காம்ப்ளி கருத்து - பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

உலக கோப்பை போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்ற காம்ப்ளியின் கருத்து முட்டாள்தனமானது. இதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.

கடந்த 1996ல் உலக கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் நடந்தது. இத்தொடரில் கோல்கட்டாவில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி, 50 ஓவரில் 251/8 ரன்கள் எடுத்தது.

பின் களமிறங்கிய இந்திய அணி 98 ரன்னுக்கு ஒரு விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்து, பின் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் என தடுமாறியது. இதனால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், கற்களை கொண்டு எறிந்தனர். இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டு, இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.


திடீர் புகார்:

இந்த போட்டி குறித்து அப்போது களத்தில் இருந்த வினோத் காம்ப்ளி கூறுகையில்,"" இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் ஏதோ நடந்துள்ளது. இதனால் தான் இந்திய வீரரகள் வரிசையாக அவுட்டாகினர். இது அதிர்ச்சியாக இருந்தது,'' என, திடீரென 15 ஆண்டுகள் கழித்து இப்போது தெரிவித்துள்ளார்.


பி.சி.சி.ஐ., எதிர்ப்பு:

காம்ப்ளியின் இந்த கருத்துக்கு பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,"" இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒருவேளை பிரச்னை இருந்தது என்றால், இதை அவர் இத்தனை ஆண்டுகாலமாக தெரிவிக்காதது ஏன்.

இவரது கருத்து முட்டாள்தனமானது. இதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. இதற்கு யாரும் முக்கியத்துவம் தரவேண்டாம்,'' என, தெரிவித்துள்ளது.


அசார் எதிர்ப்பு:

இதனிடையே காம்ப்ளி கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசார் கூறியது:

காம்ப்ளி என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். அவருடைய இந்த செயல் முட்டாள்தனமாக உள்ளது. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இது போன்ற செயலில் இறங்குவது நல்லதல்ல.

இவரது செயல், அப்போது அணியில் விளையாடிய அனைத்து வீரர்களையும் இழிவு படுத்துவதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது. "மேட்ச் பிக்சிங்' நடந்திருப்பதற்கு ஒரு போதும் வாய்ப்பில்லை.


தோல்விக்கு காரணம்:

போட்டியின் போது, பேட்டிங் தேர்வு செய்வதா அல்லது பீல்டிங் செய்வதா என்பது அனைத்து வீரர்களின் முன்னிலையில் தான் முடிவு எடுக்கப்படும். அப்போது காம்ப்ளி தூங்கி கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை.

அந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு எங்களின் மோசமான ஆட்டம் தான் காரணம். "டாஸ்' வென்று பீல்டிங் எடுத்தது தான் காரணமல்ல. "மேட்ச் பிக்சிங்' குறித்து ஆதராம் எதுவும் இருந்தால் அதனை தாராளமாக இவர் வெளியிடலாம்.

இவ்வாறு அசார் கூறினார்.

0 comments:

Post a Comment