இந்தியா மீண்டும் ஏமாற்றம்

ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி அசத்தல் சதம் அடிக்க, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. 

இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில், இங்கிலாந்து அணி 2-0 என ஏற்கனவே தொடரை வென்றது. 

முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது ஒரு நாள் போட்டி நேற்று கார்டிப்பில் நடந்தது. இந்திய அணி ஆறுதல் வெற்றி தேடி களமிறங்கியது. "டாஸ் வென்ற இங்கிலாந்து "பீல்டிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தடைபட்டது. 

நல்ல துவக்கம்: ஆட்டம் துவங்கியதும், பார்த்திவ் படேல் மற்றும் ரகானே இணைந்து இந்திய அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில் ரகானே(26) வெளியேறினார். 

அடுத்து வந்த டிராவிட் "கம்பெனி கொடுக்க, பார்த்திவ் படேல் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நேரத்தில் சுவான் சுழலில் பார்த்திவ்(19) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. 

கோஹ்லி அசத்தல்: இதற்கு பின் டிராவிட், விராத் கோஹ்லி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் 3வது விக்கெட் டுக்கு 170 ரன்கள் சேர்த் தனர். சமித் படேல் வீசிய போட்டியின் 40வது ஓவரில் கோஹ்லி 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்தார். 

தொடர்ந்து அசத்திய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 6வது சதம் அடித்தார். அரைசதம் கடந்த டிராவிட்(69), சுவான் சுழலில் போல்டானார். சுவான் பந்தை அடித்து விட்டு ஓட முற்பட்ட போது, கோஹ்லியின் கால் துரதிருஷ்டவசமாக "ஸ்டம்ப்சில் பட, "பெயில்ஸ் கீழே விழுந்தது. இதையடுத்து "ஹிட் விக்கெட் முறையில் 107 ரன்களுக்கு(9 பவுண்டரி, 1 சிக்சர்) பரிதாபமாக அவுட்டானார்.

தோனி அதிரடி: கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ரன் சேர்த்தார். ரெய்னா(15) சோபிக்கவில்லை.டெர்ன் பாக் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. 

தோனி 50 ரன்களுடன்(5 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.மழையால் நிறுத்தம்:மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, இங்கிலாந்துக்கு "டக்வொர்த்-லீவிஸ் விதி முறைப்படி 40 ஓவரில் 270 ரன்கள் எடுக்க வேண்டுமென வெற்றி இலக்கு மாற்றப்பட்டது. 

வினய் குமார் வேகத்தில் கீஸ்வெட்டர்(21) வெளியேறினார். இங்கிலாந்து 9.1 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்த நிலையில், மீண்டும் மழை கொட்டியது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

விடைபெற்றார் டிராவிட் : ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து நேற்று பிரியாவிடை பெற்றார் இந்திய வீரர் டிராவிட். இக்கட்டான நிலையில் களமிறங்கிய இவர், தூணாக நின்று அணியை மீட்டார். 

தனது 83வது அரைசதம் கடந்த இவர், 344 ஒரு நாள் போட்டிகளில் 10, 889 ரன்கள் எடுத்துள்ளார். சுவான் சுழலில் 69 ரன்களுக்கு "போல்டாகி பெவிலியன் திரும்பிய டிராவிட்டுக்கு, இங்கிலாந்து வீரர்கள் கைகுலுக்கி விடைகொடுத்தனர். அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மரியாதை செய்தனர். 

தவிர, "உங்களை "மிஸ் பண்ணுகிறோம். "உங்களுக்கு நன்றி செலுத்தவே இப்போட்டியை காண வந்தோம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை காண்பித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முனாப் காயம்: மழை நின்றதும், இங்கிலாந்துக்கு 34 ஓவரில் 241 ரன்கள் எடுக்க வேண்டுமென புதிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குக் அடித்த பந்தை பிடிக்க முயன்ற முனாப் படேல் வழுக்கி விழ, வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து களத்தை விட்டு வெளியேறினார். பின் விராத் கோஹ்லி பந்தில் குக் கொடுத்த "கேட்ச்சை டிராவிட் கோட்டை விட்டார். அடுத்த பந்தில் குக்(50), "போல்டாக இந்திய வீரர்கள் நிம்மதி அடைந்தனர். பின் ரவிந்திர ஜடேஜா வீசிய போட்டியின் 21வது ஓவரில் பெல் 2 சிக்சர், டிராட் 1 சிக்சர் அடிக்க, நெருக்கடி ஏற்பட்டது.

இங்கிலாந்து வெற்றி : இங்கிலாந்து அணி 32.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றியை பெற்று கோப்பையை வென்றது. டிராட்(63), பெல்(26) ரன்கள் எடுத்தனர். பெபாரா (37), பேர்ஸ்டோ (41) அவுட்டாகாமல் இருந்தனர்.

1 comments:

  1. நீங்க இன்னும் கிரிக்கெட் பார்க்கிறதை விடவில்லையா ...? போச்சு போங்க .... நானும் கிரிக்கெட் பார்த்து பார்த்து நொந்து போன ஆசாமி

    ReplyDelete