாவது ஒரு நாள் போட்டியில் பார்த்திவ் படேல் உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சிறப்பாக "பேட்' செய்தனர். பவுலர்களும் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தனர். மழை குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்.

இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment