ஹியுஸ் இறுதிச் சடங்கில் கோஹ்லி பங்கேற்பு

மறைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுசின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் கேப்டன் விராத் கோஹ்லி, இயக்குனர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.      

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன், இந்திய அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் (இரண்டு நாள்) பங்கேற்க இருந்தது. முதல் பயிற்சி போட்டி ‘டிரா’வில் முடிந்தது.                 
                   
உள்ளூர் போட்டியில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் இரண்டாவது பயிற்சி போட்டி ரத்து செய்யப்பட்டது. 

தவிர வரும் டிச., 4ல் பிரிஸ்பேனில் துவங்க இருந்த முதல் டெஸ்ட் போட்டியும் தேதி குறுப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.      

இந்நிலையில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த மூன்று நாட்களாக அடிலெய்டில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஹியுஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். 

தவிர நேற்று முன்தினம் கோஹ்லி, தனது பேட் மற்றும் தொப்பியை அடிலெய்டு ஓவல் மைதானத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த ஹியுசுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் வைத்தார். இன்று இந்திய வீரர்கள் அனைவரும் பயணத்திட்டத்தின் படி பிரிஸ்பேன் செல்கின்றனர்.     

ஹியுசின் இறுதிச் சடங்கு வரும் டிச., 3ல் அவரது சொந்த ஊரான மேக்ஸ்விலியில் நடக்கவுள்ளது. இதில், இந்தியா சார்பில் கேப்டன் விராத் கோஹ்லி, இயக்குனர் ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இந்திய அணியின் மானேஜர் அர்ஷாத் அயுப் பங்கேற்க உள்ளனர். 

இவர்களுடன் மூன்று அல்லது நான்கு இந்திய வீரர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு, பிரிஸ்பேனில் இன்று முடிவு செய்யப்படும்.

0 comments:

Post a Comment