டில்லி டெஸ்டில் சச்சின் தனது நூறாவது சதத்தை அடித்து, சாதனை படைப்பார் என்று நம்பிக்கை உள்ளது. சர்வதேச டெஸ்ட் அரங்கில் மீண்டும் முதலிடத்தை பெறுவதற்கான முயற்சியை துவங்கி விட்டோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், இன்று துவங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், இத்தொடரில் இந்திய அணி சாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தவிர, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின், 100 சர்வதேச சதம் குறித்தும், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியது:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் துவக்கம் சிறப்பாக அமைய வேண்டியது முக்கியம். அடுத்து இத்தொடர் முழுவதும் நன்கு செயல்பட வேண்டும். இதை எப்படி செய்வது என்று திட்டமிட்டு வருகிறோம். இந்த டெஸ்டில், சச்சின் தனது 100 வது சதத்தை அடிப்பார். அது இங்கு நடக்கும் என்று நம்புகிறேன். இல்லை என்றால் அடுத்த போட்டியில் எடுப்பார். அவர் சாதனை சதத்தை எட்டியவுடன், சிறப்பாக கொண்டாடுவோம்.
இரண்டு அறிமுகம்:
இத்தொடருக்கான பயிற்சியின் போது யாரும் காயமடையவில்லை. அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் தயாராக உள்ளனர். இன்றைய போட்டியில் இரு வீரர்கள் புதியதாக அறிமுகம் ஆக உள்ளனர். இது யாரென்று பொறுத்திருந்து பாருங்கள்.
ராகுல் சார்மாவைப் பொறுத்தவரையில், உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவர் ஒருவர் மீது மட்டும் நாங்கள் கவனம் செலுத்த போவதில்லை.
சிறந்த அணி:
வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவான அணி தான். எங்கள் அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர் என்பதற்காக, அவர்களை எளிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில், வங்கதேசத்துக்கு எதிரான தொடரை வென்று திரும்பியுள்ளனர்.
இந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷு, நன்கு செயல்படுகிறார். மேலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் உள்ளனர். மொத்தத்தில் இத்தொடர் சிறப்பானதாக இருக்கும்.
முடிந்து போனது:
இங்கிலாந்துக்குக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அடைந்த தோல்விக்கு காயம் தான் முக்கிய காரணம். ஆனால், இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதான். இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. மூன்றரை மாதத்துக்கு முன் அப்படி நடந்து விட்டது. இந்நிலையில் இப்போது அது குறித்து நான் ஏன் பேசவேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் கவனம் செலுத்துவோம்.
திருப்பம் ஏற்படும்:
டில்லி ஆடுகளம் நல்ல முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அடுத்தடுத்த நாட்களில் பவுலிங்கில் திருப்பம் ஏற்படும் என்று நினைக்கிறேன். எங்கள் பவுலர்கள் மூன்றாவது நாளில் இருந்து அதிகமாக பந்தை சுழற்றலாம். இது எந்தளவுக்கு இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
மீண்டும் முயற்சி:
எங்களை பொறுத்தவரையில் "நம்பர்1' அணியாக இருக்க விரும்புகிறோம். ஆனால் முதலிடத்தில் இருந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், "ரேங்கிங்' தானாகவே போய்விடும். அதை வைத்துக்கொண்டிருக்க முடியாது.
நாங்கள் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் முதலிடத்தை இழந்து விட்டோம். மீண்டும் முதலிடத்தை பெறுவதற்கான வேலையை துவங்கி விட்டோம். இது இத்தொடரில் இருந்து துவங்குகிறது. இவ்வாறு தோனி கூறினார்.
0 comments:
Post a Comment