இந்தியாவின் முன்னணி முதல்தர தொடரான, ரஞ்சி கோப்பை தொடர் இன்று துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் தமிழக அணி, பரோடாவை சந்திக்கிறது.
இந்தியாவின் முதல் தர போட்டிகளில் முதலிடத்தில் உள்ளது ரஞ்சிக்கோப்பை தொடர். 1934 முதல் நடந்து வரும் இத்தொடரின், 77 வது சீசன் (2011-12) இன்று துவங்குகிறது.
இந்தியாவின் முன்னணி நகரங்கள், மாநிலங்கள் அடிப்படையில் அணிகள் சூப்பர் லீக், பிளேட் லீக் என இரு பிரிவுகளாக பிரித்து, போட்டிகள் முதலில் லீக் அடுத்து "நாக் அவுட்' முறையில் நடக்கும்.
சூப்பர் லீக் "ஏ' பிரிவில் மும்பை, நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் உட்பட 8, "பி' பிரிவில் தமிழகம், டில்லி உட்பட 7 என, மொத்தம் 15 அணிகள் உள்ளன. இதேபோல, பிளேட் பிரிவின் இரு பிரிவுகளில் தலா 6 அணிகள் உள்ளன.
போட்டி எப்படி:
சூப்பர் லீக்கின் இரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள், காலிறுதிக்கு முன்னேறும். பிளேட் லீக்கின் "ஏ' பிரிவில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், "பி' பிரிவின் முதல் இரு அணிகளும் மோதும் போட்டிகளில் வெல்லும் இரு அணிகள், காலிறுதிக்கு தகுதி பெறும்.
தமிழகம்-பரோடா:
கடந்த தொடரில் அரையிறுதியில் ராஜஸ்தானிடம் மோதிய தமிழக அணி, முதல் இன்னிங்சில் பின்தங்கியதால், பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.
இம்முறை சென்னையில் துவங்கும் லீக் போட்டியில், இதுவரை இரு முறை (1954-55, 1987-88) மட்டுமே கோப்பை வென்ற தமிழக அணி, பரோடாவை எதிர்த்து களமிறங்குகிறது. கேப்டன் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த், முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த், பாலாஜி ஆகியோர் நம்பிக்கை தருவார்கள் என்று நம்பலாம்.
மற்றொரு போட்டியில் 39 முறை கோப்பை வென்ற மும்பை அணி, இம்முறை கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.
இன்றைய முதல் லீக் போட்டியில் மும்பை, ரயில்வேஸ் அணியை சந்திக்கிறது. பிற போட்டிகளில் கர்நாடகம்-ராஜஸ்தான், டில்லி-அரியானா அணிகள் மோதுகின்றன.
0 comments:
Post a Comment