ஹர்பஜனுக்கு மீண்டும் கல்தா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் இல்லை. "சீனியர்' வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு, மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இப்போட்டியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனுக்கு பதிலாக, அஷ்வின், பிரக்யான் ஓஜா இடம் பெற்றனர். முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார் ஓஜா. அஷ்வின் ஒட்டுமொத்தமாக 9 விக்கெட் சாய்த்தார்.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டா ஈடன் காடன் மைதானத்தில் வரும் 14ம் தேதி துவங்குகிறது. வரும் 13ம் தேதி தமிழக வீரர் அஷ்வினுக்கு திருமணம் நடக்க இருப்பதால், இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல் போட்டியில் பங்கேற்ற அணியில் மாற்றம் எதுவுமில்லை என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாள் சென்னையில் திருமணம் செய்யும் அஷ்வின், அடுத்த நாள் கோல்கட்டா டெஸ்டில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இதனால், ஹர்பஜனுக்கு வாய்ப்பு இம்முறையும் கிடைக்கவில்லை.

"பார்ம்' இல்லாமல் தவிக்கும் ஹர்பஜன், கடந்த வாரம் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இதனால் இந்திய அணியில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,""வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இளம் வீரர்கள் அஷ்வின், பிரக்யான் ஓஜா சிறப்பாக செயல்பட்டனர்.

வேகத்துக்கு ஒத்துழைக்காத இந்திய ஆடுகளங்களில், உமேஷ் யாதவும் நன்றாகவே பவுலிங் செய்தார். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, இந்திய அணியின் செயல்பாடு நன்றாக இருந்தது. இதனால் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மாற்றம் செய்யவில்லை,''என்றார்.

0 comments:

Post a Comment