இந்திய டெயிலெண்டர்கள் ஏமாற்றம் - முன்னிலை பெற்றது ஆஸி

இந்திய அணியின் ‘டெயிலெண்டர்கள்’ ஏமாற்ற, முதல் இன்னிங்சில் 444 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி 73 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 517/7 ரன்னுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 369 ரன்கள் எடுத்து, 148 ரன்கள் பின்தங்கி இருந்தது.

ரோகித் சர்மா (33), சகா (1) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டதை சரிக்கட்டும் வகையில் அரைமணி நேரம் முன்னதாக, நான்காவது நாள் போட்டி துவங்கியது. 

முதல் 10 ஓவர்கள் தாக்குப்பிடித்த ரோகித், சகா ஜோடி நிதான ரன்குவிப்பை வெளிப்படுத்தியது. இந்நிலையில் லியான் சுழலில் தேவையில்லாமல் அடித்து ஆட முற்பட்ட ரோகித் சர்மா (43), விக்கெட் சரிவைத் துவக்கி வைத்தார்.

அடுத்து வந்த கரண் சர்மா (4) நிலைக்கவில்லை. சகா 25 ரன்னுடன் கிளம்பினார். வந்த வேகத்தில் இஷாந்த் சர்மா (0), லியான் சுழல் வலையில் சிக்கினார்.

கடைசி நேரத்தில் ஆவேச ரன்குவிப்பை வெளிப்படுத்தினார் முகமது ஷமி (34). இவரது அதிரடி கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

வருண் ஆரோன் (3) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் லியான் 5 விக்கெட் சாய்த்தார்.


ஆஸி., முன்னிலை:

முதல் இன்னிங்சில் பெற்ற 73 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளையின் போது, ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்து, 105 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வார்னர் (13), ரோஜர்ஸ் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment