சென்னை அணியை நீக்கலாம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி

பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். 

அணியின் உரிமையாளர்கள்  விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம் பெற்றவர்கள் பி.சி.சி.ஐ., தேர்தலில் இருந்து விலகி இருக்க வேண்டும்,’ என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராகும் சீனிவாசனின் கனவு தகர்ந்தது.                 
              
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) நடந்த ‘ஸ்பாட் பிக்சிங்’ எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் குழு, தனது 35 பக்க இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.      
                                                                               
இதில் குற்றம் சுமத்தப்பட்ட 13 பேரில், வீரர்களை தவிர்த்து 4 பேரின் செயல்பாடு குறித்த விவரத்தை மட்டும் கோர்ட் வெளியிட்டது. இதன் மீதான விசாரணை தற்போது நடக்கிறது. இதில், பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன் மீது கடுமையான கருத்துக்களை, கோர்ட் தெரிவித்தது.                               
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கலிபுல்லா ஆகியோர் அடங்கிய ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் தான் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் என முத்கல் குழு அறிக்கையில் குறிப்பிட்டதை ஏற்கிறோம்,’ என, பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.        
                                         
இதுகுறித்து ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ கூறியது:     
                         
பி.சி.சி.ஐ., விதிமுறைப்படி, சென்னை அணி பல முறைகேடுகளில் ஈடுபட்டது முத்கல் அறிக்கையில் அம்பலமானது. இதுவே போதுமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல் சென்னை அணியை தகுதிநீக்கம் செய்யலாம். சீனிவாசனுக்கு முக்கியமானது அவரது தலைவர் பதவியா அல்லது சென்னை அணியா? 

இவர், ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருப்பது தெளிவாகிறது. சென்னை அணியை வாங்க ரூ. 400 கோடி முதலீடு செய்வது என்ற முடிவை எடுத்தது யார்?, சென்னை அணி மற்றும் சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் இயக்குனர்கள் தொடர்பான விவரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். 

குருநாத்திற்கு தொடர்பு இல்லை என்றால், அணியின் உரிமையாளர் யார்? வீரர்களை தேர்வு செய்தது கம்பெனியா? அணியை கட்டுப்படுத்தியது யார் என்பது போன்ற விவரங்களை அறிய விரும்புகிறோம். திட்டமிட்டபடி வரும் டிச.17ல் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பொதுக்குழுவை நடத்தலாம். 

புதிதாத தேர்தல் நடத்தி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யலாம். இதில், முக்கல் குழுவில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் இடம் பெறக் கூடாது.        
                      
இவ்வாறு ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ தெரிவித்தது.     
                         
இவ்வழக்கின் அடுத்தகட்ட  விசாரணை வரும் டிச.1ல் நடக்கும்.                              

சென்னைக்கு ஆபத்து: 

ஐ.பி.எல்., தொடர் விதிமுறைப்படி, அணி உரிமையாளர்கள் ‘பெட்டிங்’, ‘பிக்சிங்’ செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. இதை மீறும் பட்சத்தில் அந்த அணி தொடரில் இருந்து நீக்கப்படும். 

முத்கல் அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் ‘பெட்டிங்கில்’ ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் என, பி.சி.சி.ஐ., தற்போது கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளது. தையடுத்து, சுப்ரீம் கோர்ட் கருத்துப்படி  சென்னை அணி, ஐ.பி.எல்., தொடரில் இருந்து விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முத்கல் அறிக்கையில் சீனிவாசன் பெயரும் இடம் பெற்றிருப்பதால், அவர் மீண்டும் பி.சி.சி.ஐ., தேர்தலில் போட்டியிட முடியாது. மொத்தத்தில் சீனிவாசனுக்கு இரட்டை ‘அடி’ விழுந்துள்ளது.

0 comments:

Post a Comment