கிரிக்கெட்டுக்கு ஆபத்தா?

இந்திய மண்ணில் முதல் முறையாக நடந்த "பார்முலா-1' கார்பந்தயத்தால், கிரிக்கெட் போட்டிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது: இந்திய மண்ணில் முதல் முறையாக "பார்முலா-1' கார்பந்தயம் நடந்தது மகிழ்ச்சியான விஷயம். போட்டி துவங்கியது முதல், முடியும் வரை "திரில்'லாக இருந்தது. "பார்முலா-1' கார்பந்தயம் ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும்.
இந்தியா சார்பில் களமிறங்கிய "சகாரா போர்ஸ் இந்தியா' அணியை ஆதரத்து போட்டியை காண வந்தேன். இந்த அணியின் அட்ரியன் சுடில், சிறப்பாக செயல்பட்டு ஒன்பதாவது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் சாதிக்க முடியாமல் போனது ஏமாற்றமான விஷயம்.
"பார்முலா-1' வருகையால், இந்திய மண்ணில் கிரிக்கெட் போட்டிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. கிரிக்கெட் போட்டியின் புகழை, "பார்முலா-1' மூலம் குறைக்க முடியாது. இரண்டு வெவ்வேறு வகையை சேர்ந்தது. "பார்முலா-1' ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது.
காயம் காரணமாக, இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தமான விஷயம். தற்போது காயத்தில் இருந்து மீண்டு, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment