கிரிக்கெட்டின் மோசமான ஆட்டம் - தோனி வேதனை

நான்காவது ஒருநாள் போட்டியில் "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறை காரணமாக, கிரிக்கெட்டின் மோசமான ஆட்டத்தை பார்க்க முடிந்தது,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகித்தது. நேற்று முன்தினம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில், நான்காவது போட்டி நடந்தது.


"டை' முடிவு:

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ரெய்னா (84), தோனி (78) கைகொடுக்க, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, "டக்வொர்த்- லீவிஸ்' விதிமுறைப்படி "டை' என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.

மழை குறுக்கீடு:

இப்போட்டியில் இங்கிலாந்து அணி, 44 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. "டக்வொர்த்- லீவிஸ்' முறைப்படி இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் இந்திய வீரர்கள் "பெவிலியன்' திரும்பினர். அம்பயர் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் இருந்தனர். மீண்டும் மழை நின்றவுடன் ஆட்டம் தொடர்ந்தது.

இங்கிலாந்து அணி, 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, இரண்டாவது முறையாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது "டக்வொர்த்- லீவிஸ்' முறையில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. இந்நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவரும் "பெவிலியன்' திரும்பினர். ஆனால் இந்திய வீரர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். மீண்டும் மழை விட, ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது.

பின், இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது முறையாக மழை பெய்தது. அப்போது "டக்வொர்த்- லீவிஸ்' முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. போதிய நேரமின்மை, மழை உள்ளிட்ட காரணங்களால் "டை' என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:

குழப்பமான "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறை காரணமாக கிரிக்கெட்டின் மோசமான முகத்தை பார்க்க நேர்ந்தது. வெற்றி பெறும் நிலையில் உள்ள அணியினர் விளையாட விரும்பவில்லை. தோல்வி நோக்கி உள்ள அணியினர் விளையாட ஆர்வமாக இருந்தனர். இந்த தவறான அணுகுமுறையை இரு அணி வீரர்களும் பின்பற்றினர்.

பகலிரவு போட்டியின் போது மட்டுமே மைதானத்தில் விளக்குகள் பயன்படுத்தப்படும். இது பகலிரவு போட்டிக்கான விதிமுறை. ஆனால் நேற்று முன் தினம் நடந்த பகல் போட்டியில் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. பகல் மற்றும் பகலிரவு போட்டிகளுக்கான விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் அது கிரிக்கெட் போட்டியின் அழகை அழித்துவிடும்.

இப்போட்டியின் முடிவு எங்கள் அணி வீரர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. சிலர் வெற்றி பெற்றதாக கருதினர். சிலர் மீண்டும் போட்டி நடக்கும் என காத்திருந்தனர். "டிரஸிங் ரூம்' சென்ற பிறகு தான், போட்டி "டை' ஆனதை அறிந்தோம்.

முதலாவது ஒருநாள் போட்டியிலும் எங்களது வெற்றி மழையால் பாதிக்கப்பட்டது. மழை உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. போட்டி "டை' ஆனது குறித்து அதிகம் கவலைப்பட போவதில்லை.

இப்போட்டியில் எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. துவக்க வீரர்கள் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். ஆரம்பத்திலேயே விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் நல்ல ஸ்கோரை பெற முடிந்தது.

நானும், ரெய்னாவும் பேட்டிங் செய்த போது எந்த ஒரு இலக்கை கருத்தில் கொண்டு விளையாடவில்லை. நாற்பது ஓவர் வரை நிதானமாக ரன் சேர்த்தோம். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், கடைசி பத்து ஓவரில் 110 ரன்கள் எடுக்க முடிந்தது.


என்னை சிறந்த பீல்டர் என்று கூற முடியாது. இருப்பினும் பவுண்டரி பகுதியில் பீல்டிங் செய்ய விருப்பமாக உள்ளது. ஆனால் அங்கிருந்து இருந்து அணியை வழிநடத்துவது எளிதான காரியமல்ல.

ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட போதிலும், ஐந்தாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம். ஏனெனில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. ஒவ்வொரு போட்டியும் சர்வதேச போட்டி. இப்போட்டியில் கிடைக்கும் வெற்றி, தோல்வியின் பிடியில் சிக்கியுள்ள இந்திய அணிக்கு ஆறுதலாக இருக்கும்.

இவ்வாறு தோனி கூறினார்.

இரண்டாவது முறை

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி, இரண்டாவது முறையாக "டை' ஆனது. முன்னதாக சமீபத்திய உலக கோப்பை தொடரில், பெங்களூருவில் நடந்த போட்டி "டை' ஆனது. இதுவரை இந்திய அணி விளையாடிய ஐந்து போட்டிகள் "டை' ஆனது.

இதில் ஜிம்பாப்வே (1993, 97), இங்கிலாந்து (2011, 2011) அணிகளுக்கு எதிராக தலா இரண்டு முறையும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு முறையும் (1991) "டை' ஆனது. தவிர இப்போட்டி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், "டை'யில் முடிந்த 25வது போட்டியாகும். கடந்த 1984ல் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முதன்முதலில் "டை' ஆனது.

இரண்டாவது அதிகபட்சம்

நேற்று 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்த இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. முன்னதாக கடந்த 2002ல், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்தது.

மூன்றாவது முறை

இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் (பைலேட்ரல்) தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து சென்ற இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக (1996, 2007, 2011) தொடரை கைப்பற்ற தவறியது.

0 comments:

Post a Comment