விராத் கோஹ்லியை வீணாக உசுப்பேற்றினார் ஜான்சன். இவரது உடலை நோக்கி பந்தை ஆவேசமாக எறிந்தார். இதற்கு பதிலடியாக சதம் அடித்து அசத்தினார் கோஹ்லி.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னில் நடக்கிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், 83வது ஓவரை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் வீசினார்.
இதன் இரண்டாவது பந்தை இந்தியாவின் கோஹ்லி அடித்தார். பந்தை பிடித்த ஜான்சன், ‘ரன்–அவுட்’ செய்வதற்காக ‘ஸ்டெம்ப்சை’ நோக்கி எறிந்தார். ஆனால் பந்து விராத் கோஹ்லியின் உடலில் பட்டது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கோஹ்லியிடம், ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.
இந்த ஓவரின் கடைசி பந்தை ‘பவுண்டரிக்கு’ விரட்டிய கோஹ்லியிடம், ஜான்சன் ஏதோ கூறினார். இதனால் இருவருக்கும் வார்த்தை போர் முற்றவே, அம்பயர் கெட்டில்புரூக், கோஹ்லியை சமாதானம் செய்தார். அதன்பின், இவர்கள் இருவரும் அடிக்கடி முறைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:
ஜான்சன் எறிந்த பந்து என் மீது பட்ட போது மிகவும் கோபமடைந்தேன். அப்போது அவரிடம், ‘அடுத்த முறை என் மீது எறிய முயற்சிக்க வேண்டாம், ‘ஸ்டெம்ப்சை’ நோக்கி எறியவும்’ எனக் கூறினேன். அப்போதிருந்தே ஜான்சன் உள்ளிட்ட சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் வார்த்தை போர் ஆரம்பமானது.
அவர்கள் என்னை ‘அடக்கமில்லாத குழந்தை’ என கேலி செய்தனர். ஜான்சனுக்கு பேட்டிங்கில் மூலம் பதிலடி கொடுக்க முடிவு செய்தேன். நேற்றைய ஆட்டத்தில் இவரது ஓவரில் சராசரியாக 5 ரன்கள் வரை எடுத்ததால், நெருக்கடியுடன் காணப்பட்டார்.
களத்தில் எதிரணி வீரர்களுடன் வார்த்தை போரில் ஈடுபடுவது குறித்து கவலையில்லை. இது, போட்டியில் சாதிக்க உதவியாக இருக்கும். இதனால் தான் மெல்போர்ன் டெஸ்டில் 169 ரன்கள் எடுக்க முடிந்தது.
தற்போது ஆஸ்திரேலிய அணி தொடரில் 2–0 என முன்னிலையில் உள்ளது. இதனால் இவர்கள் எதிரணியினருடன் வம்பிழுப்பார்கள். ஒருவேளை தொடர் 1–1 என சமநிலையில் இருந்திருந்தால், இப்படி செய்வார்களா? கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் அமைதியாகவே காணப்பட்டனர். அப்போது அதிகளவில் வார்த்தை போர் இல்லை.
மரியாதை இல்லை:
ஆஸ்திரேலிய அணியில் உள்ள ஒரு சில வீரர்களுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பேன். ஆனால் ஒரு சிலர் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை.
பின், அவர்களுக்கு நான் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும். தவிர நான் இங்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டுமே வந்துள்ளேன். மற்றவர்களிடம் இருந்து மரியாதை பெறுவதற்கு அல்ல.
நேற்றைய ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர் ரகானேவின் ஆட்டம் அருமையாக இருந்தது. எனக்கு பின் களமிறங்கிய இவர், முதலில் சதம் அடித்தது ஆச்சர்யம் அளித்தது.
தவிர இவர், ஜான்சன் வீசிய பந்துகளை எதிர்கொண்டவிதம் பாராட்டுக்குரியது. சிறந்த ‘பார்ட்னர்ஷிப்’ கிடைக்கும் போது எந்த ஒரு பவுலரையும் எளிதில் சமாளித்து விடலாம். அடுத்த முறை இதுபோல வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இரட்டை சதம் அடிக்க முயற்சிப்பேன்.
இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.
0 comments:
Post a Comment